டாக்டர் to இல்லத்தரசிகளுக்கான அழகியல் பயிற்சி!
மேக்கப்... பெண்களின் அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டது. அதிகப்படியாக இல்லை என்றாலும், ஃபவுண்டேஷன், கண்மை, லிப்ஸ்டிக் இல்லாமல் பெண்கள் வீட்டை விட்டு வௌியே செல்வது இல்லை. மேக்கப்பினை நம்முடைய தேவைக்கு ஏற்ப பிரைடல், நைட் பார்ட்டி என அமைத்துக் கொள்ளலாம்.  மேக்கப் மூலம் குறிப்பிட்ட தருணம் மட்டுமே சருமத்தை பளபளப்பாக காண்பிக்க முடியும். வாழ்நாள் முழுதும் சருமம் பளபளப்பாகவும், வழுவழுப்பாகவும், வயது குறைந்த தோற்றத்தினை பெற அழகியல் சிகிச்சைகள் தீர்வாக அமைந்து வருகிறது. அப்படிப்பட்ட சிகிச்சை முறைகளுக்கு தனிப்பட்ட பயிற்சியினை அளித்து வருகிறார் சென்னை ஆவடியை சேர்ந்த அழகியல் நிபுணரான கன்னியம்மாள். 
சென்னை அண்ணாநகரில் ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி’ மையத்தினை நிர்வகித்து வரும் இவர், அங்கு அளிக்கப்படும் பயிற்சி முறைகள் மற்றும் சிகிச்சை மேற்கொள்வதினால் ஏற்படும் பலன்களை பற்றி விவரித்தார்.‘‘பிரபல தனியார் மருத்துவமனையில் ஸ்டாஃப் நர்சாக வேலை பார்த்து வந்தேன். குறிப்பாக லேபர் வார்டில்தான் எனக்கு டியூட்டி. சுகப்பிரசவம் முதல் சிசேரியன் வரை அனைத்தும் பார்ப்பேன்.
மருத்துவ துறை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு அழகுக் கலை மேல் ஆர்வம் இருந்தது. அதற்கான தனிப்பட்ட பயிற்சி எடுத்தேன். நேரம் கிடைக்கும் போது மேக்கப் துறையிலும் ஈடுபட ஆரம்பித்தேன். அந்த சமயத்தில் என் கணவருக்கு விபத்து ஏற்பட்டது. அவரின் உடல் நிலை சீராகும் வரை குடும்ப பொறுப்பினை நான் ஏற்றுக்கொண்டேன். அதனால் நர்சாக மட்டுமில்லாமல் ப்யூட்டீஷியனாகவும் வலம் வர ஆரம்பித்தேன்.
நான் வேலை பார்த்த மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கு ப்யூட்டி சர்வீஸ் செய்து வந்தேன். இதற்கிடையில் லேபர் வார்டில் மட்டுமில்லாமல் காஸ்மெட்டாலஜி துறையிலும் என்னுடைய மருத்துவ பணி தொடர்ந்தது. பிரஸ்ட் என்லார்ஜ்மென்ட், லைப்போ சக்ஷன் என காஸ்மெட்டாலஜி சார்ந்த சிகிச்சை முறைகளில் டாக்டருடன் இணைந்து செயல்பட்டேன். அதன் மூலம் காஸ்மெட்டாலஜியுடன் அழகியல் சார்ந்த துறையில் சிறப்பு பயிற்சி எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அழகுக் கலை மற்றும் மருத்துவம் சார்ந்த விஷயங்களிலும் அனுபவங்கள் இருப்பதால் இரண்டு துறைகளையும் இணைக்கக் கூடிய துறை என்ன என்று தேடிய போது எனக்கு கிடைத்த விடைதான் அழகியல் (Aesthetics). அதில் டிரைக்காலஜி மற்றும் காஸ்மெட்டாலஜியில் ஃபெல்லோஷிப் பயிற்சியினை மேற்கொண்டேன். மேலும் பெர்மனென்ட் மேக்கப் குறித்தும் கற்றுக் கொண்டேன்.
நான் கற்றுக் கொண்டதை மற்றவர்களுக்கும் தரமான முறையில் சொல்லித்தர விரும்பினேன். அதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘எலைட் எஸ்.ஆர்.எம் அழகியல் பயிற்சி மையம்’ ’’ என்றவர் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து விவரித்தார்.‘‘என்னுடைய பயிற்சி மையத்தில் மெடிக்கல், பாராமெடிக்கல் மற்றும் non மெடிக்கல் என மூன்று பிரிவுகளுக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறேன்.
மெடிக்கல் பிரிவில் எம்.பி.பி.எஸ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, எம்.டி.எஸ் போன்ற துறை சார்ந்த மருத்துவர்கள் மட்டும்தான் பயிற்சி பெற முடியும். இந்தப் பிரிவில் மட்டுமே ஏஸ்தெடிக் மெடிசன், ஏஸ்தெடிக் காஸ்மெட்டாலஜி, பெர்மனென்ட் மேக்கப் இன் காஸ்மெட்டாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரைகாலஜியில் ஃபெலோஷி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி, டிரைகாலஜியில் முதுகலை டிப்ளமா என ஏழு வகையான பயிற்சிகள் உள்ளன.
பாராமெடிக்கல் பிரிவில் காஸ்மெட்டாலஜியில் ஃபெலோஷிப், டிரைகாலஜி, கிளினிக்கல் காஸ்மெட்டாலஜி மற்றும் பெர்மனென்ட் மேக்கப்பில் அட்வான்ஸ்ட் மற்றும் டிப்ளமாவும், பெர்மனென்ட் மேக்கப் காஸ்மெட்டாலஜியில் முதுகலைப் பட்டப்படிப்பும் வழங்குகிறோம். இதனை லேப் டெக்னீஷியன், நர்ஸ் துறையில் இருப்பவர்கள், இயன்முறை மருத்துவர்கள், மருந்தாளர்கள் மேற்கொள்ளலாம்.
அதே போல் மருத்துவம் அல்லாதவர்களுக்கும் சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். அழகுக் கலை நிபுணர்கள், கல்லூரி மாணவிகள், பட்டப்படிப்பு முடித்தவர்கள், இல்லத்தரசிகளுக்கு பெர்மனென்ட் மேக்கப்பில் டிப்ளமோ மற்றும் தொழில்முறை சார்ந்த பயிற்சிகள் வழங்குகிறோம்.
ஒவ்வொரு படிப்பிற்கு ஏற்ப அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். உதாரணத்திற்கு மருத்துவ துறை சார்ந்தவர்களுக்கான ஃபெல்லோஷிப் அழகியல் படிப்பில் சருமம், தலைமுடி சார்ந்த சிகிச்சை முறைகள் குறித்து பயிற்சிகள் அளிக்கப்படும்.
அதாவது, சருமம் என்றால் அதன் வகை, அதன் செயல்பாடு என துவங்கி சருமத்திற்கான அனைத்து அழகியல் சிகிச்சைக்கான பாடத்திட்டங்கள் உள்ளது. அதே போல் தலைமுடிக்கும் தனிப்பட்ட பாடங்களை அமைத்திருக்கிறோம். சருமத்தை பொறுத்தவரை ஸ்கின் கண்டிஷனிங், கரும்புள்ளி, மீசோதெரபி, PRP, க்ளூதலோன், ஆன்டி ஏஜனிங், கெமிக்கல் பீலிங் போன்ற சிகிச்சைக்கான பயிற்சிகள் அளிக்கப்படும். அதே போல் தலைமுடிக்கு ஹை ப்ரீக்வென்சி, தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தி வளர்வதற்கான சிகிச்சைகள், ஸ்டெம் செல் தெரபி, மைக்ரோநீடிலிங், தலைமுடிக்கான PRP போன்றவற்றை சொல்லித் தருகிறோம். இவை தவிர டெர்மல் பில்லர்ஸ், திரெட் லிப்ட்ஸ், லேசர் சிகிச்சைகள், பாடி கான்டோரிங், பி.பி க்ளோ, கொரியன் கிளாசி, லிப் பிக்மென்டேஷன், மைக்ரோபிளேடிங் போன்ற பயிற்சிகளும் உள்ளது.
பாராமெடிக்கல் பயிற்சியில் மைக்ரோ பிளேடிங், மைக்ரோ பிக்மென்டேஷன், ஸ்கால்ப் பிக்மென்டேஷன், LED தெரபி, கரும்புள்ளி, ஆன்டி ஏஜனிங், மெலஸ்மா, டெர்மா ரோலர், கெமிக்கல் பீல், தலைமுடி மற்றும் சருமத்திற்கான லேசர் சிகிச்சைகள், கார்பன் பீல்ஸ், PRPயில் மைக்ரோபிளேடிங், தலைமுடிக்கு ஸ்டெம் செல் தெரபி, மருநீக்கம் ஹைட்ரா ஃபேஷியல், கொரியன் கிளாசி ஸ்கின், லிப் நியட்ரலைசேஷன், பெர்மனென்ட் ஸ்கால்ப் பிக்மென்டேஷன் போன்ற பயிற்சிகள் உள்ளன.
அழகுக் கலை நிபுணர்கள், இல்லத்தரசிகளுக்கு பெர்மனென்ட் மேக்கப்பில் மட்டுமே பயிற்சி அளிக்கிறோம். அதில் ஹைட்ரா ஃபேஷியல், சருமத்திற்கான அல்ட்ராசவுண்ட், பியூட்டி பீல்ஸ், மெடி ஃபேஷியல், புருவத்திற்கான மைக்ரோ பிக்மென்டெஷன், தலைமுடிக்கு மைக்ரோ நீடிலிங், தலைமுடிக்கான டெர்மா ரோலர், பிபி க்ளோ என பல வகை பயிற்சிகள் இதில் அடங்கும்’’ என்றவர் அழகியல் என்றால் என்ன? அதன் பலன்களையும் விவரித்தார். ‘‘அழகுக் கலை மற்றும் அறிவியலை இணைத்து இயற்கையான முறையில் ஒருவரின் சருமம் மற்றும் தலைமுடியினை அழகாகவும் ஆரோக்கியமாகவும் மாற்றி அமைப்பதுதான் அழகியல்.
சருமத்தில் உள்ள கொலாஜனை இயற்கை முறையில் ஊக்குவித்து சருமம் புதுப்பொலிவு பெறுவதுடன், young தோற்றத்தினை அளிக்க முடியும். தலைமுடி வளர்ச்சிக்கும் அழகியல் முறைகள் பலனை தரும். சிலருக்கு அடர்ந்த புருவங்கள் இருக்காது, அவர்கள் நிரந்தரமாக தங்களின் புருவத்தினை மைக்ரோபிளேடிங் மூலம் அடர்த்தியாக அமைத்துக் கொள்ளலாம்.
நிரந்தரமாக மேக்கப் சிகிச்சை மூலம் மேக்கப் இல்லாமலே மேக்கப் போட்டது போல் மாற்றி அமைக்கலாம். அழகியல்தான் இன்றைய எதிர்காலம் என்பதால் டாக்டர்கள் உட்பட பலரும் பயிற்சியினை எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதனாலேயே ஒருவரின் படிப்பிற்கு ஏற்ப பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம்.
அழகியல் பொறுத்தவரை அதற்கான பயிற்சி மையங்கள் நம்மூரில் இல்லை. அப்படியே இருந்தாலும், முறையான பாடத்திட்டங்கள் கிடையாது. சிலர் வர்க்ஷாப் மூலம் சொல்லித் தருகிறார்கள். மேக்கப்பினை ஒரே நாளில் சொல்லித்தர முடியும். ஆனால் இதற்கு குறைந்தபட்சம் ஐந்து நாளாவது வேண்டும்.
இவை அனைத்தும் சிகிச்சை முறைகள் என்பதால், முறையான உரிமம் பெற்று, லண்டனில் இயங்கும் அகாடமி ஆப் புரோஃபெஷனல் பயிற்சி மையத்துடன் (LAPT) இணைந்து நாங்க செயல்பட்டு வருகிறோம். எங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கான சான்றிதழும் LAPTதான் வழங்குகிறது. மேலும் பயிற்சிக்கான எழுத்து மற்றும் நடைமுறை தேர்வு அனைத்தும் அவர்கள் முன்னிலையில் நடைபெறும்.
மாணவர்களுக்கு சிகிச்சைக்கான இயந்திரங்களை முறையாக கையாளும் பயிற்சியினை அளித்து அவர்களை முழுமையான அழகியல் நிபுணராக உருவாக்குகிறோம். அதனால் தான் ஒரு பேட்சில் ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்ப்பதில்லை. வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்கள் தனிப்பட்ட சிகிச்சை மையங்கள் அமைக்கவும் உதவி செய்கிறோம்.
எல்லாவற்றையும் விட ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட பதிவு எண் வழங்கப்படும். அந்த எண் இருந்தால் மட்டுமே அவர்கள் அழகியல் நிபுணராக சிகிச்சையினை அளிக்க முடியும். அதேபோல் non மெடிக்கல் பயிற்சி மேற்கொண்டவர்கள், மெடிக்கல் பயிற்சியில் உள்ள சிகிச்சைகளை வழங்கக்கூடாது. மீறினால் குற்றமாக கருதப்படும்’’ என்றவர் அழகியல் சிகிச்சைகளை பற்றி விளக்கினார்.
‘‘இதில் பல சிகிச்சைகள் உள்ளன. அதில் முக்கியமானது PRP (Platelet Rich Plasma). ஒருவரின் ரத்தத்தில் இருந்து பிளாஸ்மாவை பிரித்து சருமம் மற்றும் தலைமுடிக்கான சிகிச்சை அளிப்பது. தலைமுடி இல்லாமல் சொட்டையாக இருக்கும் இடத்தில் பிளாஸ்மாவினை செலுத்தினால், அந்த இடத்தில் மீண்டும் முடி வளரும்.
அதுவே சருமம் என்றால் கொலாஜினை அதிகரித்து சருமத்திற்கு இளமையான தோற்றம் கொடுக்கும். தழும்பு, கரு வளையங்கள் குறையும். இந்த சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு ரத்தத்தின் அளவு 12 இருக்கணும். HIV நெகடிவ்வாக இருக்கணும். ரத்தத்தின் அளவு குறைவாக இருந்தால் மீசோதெரபி, கால்வானிக், ஹைஃப்ரீக்வென்சி சிகிச்சை, ஹைட்ரா ஃபேஷியல் மேற்கொள்ளலாம்.
எங்களின் மையத்தில் மாணவருக்கு சிகிச்சை முறைகளைப் பற்றி மட்டுமே சொல்லித் தருவதில்லை. வாடிக்கையாளரின் சருமத்தின் வகைக்கு ஏற்ப எவ்வாறு சிகிச்சையினை தேர்வு செய்ய வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்குகிறோம்.
சிகிச்சைக்குப் பிறகு போஸ்ட் கேர் மிகவும் அவசியம். அதற்கான பயிற்சியும் இங்குண்டு. அதில் முக்கியமானது PRP சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஊசியினை எவ்வாறு டிஸ்போஸ் செய்ய வேண்டும் என்பது. காரணம், இந்த சிகிச்சையில் ஒருவருக்கு பயன்படுத்திய ஊசியினை மற்றவருக்கு பயன்படுத்தக் கூடாது. அதனால் பயிற்சியுடன் பாதுகாப்பு முறைகளையும் மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். பயிற்சிகள் பொறுத்தவரை நேரடியாகவும் ஆன்லைன் முறையிலும் மேற்கொள்ளலாம். நடைமுறை பயிற்சியினை ஆன்லைனில் படிப்பவர்கள் நேரடியாக மையத்திற்கு வந்துதான் பெற வேண்டும். காரணம், இந்த சிகிச்சை ஒருவரின் அழகினை சார்ந்தது. ஒரு சிறிய தவறு அவர்களின் முகத்தோற்றத்தையே மாற்றிவிடும். அந்த தவறினை என் மாணவர்கள் செய்யக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறேன். அழகியல் பயிற்சி பெண்கள் மட்டுமில்லை ஆண்களும் கற்றுக் கொள்ளலாம்.
அழகியல் பயிற்சியினைப் பொறுத்தவரை ஒரு சிம்பிளான சிகிச்சையை முறைப்படி கற்றுக் கொண்டாலே அவர்கள் மாதம் கை நிறைய சம்பாதிக்க முடியும். குறைந்த முதலீடு அதிக லாபம் தரக்கூடிய பயிற்சி.
முறையாக பயின்றால் அனைவரும் அந்த துறையில் மாஸ்டராக மிளிரலாம். இந்த துறையில் சாதிக்க நினைக்கும் அனைவருக்கும் பயிற்சி அளிக்க நான் தயாராக இருக்கிறேன். தற்போது சென்னையில் மட்டுமே செயல்பட்டு வருகிறோம். வரும் ஆண்டுகளில் மற்ற ஊர்களில் வர்க்ஷாப் நடத்த திட்டமிட்டிருக்கிறேன்’’ என்றார் கன்னியம்மாள்.
ஷம்ரிதி
|