மகனின் படிப்பிற்காக தள்ளுவண்டிக் கடையை ஆரம்பித்தேன்!
திருச்சி தில்லை நகர்... மாலை நேரங்களில் அந்த பலகாரக் கடையில் கொத்துக் கொத்தாகக் கூட்டத்தினை பார்க்கலாம். அப்படி என்ன விசேஷம் என்று எட்டிப் பார்த்தால் 30 வயதுப் பெண் தனி ஆளாக வாடிக்கையாளர்கள் கேட்கும் பலகாரங்களை தட்டில் வைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்.  பொதுவாக இது போன்ற கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டா போன்றுதான் விற்பனை செய்வார்கள். ஆனால் இவர் எண்ணெயில் பொரிக்கப்படாத மற்றும் வித்தியாசமான அயிட்டங்களை தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். உதவிக்கு ஆள் இல்லாமல் அவர் மட்டுமே பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.  ‘‘என் பெயர் திவ்யா பாரதி. ஒரே மகன். ஒன்றாம் வகுப்பில் படிக்கிறான். நான் அப்பா, அம்மா, தங்கை உடன் வசித்து வருகிறேன். எல்லா அம்மாக்களையும் போல, என் மகனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும். படிப்புக்கு ஏற்ப அவன் நல்ல வேலையில் சேரணும். இதுதான் என்னுடைய லட்சியம்’’ என்று கூறும் திவ்யா ‘வாராஹி’ என்ற பெயரில் தள்ளுவண்டிக் கடையை நடத்தி வருகிறார்.

‘‘வியாபாரம் செய்கிற இடத்துக்குப் பக்கத்தில்தான் வீடு. வாடகை வீடுதான். அதே போல் தள்ளுவண்டிக்கும் வாடகை கொடுக்கிறேன். எனக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. ஆனா, குடும்பச் சூழல் காரணமாக பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியல. வாழ்வாதாரத்திற்காகத் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டேன்.  பெண்கள் ஜாக்கெட்டுகளை அலங்காரமாக வடிவமைக்கும் ‘ஆரி’ வேலைப்பாடு பயிற்சியும் எடுத்தேன். சிலம்பம் அபாரமாகச் சுற்றுவேன். கொரோனா காலத்திற்கு முன்பு, மூன்று பெண்களை வைத்து தையல் கடை ஒன்றை நடத்தி வந்தேன். அந்த சமயத்தில் நான் கர்ப்பமாக இருந்தேன்.
அதனால் தையல் வேலைகளை என்னால் செய்ய முடியாததால்தான் பெண்களை வேலைக்கு வைத்தேன். வருமானம் இருந்தாலும் தையல் வேலை பார்க்கும் பெண்களுக்கு சம்பளம், கடைக்கு வாடகை கொடுக்க வேண்டும். அதனால் பெரிய அளவில் லாபம் பார்க்க முடியவில்லை.
இருந்தாலும் தையல் கடையை மூடாமல் நடத்தி வந்தேன். தையல் மட்டுமில்லாமல் சமையலிலும் எனக்கு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது. தையல் கடை முன் ஒரு சிற்றுண்டி கடை போட்டு அதில் வித்தியாசமான உணவுகளை விற்க நினைத்தேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டேன். அந்த சமயம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் தையல் கடையை மூட வேண்டியதாகிவிட்டது. சிற்றுண்டி கடையும் துவங்க முடியவில்லை’’ என்றவர் வீட்டில் இருந்தபடியே தையல் மற்றும் ஆரி வேலைப்பாடுகளை செய்து வந்துள்ளார். ‘‘கொரோனா காரணமாக ஆர்டர்களும் குறைந்துவிட்டது. பெரிய அளவில் தையல் வேலை கிடைக்கவில்லை. ரொம்பவே சிரமப்பட்டோம். அப்பா துணிமணிகளை இரண்டு சக்கர வாகனத்தில் வீடு வீடாகக் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். கொரோனா அவரது வியாபாரத்தையும் முடக்கிப் போட்டது.
மகனை வளர்க்க தையல் வேலையில் கிடைக்கும் சொற்ப வருமானம்தான் கை கொடுத்தது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்ததும்தான் நாங்க பெருமூச்சுவிட்டோம். தையல் வேலை மீண்டும் சூடு பிடித்தது. இந்த முறை கடை போடவில்லை. காரணம், கடைக்கான வாடகை, தையல் வேலைக்கு ஆட்களுக்கு கூலி என வரும் வருமானம் செலவுக்கே சரியாக இருக்கும். அதனால் உடல் அசௌகரியங்களைத் தள்ளி வைத்துவிட்டு, நானே தைக்க ஆரம்பித்தேன்.
ஆரி வேலைப்பாடு செய்ய ஒரு தனி அறை வேண்டும் என்பதால், என் வீட்டு அருகிலேயே சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தேன். இதற்கிடையில் மாலை நேரம் சிற்றுண்டி கடை துவங்கவும் திட்டமிட்டேன்.
அந்த சமயம் என் மகன் சின்னக் குழந்தை என்பதால், அவன் பள்ளியில் சேர்ந்த பிறகு கடையை திறக்க முடிவு செய்தேன். ஒரு பக்கம் மகன், இன்னொரு பக்கம் தையல் என்று நாட்கள் உருண்டோடியது’’ என்றவர், மகனை பள்ளியில் சேர்த்த கையோடு சிற்றுண்டி கடையை திறந்துள்ளார். ‘‘என் மகனை சென்ற ஆண்டு பள்ளியில் சேர்த்தேன். அவன் படிப்புக்கு தையல் வருமானம் மட்டுமே பத்தாது. அதனால், செலவைச் சமாளிக்க, சிற்றுண்டி கடை தொடங்க நேரம் வந்துவிட்டது என்பதை புரிந்து கொண்டேன். இனிமேல் தள்ளிப் போடக் கூடாது என்று முடிவு செய்து, நான்கு சக்கர தள்ளுவண்டியை வாடகைக்குப் பிடித்தேன். மாத வாடகை ரூ.1500. தில்லைநகர் பத்தாம் குறுக்குச் சாலையில் ஏற்கனவே மூன்று தள்ளுவண்டிகள் இட்லி, தோசை விற்றுக் கொண்டிருந்தன.
அந்த வரிசையில் நானும் இடம் பிடித்தேன். அவர்களைப் போல் இட்லி, தோசை போடாமல், மாலை நேரங்களில் சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான பலகாரங்களை விற்பனை செய்யலாம்னு திட்டமிட்டேன். கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் என் கடை செயல்படத் துவங்கியது. சுடச்சுட அவர்கள் கேட்கும் போது தயாரித்து கொடுத்தேன். தையல் வேலைகளுக்காக காலை ஒன்பது முதல் மாலை மூன்று மணி வரை ஒதுக்கினேன். அதன் பிறகு சிற்றுண்டி கடை என்று திட்டமிட்டேன்.
பள்ளி முடிந்து மகள் வீட்டிற்கு வந்ததும் அம்மா அவனைப் பார்த்துக் ெகாள்வார். நான் சிற்றுண்டிக்கான வேலைகளில் ஈடுபட ஆரம்பிப்பேன். அம்மா கொத்தமல்லி, புதினா சுத்தம் செய்து, கேரட், வெங்காயம், முட்டைக்கோஸ் எல்லாம் துண்டுகளாக நறுக்கிக் கொடுப்பார். சிற்றுண்டிக்குத் தேவையான பொருட்களை ஸ்கூட்டியில் வைத்து தள்ளுவண்டிக் கடைக்கு கொண்டு வந்திடுவேன்.
வண்டியில் கேஸ் அடுப்பு, சிலிண்டர் அனைத்தும் இருப்பதால், வாடிக்கையாளர்கள் கேட்கும் உணவுகளை சுடச் சுடச் செய்து கொடுக்க வசதியாக இருக்கும். வியாபாரம் முடிந்து கிளம்பும் போது தள்ளுவண்டி, சிலிண்டருக்கு சங்கிலி போட்டு பூட்டிடுவேன்’’ என்றவர் கடையில் விற்பனை செய்யும் உணவுகள் குறித்து விவரித்தார். ‘‘வெரைட்டி காய்கறி சூப்பினை மக்கள் விரும்பி சாப்பிட வருவார்கள். ஒரு கப் 5 ரூபாய்க்குதான் தருகிறேன். விலை குறைவுதான், லாபமும் அதில் பெரிய அளவில் இல்லை என்றாலும், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க இந்த ‘சூப்’ உதவுகிறது. மேலும் மற்ற உணவுகளையும் அதிக விலைக்கு விற்பதில்லை. அதிக பட்சம் விலையே ரூ.30தான். சேலம் தட்டை வடை என் கடையின் சிக்நேச்சர் அயிட்டம்.
இரண்டு தட்டைகளுக்கு நடுவில், கேரட், பீட்ரூட், வெங்காயம் வைத்து சாப்பிடும் போது அதன் சுவை வேறு லெவலாக இருக்கும். மசாலா பானிபூரி, பன்-பட்டர்-ஜாம், சமோஸா சுண்டல், வேகவைத்த பேபி கார்ன், உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ்... இப்படி வெரைட்டியான உணவுகளை வழங்கி வருகிறேன். இப்போது பனீர் ஷவர்மா வினை அறிமுகம் செய்திருக்கிறேன்.
சுருக்கமாகச் சொன்னால் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் என் மெனுவை அமைத்திருக்கிறேன். அவர்கள் கேட்கும் போது சுடச்சுட பரிமாறுவதால் பலர் என்னை நாடி வருகிறார்கள். மாலை நான்கு மணி முதல் இரவு எட்டரை வரை தான் கடை இருக்கும்’’ என்கிறார் மகனை வளர்க்க களைப்பில்லாமல் அலுப்பில்லாமல் பம்பரமாக சுழன்று வேலைகளை செய்யும் திவ்யா பாரதி.
செய்தி: கண்ணம்மா பாரதி
படங்கள்: அகஸ்டின்
உடல் பருமனை குறைக்கும் பப்பாளிக் காய்!
பொதுவாக பப்பாளி பழத்தைதான் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். பப்பாளிக் காயை யாரும் உபயோகிப்பதில்லை. ஆனால் பப்பாளிக் காயில் உள்ள சத்துக்கள் பல வழிகளிலும் நமது உடலை பாதுகாக்கும் கேடயமாக செயல்படும் என்பதை நம்மில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சிலருக்கு அளவுக்கு மீறி உடல் எடை அதிகரித்திருக்கும். அவர்கள் சாதாரணமாக நடக்கவும், ஓடவும் முடியாமல் சிரமப்படுவார்கள். குறிப்பாக பெண்கள் வீட்டு வேலைகளை செய்யவே கஷ்டப்படுவார்கள். இவர்கள் தங்கள் உடலில் உள்ள தேவையற்ற சதையை குறைத்துக் கொள்வது மிகமிக அவசியம்.
சதையை சுலபமாகக் கரைத்து, ஸ்லிம்மாக இருக்க பப்பாளிக் காய் நன்கு பயன்படுகிறது. பப்பாளிக்காயை கூட்டு செய்தோ, குழம்பில் போட்டோ சமைத்து, வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பருமனான உடல் குறைந்து அளவோடு இருக்கும். வீட்டு வேலைகள், நடப்பதில் சிரமம் ஆகியவை இன்றி இருக்கலாம்.
மேலும் சில தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதுண்டு. அவர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பப்பாளிக்காயை பருப்பு சேர்த்து கூட்டு செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் குழந்தைக்கு தேவையான தாய்ப்பால் சுரக்கும்.பப்பாளிக்காய் உஷ்ணம் கொடுக்கும் பொருள். குழந்தைக்கு ஒத்துக் கொள்ளுமா என்று சிலர் யோசிப்பதுண்டு.
இது தவறு. குழம்பில் புளியை சேர்த்து செய்து சாப்பிடுவதை விட பப்பாளிக்காய் உஷ்ணம் குறைந்தது. தாராளமாக சேர்த்து சாப்பிடலாம். எந்தவித பாதிப்பும் குழந்தைக்கு ஏற்படாது.ஆகவே, தாய்மார்கள் பப்பாளிக் காயை உணவில் சேர்த்து பலன்கள் பல பெற்று நலமுடன் வாழலாம்.
- எஸ்.நளினி பவானி, திண்டுக்கல்.
|