நம்மைச் சூழ்ந்திருக்கும் முள்வேலிகள்!



பாலின பேதங்கள் ஒரு பார்வை

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் இந்த நாள் ‘சர்வதேச மகளிர் தினம்’ என்று கொண்டாடப்படுகிறது. திடீரென கண்டவர்கள், காணாதவர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என பல திசைகளிலிருந்தும் வாழ்த்து மழைகள் நேற்றிலிருந்தே பொழியத் துவங்கி இந்த நிமிடம் வரை விடாமல் பொழிந்து கொண்டிருக்கிறது. 
மகளிர் தினம் கொண்டாடுவதில் ஒரு பிரச்னையும் இல்லை. ஆனால் அன்று மட்டும் கொண்டாடிவிட்டு மீண்டும் ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையாக ஒடுங்கிக்கொள்வதற்கு எதற்கு இந்த ஒருநாள் கொண்டாட்டம் மட்டும் என்பதே எனக்கு பெரிய கேள்வியாக நிற்கிறது.

சமீபமாக ஒரு பெண்ணை ஒரு விழாவில் சந்தித்த போது அவர் மிகவும் சாதாரணமாக சொன்னார். “என் கணவர் மகளிர் தினத்துக்கு எனக்கு என்ன பரிசு வேண்டுமென கேட்டார். இன்னையிலேந்து உங்களுக்கு தண்ணி வேணும்னா நீங்களே எடுத்துக் குடிச்சிக்கங்க. அதுவே எனக்கு நீங்க குடுக்குற பெரிய பரிசுதான்னு சொன்னேன்...” இந்த நிலையைத்தான் அத்தனை போராட்டங்களுடன் உழைக்கும் மகளிர் நாளாக பல்லாண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட நாள் அடைந்திருக்கிறது இன்று. மனைவியின் பிறந்தநாள் போல் இதுவும் ஒருநாள்.

என்று அறிவுப்பூர்வமாக சிந்தித்து செயல்படுத்தி, தன்னைத்தானே ஓர் ஆணின் அங்கீகாரத்திற்காக காத்திருக்காமல், நானும் முதல் தர பிரஜை தான் இரண்டாம் இடத்தில்  இல்லை என உணர்ந்து ஒவ்வொரு பெண்ணும் தன்னைத்தானே முன்னிறுத்திக் கொள்கிறாளோ அன்றுதான் இந்த மகளிர் தினம் வெறும் பரிசு தரும் நாளாக இல்லாமல் மாற்றத்தை விதைக்கும் நாளாக உருப்பெறும்.

இன்று வந்த மகளிர் வாழ்த்து செய்திகளே இன்னும் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. “மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் புரிந்திருக்க வேண்டும்”, “பெண் என்பவள் கருணை மிக்கவள், பொறுமை மிக்கவள், அவள் இல்லையெனில், குடும்பம் இல்லை” இப்படியெல்லாம் அவளை பீடத்தில் ஏற்றி வைத்தே தான் வாழ்த்துகள் வருகின்றன. 

ஏன் ஆணாய் பிறந்தவர்கள் தவம் செய்யாமல் பிறந்திருக்க, அவர்களுக்கு சேவகம் புரிவதற்காகவே மாதவம் செய்து பெண்கள் பிறக்க வேண்டும்? அத்தனை முட்டாள்களா பெண்கள்? ஆனால் அப்படி முட்டாள்களாக பாவித்து தானே பெண்ணை தெய்வம் என்றும், பூமி என்றும், மலர் என்றும் வர்ணித்து அவள் அவ்வார்த்தைகளிலேயே மயங்கி விழுந்து இன்னும் எழுந்திருக்காமல் இருக்கிறாள்?

கொண்டாட்டங்களில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வத்திற்கு தீனியாகத்தான் இங்கு மத சம்பந்தப்பட்ட பண்டிகைகள் அத்தனை உண்டாக்கி வைத்திருக்கிறார்களே? அது போதாதென்று தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட நாளையும் இவர்கள் கொண்டாடி மட்டுமே தீர்ப்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது. 

இன்றைய நிலை எப்படி இருக்கிறதென்றால், வருடம் முழுக்க எங்கள் இலக்கணப்படி வாழ்ந்துவிடு, நீ எங்களுக்காக செய்யும் தியாகங்களுக்கு ஈடாக நாங்கள் வருடத்தில் ஒருநாள் உங்களை நீங்களே கொண்டாடிக்கொள்ள அனுமதிக்கிறோம். 

கொண்டாடித் தீர்த்துவிடு என்பது போல்தான் இருக்கிறது. ஆண்களும் பெண்களும் சேர்ந்து வேலை செய்யும் அலுவலகங்களில் கூட, பொதுவாக இனிப்புகளும், பூக்களும்தான் கொடுக்கப்படுகிறது. ஏன் பெண்களுக்கு எப்பொழுதும் பூக்கள் கொடுக்கப்படுகிறது?

அது ஏன் பொதுவாக ஆண்களுக்கு கொடுக்கப்படுவதில்லை? ஏனெனில் பெண் என்பவள் மலருக்கு ஈடானவள். மென்மையானவள், சுகந்தம் வீசுபவள். ஏன் ஒரு புத்தகம் கொடுக்கலாமே?  “பெண் ஏன் அடிமையானாள்” போன்ற புத்தகங்களை ஒரு வாசிப்பாக முன்னெடுக்கலாமே? நீ பூ வை, பொட்டு வை, புடவை கட்டு, முடியை நீளமாக வளர்த்துக்கொள்... 

இவைதான் பெண்ணின் இலக்கணங்கள் என்று நேரடியாக கூற முடியாத இடங்களில், இவையெல்லாம் செய்தால் நீ எத்தனை அழகாக இருக்கிறாய் தெரியுமா என்று வேப்பிலை அடிப்பது. புகழில் மயங்காத மனிதரே கிடையாது எனும் போது, தன் அழகு புகழப்படும் போது மயங்காத பெண்கள் மிகவும் குறைவுதானே!   ஆடுறா ராசா ஆடுறா ராசா என்று அன்பாக அழைத்து குரங்குகளை ஆட்டிவைப்பது தான் நடக்கிறது இங்கும்.

பெண்கள் தினம் ஏற்பட்டதின் அடிப்படையையே மறந்து, அடுப்படியில் கூலியில்லாத சமையல்காரம்மாவாய் வெந்துகொண்டே, பிள்ளைகளின், கணவரின் ‘மகளிர் தின” வாழ்த்துகளுக்கு நன்றி கூறிக்கொண்டிருக்கும் பெண்களுக்கும், தன் வீட்டுப் பெண்களை சக மனிதர்களாக மதிக்காமல், வெளியில் இருக்கும் பெண்களுக்கு ‘மகளிர் தின’ வாழ்த்துகள் கூறிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கும் இந்த மகளிர் தினத்தின் அவசியமென்ன? காரணத்தை குழி தோண்டி புதைத்துவிட்டு, காரியத்தில் மட்டும் கண்ணாக இருக்கிறார்கள்.

இங்கு பேதங்களை ஏற்படுத்தும் ஒவ்வொரு சிறு காரியமும் கவனிக்கப்பட்டு உடைத்தெரியப்பட வேண்டும். மதங்களும், அதுசார்ந்த சம்பிரதாயங்களும் உடையும் வரை இங்கு பெரிய மாற்றங்களுக்கு ஆண்கள் என்ன, பெண்களே தயாராக மாட்டார்கள். ஒரே ஓர் உதாரணம் போதும். சுய மரியாதை திருமணங்கள் தவிர்த்து, தமிழ்த் திருமணம் என்று சொல்லிக்கொள்ளும் திருமணங்களில் கூட தாலி கட்டுகிறார்கள்தானே?

பெண்களின் சுதந்திரம் குறித்து மேடையில் முழங்கும் பெண்களில், எத்தனை பேர் தாலி கட்டிக்கொள்வதற்கு மறுப்பு தெரிவித்து, கட்டிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்? சரி ஏதோ அறியா வயதில் கட்டிக்கொண்டோம், இன்று நான் தெளிந்திருக்கும் நிலையில் எனக்கு இது அவசியமில்லை என்று கழற்றியிருக்கிறார்கள்?

பெண் விடுதலை பேசும் ஆண்களில் எத்தனை பேர் நான் தாலி கட்ட மாட்டேன் என்று மறுக்கிறார்கள்? தாலி அவசியமா என்று ஒரு கேள்வியை முன்வைத்தாலே இங்கு பல ஆண்களின் மனது காயப்படுகிறது. அவர்கள் கட்டும் தாலியில்தான் அவர்களின் உயிரே ஊசலாடிக் கொண்டிருப்பது போல் ஒரு பதட்டம்தான் இங்கு நிலவுகிறது.

எத்தனை முற்போக்கு பேசினாலும், எத்தனை பெண் விடுதலை பேசினாலும், மூடநம்பிக்கைகளில் மூழ்கிப்போய், மூதாதையரின் சாபம், தெய்வ குத்தம், அந்த நாலு பேரின் பேச்சு என்று எதையாவது காரணம் காட்டி, இன்னும் பழமையிலேயே ஊறிக்கொண்டிருக்கும் மனங்கள் இங்கு நடமாடிக்கொண்டிருக்கும் வரை எங்கிருந்து சமத்துவம் பிறக்கும்? 

பாலின பேதங்கள் எங்கு தொலையும்? ஏன் ஒரே பாலினத்தவரால் ஈர்க்கப்பட்டு திருமணம் செய்யும் இணையர்கள் கூட அதில் ஒருவர் இன்னொருவருக்கு தாலி கட்டவோ இல்லை தான் கட்டிக்கொள்ளவோதான் விரும்புகிறார்கள் (சில திருமணங்களில் சமத்துவம் நிலைநாட்ட இருவரும் கட்டிக்கொள்கிறார்கள்).

எந்த மதத்தை எடுத்தாலும், பெரும்பாலும் அவை பெண்களை ஒரு படி கீழே வைத்துதான் பேசுகின்றன என்னும் போது, அவை ஏற்படுத்தியிருக்கும் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மட்டும் எப்படி இருக்கும்? அப்படியிருக்க நம் சமுதாயத்தில் பாலின பேதங்கள் கலைக்கப்பட வேண்டுமானால், இந்த மத போதனைகளில் இருந்தும், அவை ஏற்படுத்தி வைத்திருக்கும் சம்பிரதாயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் என எல்லாவற்றிலிருந்தும் வெளிவந்தே தீரவேண்டும். 

அது நடைபெறாத வரை, பெரிதாக மாற்றங்கள் வர வாய்ப்பில்லை. ஆண்களின் நலனுக்கு, ஆண்களின் ஆயுளுக்கு என்று பல பண்டிகைகளை கொண்டாடிக் கொண்டிருக்கும் பெண்கள், தன் நலத்திற்கு... தன் ஆயுளுக்கு என்று சிந்திக்கத் தொடங்க வேண்டும்.

ஏசுவதற்கு ஏற்பட்ட கெட்ட வார்த்தைகள் அத்தனையும் பெண்ணை குறிவைத்தே இருக்கின்றன. ஓர் ஆணை ஏசுவதற்கு கூட அவனின் தாயை குறித்து பேசியே ஏசப்படுகிறான். ஏசுவதை விடுங்கள். ஒரு பெண் தன் கணவனை இழந்துவிட்டால் அவள் விதவை... விதவன் என்றொரு வார்த்தை இருக்கிறதா ஆணுக்கு? யாரோ நிர்ணயித்த ஒரு வயதுக்குள் திருமணம் நடக்காவிட்டால் ஒரு பெண் ‘முதிர்கண்ணி’ ஆகிறாள்.

‘முதிர்கண்ணன்’ என்றொரு வார்த்தை இருக்கிறதா? ஆனால் நல்ல விஷயங்களுக்கெல்லாம் ஆணுக்கு வார்த்தைகள் உண்டு. பெண்ணுக்கு இல்லை. ‘எழுத்தாளர்’ என்றால் அது பொதுவாக இங்கு எல்லா பாலாரிலும் எழுதுபவரைத்தானே குறிக்க வேண்டும்? ஆனால் இங்கு ஒரு பெண் எழுதினால் பெண் எழுத்தாளர் என்ற அடைமொழியுடன்தான் அழைக்கப்படுவார். அப்படி பிரித்துக் காட்ட வேண்டுமெனில், ஆண் எழுத்தாளர் என்று சொல்லட்டுமே.

அவர் இவர் என்றால் அது ஆண், பெண் தாண்டி ஒரு மனித குலத்தைச் சேர்ந்தவரை குறிக்க வேண்டும். அவ்வளவே. ஆனால் இங்கு அவர், இவர் என்றால் அது பொதுவாக ஆணை மட்டுமே குறிக்கும். மற்றவருக்கு அது அவரின் பாலினத்துடன் சேர்த்துதான் சொல்ல வேண்டும்.  இப்படியாக பல பேதங்களின் நடுவே தான் நாம் பாலின பேதங்களை களையப் போராடிக் கொண்டிருக்கிறோம்.

(தொடர்ந்து சிந்திப்போம்!)