காலத்தால் அழியாத ரெட்ரோ ஹேர்ஸ்டைல்!



ஃபேஷன் ஒரு சக்கரம் போன்றது. அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் பழைய டிரெண்ட் என்று சொன்னவை இப்போது லேட்டஸ்ட் டிரெண்டாக மாறிவருகிறது. அதை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகிறார்கள் இன்றைய ஃபேஷன் கலைஞர்கள்.
அந்த வரிசையில் சென்னையின் பிரபல சலூனான ‘வர்வ்’ ரெட்ரோ கலெக்‌ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதன் நிறுவனர்களான மனோஜ், ரெபேக்கா மற்றும் சுஷீல் இந்த வருடம் ‘டைம்லெஸ்’ என்ற பெயரில் புதுவித ரெட்ரோ ஹேர்ஸ்டைலினை அறிமுகம் செய்துள்ளனர். தங்களின் புது அறிமுகம் குறித்து பேசினார் மனோஜ்.

‘‘வர்வ் ஆரம்பிச்சு பத்து வருஷமாகுது. இது எங்களின் பத்தாவது ஆண்டு. நானும் என் மனைவி ரெபேக்காவும் ஐ.டி துறையை சேர்ந்தவங்க. எங்களின் முதல் மகன் பிறந்த போது, ரெபேக்கா ஐ.டி வேலை வேண்டாம் என்று முடிவு செய்தாள். தினமும் அலுவலகம் செல்வதற்கு பதில் சொந்தமாக தொழில் துவங்க விரும்பினாள். அதன் மூலம் குழந்தையுடன் நேரம் செலவிட முடியும் என்று யோசித்தாள். 
பலவிதமான தொழில் செய்வது குறித்து யோசித்தோம். அப்போது தான் பிரபல ப்யூட்டி சலூன் பிரான்சைசி தருவது தெரிய வந்தது. அந்த சமயத்தில் நான் வேலை காரணமாக அமெரிக்காவில் இருந்தேன். என் மனைவி பிரான்சைசி குறித்து சொன்ன போது, எனக்குள் எழுந்த கேள்வி ஐ.டியில் இருந்து சலூன்... எப்படி என்பதுதான்.

அதற்கு அவள் சொன்ன பதில் ‘சலூனில் நான் என்ன செய்யப் போகிறேன். ஆட்கள் இருப்பாங்க, நான் முதலாளியா நான்கு மணி நேரம் இருந்தா போதும்’ என்றாள். ஆனால், கிட்டத்தட்ட 18 மணி நேரம் அவள் அங்குதான் இருந்தாள். காரணம், அவளுக்கு அந்த துறை மிகவும் பிடித்துப் போனது. ஒருவரை அழகாக மாற்றும் போது அவர்கள் முகத்தில் தென்படும் சந்தோஷம் கொடுக்கும் மனத்திருப்தி வேறு எந்த வேலையிலும் கிடைக்காது என்பதை அவள் மூலமாக எனக்கு புரிந்தது. அதன் பிறகு இரண்டாவது பிரான்சைசி எடுத்தோம். அந்த நேரத்தில் அவளுக்கு துணையாக இருக்க எட்டு மாத விடுப்பு எடுத்து நான் சென்னைக்கு வந்தேன்.

உடன் என் மனைவியின் சகோதரரும் எங்களுடன் இணைந்தார். ஆரம்பத்தில் ஆறு மாசம் மேல் என்னால் இங்கு இருக்க முடியாதுன்னு நினைச்சேன். ஆனால் ஐ.டி வேலைக்கு முழுக்கு போட்டு விட்டு சொந்தமாக ஒரு சலூன் ஆரம்பிப்போம் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது சென்னை,கொச்சி, பெங்களூர் என 12 கிளைகள் உள்ளது’’ என்றவர் டைம்லெஸ் கலெக்‌ஷன் குறித்து பேசினார்.

‘‘நாங்க சொந்தமா ஆரம்பித்த போது எங்களுக்கு முழு ஆதரவு அளித்தது வாடிக்கையாளர்கள்தான். அவர்கள் கொடுத்த ஊக்கம்தான் செயலாக மாறி வருடத்திற்கு இரண்டு கிளைகள் என் செயின் ஆஃப் ஸ்டோர்களாக மாற்றி அமைக்க முடிந்திருக்கிறது. ஆனால் ஆரம்பித்த போது வாடிக்கையாளர்கள் எங்கள் முன் வைத்த ஒரே கோரிக்கை உங்களின் ஹேர்ஸ்டைல் கிளைக்கு கிளை மாறுபடுகிறது என்பது தான். 

அதனால் எங்களின் அனைத்து கிளைகளில் வேலை பார்க்கும் ஸ்டைலிஸ்டுகளுக்கு ஒரே மாதிரியா பயிற்சியினை கொடுக்க திட்டமிட்டோம். அந்த சமயத்தில்தான் இந்தியாவின் பிரபல ஹேர் ஸ்டைலிஸ்ட் விபுல் சதுசாமாவின் அறிமுகம் எங்களுக்கு கிடைத்தது.

அவர் எங்களின் ஸ்டைலிஸ்டுகளுக்கு எப்படி ஹேர்ஸ்டைல் குறித்த அடிப்படை விஷயங்கள் அதாவது, கத்திரி பிடிக்கும் ஸ்டைல் முதல் வாடிக்கையாளர்களுக்கு என்ன ஹேர்ஸ்டைல் செட்டாகும் வரை பயிற்சி அளிப்பதாக கூறினார். அவரின் பயிற்சியின் கீழ் வருடத்திற்கு இரண்டு கிளைகள் என்று நாங்களும் எங்களின் பிசினசை விரிவுப்படுத்தி வந்தோம்.

ஒரு முறை விபுல் எங்களிடம் வருடத்திற்கு இரண்டு கிளைகள் என்பதை நான்காக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கை வைத்தார். மாதம் ஒரு கிளை கூட திறக்கலாம். ஆனால் அதற்கு போதிய ஆட்கள் தேவை. தற்போது பயிற்சி அளிப்பவர்களில் 40% பேரைதான் நியமிக்கிறோம். கிளைகளை அதிகமாக திறந்து அதில் தரமான ஆட்கள் இல்லை என்றால் மக்கள் விரும்பமாட்டார்கள் என்று சொன்ன போது, விபுல் சொன்ன அந்த வார்த்தை எங்களுக்கு பெரிய பலத்தை கொடுத்தது.

அவர், ‘நீங்க எங்கு கிளை திறக்கலாம் என்று திட்டமிடுங்க. அந்த இடைப்பட்ட நேரத்தில் நான் ஸ்டைலிஸ்டுகளை ரெடி செய்கிறேன்’ என்றார். அன்று முதல் விபுல் எங்க நிறுவனத்தின் தலைமை கல்வி அதிகாரியாக பொறுப்பேற்று செயல்பட ஆரம்பித்தார். அவர் எங்களுடன் இணைந்த அந்த தருணத்தை நான் ஹேர்ஸ்டைலிஸ்ட் உலகிற்கு தெரிவிக்க விரும்பினேன். அதை எவ்வாறு அறிவிப்பது என்று யோசிக்க ஆரம்பித்தோம். அதில் உருவானதுதான் டைம்லெஸ் கலெக்‌ஷன்.

இதில் யாரும் செய்யாததை செய்ய திட்டமிட்டோம். இதற்காக ஒரு குழுவினை அமைத்தோம். அதன் மூலம் வாடிக்கையாளர்களின் விருப்பம், தேவை என்ன என்பதை பட்டியலிட்டோம். அதில் வேலைக்கு செல்பவர்கள், இல்லத்தரசிகள், பார்ட்டிக்கு செல்பவர்கள் என அனைவருக்குமான ஹேர்ஸ்டைலினை அமைக்க முடிவு செய்தோம். அடுத்து தலைமுடிக்கான நிறம். பலர் சிவுப்பு, நீலம், பிங்க்னு தலைமுடிக்கு கலரிங் செய்றாங்க.

அப்படி இல்லாமல் யுனிவர்சலாக நமக்கு எப்போதும் செட்டாகும் பிரவுன் நிறத்தினை தேர்வு செய்தோம். அடுத்து மார்க்கெட் நிலவரம். அதில் மக்கள் மீண்டும் ரெட்ரோ ஸ்டைலினை விரும்புவது தெரியவந்தது. அதன் அடிப்படையில் மிட்நைட் மியூஸ், ஐகானிக் சார்ம், பிளம் வேவ்ஸ், ரெட்ரோ ரேடியன்ஸ், வின்டேஜ் ஃபேட், அர்பன் ஐகான் என 11 புதிய ஸ்டைலினை தேர்வு செய்தோம்’’ என்றவர் அதனை செயல்படுத்தியது குறித்து விவரித்தார்.

‘‘ஸ்டைல், கலர் எல்லாம் முடிவாகிவிட்டது. அடுத்து ஸ்டைலிஸ்ட். எங்க சலூனில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஸ்டைலிஸ்டுகளுக்கு ஆடிஷன் வைத்து அதில் 17 பேரை தேர்வு செய்தோம். அவர்களுக்கு விபுல் ரெட்ரோ கலெக்‌ஷன் ஸ்டைல் குறித்து பயிற்சி அளித்தார். அப்படித்தான் ஆண்களுக்கு நான்கு ஹேர்ஸ்டைலும் பெண்களுக்கு ஏழு ரெட்ரோ லுக்கினை அறிமுகம் செய்தோம். ஸ்டைல் ரெடி, ஸ்டைலிஸ்டும் தயார்... அடுத்து இதற்கான மாடல்கள் வேண்டும்.

பெரும்பாலும் இது போன்ற ஃபேஷன் குறித்த ஷூட் மும்பையில்தான் நடக்கும். அங்குதான் மாடல்கள் இருப்பாங்க. அதனால் அங்கு செல்லலாம் என்றார்கள். வர்வ் சென்னைக்கான பிராண்ட். அதனால் நம்ம சென்னையில் இந்த ஸ்டைலினை அறிமுகம் செய்ய வேண்டும் என்று விரும்பினேன். மாடல்களை மும்பையில் இருந்து வரவழைத்து முழுக்க முழுக்க வின்டேஜ் ஸ்டைலில் ஸ்டுடியோ அமைத்து அதன் பிறகு ஷூட் செய்தோம்.

இரண்டரை நாள் தூக்கமில்லாமல் சக்சஸ்ஃபுல்லா முடித்து புகைப்படத்தை பார்த்த போது எங்களின் கடின உழைப்பிற்கான பலன் கிடைத்தது போல் உணர்ந்தோம். தற்ேபாது எங்களின் அனைத்து சலூனிலும் டைம்ெலஸ் ஹேர்ஸ்டைல் விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு எங்களின் ஸ்டைலிஸ்ட் அமைத்து தருவார்கள். இதனைத் தொடர்ந்து வருடம் ஒரு கலெக்‌ஷனை அறிமுகம் செய்ய முடிவு செய்திருக்கிறோம்’’ என்றவர், வரும் மாதங்களில் சென்னை மற்றும் ஐதராபாத்தில் கிளைகளை திறக்க இருப்பதாக தெரிவித்தார்.

ஷன்மதி