நேரத்தை வீணாக்காமல் உழைத்தால் நிச்சயம் சக்சஸ்தான்!
இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் செய்யாத வேலைகளே இல்லை. எங்கு பார்த்தாலும் பெண்கள் சாதனைகளை படைத்து வருகிறார்கள். அதிலும் கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு பல பெண்கள் தொழில்முனைவோராக மாறி வருகிறார்கள்.  அந்த வகையில் ஒரு அட்டகாசமான பெண்தான் அர்ச்சனா அன்பழகன். இவர் பிட்னெஸ் எக்ஸ்பர்ட் மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையில் புடவை பிசினஸும் செய்து அசத்தி வருகிறார்.‘‘நான் சென்னைப் பொண்ணு. படிச்சது எல்லாம் சென்னைதான்.
அக்காவிற்கு திருமணமாகிவிட்டது. இப்போது அம்மா, நான், தம்பிதான் இருக்கிறோம். அப்பா தவறிட்டாங்க. அதனால் குடும்பச்சுமை என் மேல் விழுந்தது” என்று பேசத் துவங்கினார் அர்ச்சனா. நேரத்தை வீணாக்கும் மற்றவர்களுக்கு மத்தியில், தனக்கு கிடைக்கும் வேலையை சாதகமாக பயன்படுத்தி ஒன்றுக்கு பல வேலைகளை செய்து வருமானம் ஈட்டி குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார் இவர்.  ‘‘பொறியியல் முடிச்சேன். அதன் பிறகு என்ன வேலை செய்றதுன்னு தெரியாம ஒரு குழப்பத்தில் வீட்டிலேயே இருந்தேன். அந்த சமயத்தில்தான் தெரிஞ்சவங்க மூலமா ஜிம் ஒன்றில் அட்மின் வேலை கிடைச்சது. அந்த வேலையில் சேர்ந்தேன். 
காரணம், குடும்பச்சூழல். ஏதாவது ஒரு வகையில் வருமானம் பார்க்க வேண்டும். ஜிம்மில் அட்மின் வேலை என்றாலும் அங்கேயே ஃபிட்னெஸ் குறித்து பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். அதன் பிறகு ஜிம்மிற்கு வருபவர்களுக்கு நான் ஃபிட்னெஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். என்னிடம் பயிற்சி எடுத்தவர்கள் தனிப்பட்ட முறையில் பயிற்சி அளிக்க சொல்லி கேட்டாங்க.  ஜிம்மில் வேலைப் பார்த்துக் கொண்டு தனிப்பட்ட பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். ஒருவர் சொல்லி மற்றொருவர் என என்னைத் தேடி வாடிக்கையாளர்கள் வர ஆரம்பிச்சாங்க. அவர்களின் வீட்டிற்கு சென்று உடற்பயிற்சி கற்றுக் கொடுத்தேன். தற்போது, ஃபிட்னெஸ் துறையில் ஏழு வருடமாக வேலை பார்த்து வருகிறேன். 
சின்ன வயசுல இருந்து ரன்னிங், லாங் ஜம்ப், ஷாட்புட் இப்படி எல்லா விளையாட்டிலும் பங்கேற்று முதல் பரிசு வாங்குவேன். விளையாட்டு ஆர்வம் என்னோட சிறு வயதிலே இருந்த ஆர்வம்னும் கூட சொல்லலாம். ஆனா, நான் பிட்னெஸ் துறையில் வருவேன்னு எதிர்பார்க்கல. நிறைய பெண்களுக்கு ஜிம்முக்கு நேரடியாக செல்ல முடியாத சூழ்நிலை இருக்கிறது.
ஆனால் அவர்களுக்கு தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அவர்களுக்காக வீட்டிற்கே சென்று ஃபிட்னெஸ் பயிற்சி அளிக்கிறேன். அதில் உடல் எடை குறைப்பு, தசை வலு, ஸ்ட்ரெச்சிங் போன்ற பயிற்சிகளும் கற்றுத் தருகிறேன். மற்றவர்களின் உடல் நலம் என் மூலமாக ஆரோக்கியமாக இருப்பதில் எனக்கு சந்தோஷம்தான்’’ என்று கூறும் அர்ச்சனா ஃபிட்னெஸ் மட்டுமில்லாமல் புடவை பிசினசும் செய்து வருகிறார். ‘‘ஃபிட்னெஸ் வேலையை எனக்குப் பிடித்த மாதிரி அமைத்துக் கொண்டாலும் கிடைக்கும் நேரத்தில் வேறு ஏதாவது பிசினஸ் செய்யலாம்னு எண்ணம் தோன்றியது. என் குடும்பத்தில் யாரும் தொழிலில் ஈடுபட்டது கிடையாது. அதனால் எளிதாகவும் அதே சமயம் பெண்கள் எப்போதும் ஆதரவு தரக்கூடிய பிசினஸ் என்னவென்று பட்டியலிட்டேன். அதில் என்னோட முதல் சாய்ஸ் உடையாகத்தான் இருந்தது.
பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே எனக்கு புடவைக் கட்ட பிடிக்கும். அந்த விருப்பம்தான் என்னுடைய பிசினசாக மாறியது. பலரும் ஆன்லைனில் புடவை பிசினஸ் செய்து வருகிறார்கள். அவர்கள் எப்படி செய்கிறார்கள், என்ன மாதிரியான புடவைகளை மக்கள் விரும்புகிறார்கள் என்று ஆறு மாதம் ஆய்வு செய்தேன்.
புடவை பிசினஸ் செய்பவர்களை தொடர்பு கொண்டு அவர்களிடம் ஆலோசனையும் பெற்றேன். அதன் பிறகு சேலம், திருச்சி, ஈரோடு, பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று அங்கு தனித்துவமாக புடவை தொழில் செய்பவர்களை சந்தித்தேன். அப்போது என்னிடம் போதிய பணம் இல்லை.
அதனால் வங்கியில் கடன் பெற்று இந்தத் தொழிலை ஆரம்பித்தேன்.என்னிடம் இருக்கும் புடவைகள் மற்றவர்களிடம் இருக்கக்கூடாது என்று ஒவ்வொரு புடவையையும் மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்தேன். அனைத்து வகையான காட்டன், பட்டு, கைத்தறி என பலவிதமான புடவைகள் என்னிடம் உள்ளது.
புடவை பிசினசில் தரம் ரொம்ப முக்கியமானது. விலை குறைவாக இருந்தாலும் அதன் தரம் குறையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முதலில் ‘மெட்ராஸ் வீவ்ஸ்’ என்ற பெயரில் கடையை திறந்தேன். ஆனால் பிசினசில் சில பிரச்னைகள் ஏற்பட்டதால் கடையை மூடிட்டேன். இப்போது அதே பெயரில் முழுக்க முழுக்க ஆன்லைனில் விற்பனை செய்கிறேன்.
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் சிலர் அது பற்றி யோசித்துக் கொண்டே காலத்தை கடத்திடுவாங்க. அப்படி இல்லாமல் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி முதல் அடி எடுத்துவையுங்க.
அதன் பிறகு அனைத்தும் தன்னால நடக்கும். இந்த வேலையை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக வெற்றிக் கொடியை நாட்ட முடியும். ஃபிட்னெஸ், புடவை பிசினஸ் என இரவு, பகலாக உழைத்து வருகிறேன். நேரத்தை வீணாக்காமல் உழைத்தால், நாம் நினைத்தது நினைத்த படி நடக்கும்’’ என்கிறார் அர்ச்சனா.
ஆனந்தி ஜெயராமன்
|