நியூஸ் பைட்ஸ்



முதல் பெண் விமானி!

இந்திய விமானப் படையின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது, ஜாக்குவர் போர்விமானப் படை. இதுவரை ஜாக்குவர் படையில் ஒரு பெண் விமானி கூட இடம் பெறவில்லை. இந்நிலையில் ஃப்ளையிங் ஆபிசர் தனுஷ்கா சிங் என்பவர் ஜாக்குவர் படையில் நிரந்தரமாகச் சேர்க்கப்பட்ட முதல் பெண் விமானி என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவில் வாழ்ந்துவந்த ஒரு ராணுவக் குடும்பத்தில் பிறந்தவர், தனுஷ்கா சிங். இவரது தந்தையும், தாத்தாவும் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் பாடத்தில் பி.டெக் பட்டத்தைப் பெற்ற பிறகு, தனது குடும்பத்தினரைப் போலவே இந்திய ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். ஆனால், அவரது விருப்பம் இந்திய விமானப்படையின் பக்கம் திரும்பியது.

காரணம், இந்திய விமானப்படையில் பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார் தனுஷ்கா. முதலில் தெலுங்கானாவில் உள்ள துண்டிக்கல் பகுதியில் அமைந்திருக்கும் இந்திய விமானப்படை அகாடமியில் பயிற்சி பெற்றார். ஹாக் எம் கே 132 எனும் விமானத்தை இயக்குவதில் சிறப்புப் பயிற்சியைத் திறம்பட முடித்தார். அவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக ஜாக்குவர் படையில் நிரந்தர விமானி என்ற பணி கிடைத்துள்ளது. இதற்கு முன்பு ஜாக்குவர் படை விமானத்தைப் பயிற்சிக்காக மட்டுமே பெண்கள் இயக்கியிருக்கின்றனர்.

பூமி அதிர்ச்சியை தாங்கும் வீடு

உலகின் அதிகமாக பூமி அதிர்ச்சி ஏற்படும் நாடு, ஜப்பான்.  இதனால் அதிகளவு சேதாரம் ஏற்படுவது வீடுகளுக்குத்தான். ஒவ்வொரு வருடமும் பூமி அதிர்ச்சி உட்பட பல இயற்கை சீற்றங்களால் ஆயிரக்கணக்கான ஜப்பானியர்கள் தங்கள் வீடுகளை இழக்கின்றனர். 

இதற்கு மாற்றாக பூமியிலிருந்து மேலே மிதக்கும் வடிவில் வீடுகளைக் கட்டமைக்கும் தொழில்நுட்பத்தை ஒரு கட்டுமான நிறுவனம் கண்டுபிடிந்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த இந்நிறுவனம் மிதக்கும் வீடுகளைக் கட்டுவதற்கான பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த சோதனை முயற்சி வெற்றியடைந்தால், ஜப்பானில் மிதக்கும் நகரமே உருவாகலாம் என்கின்றனர்.

கின்னஸ் சாதனை

ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ரத்த தானம் செய்து, கின்னஸ் சாதனையைத் தன்வசமாக்கியவர் ஜேம்ஸ் ஹாரிஸன். இவரது ரத்தம் லட்சக்கணக்கான குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜேம்ஸ், முதல் முறையாக 1954ல் ரத்த தானம் செய்தார். மூன்று, நான்கு முறை ரத்த தானம் செய்த பிறகே, ஜேம்ஸின் ரத்தம் வலிமையாகவும், அசாதாரணமான நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்ததாகவும் இருப்பது தெரிய வந்தது. குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தச் சிவப்பணு சிதைவு நோயிலிருந்து தடுக்கும் எதிர்ப்பாற்றல் ஜேம்ஸின் ரத்த பிளாஸ்மாவில் இருந்தது.

ரத்தம் மட்டுமல்லாமல், பிளாஸ்மாவையும் தானம் செய்ய ஆரம்பித்தார். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை என்று அவரது ரத்தம் மற்றும் பிளாஸ்மா தானம் தொடர்ந்தது. கடந்த 2018ம் வருடம் மே 11ம் தேதி 1,173வது ரத்த தானத்தைச் செய்தார். 

அப்போது அவரது வயது 81. ஆஸ்திரேலியாவின் சட்டப்படி 81 வயதுக்கு மேல் ரத்த தானம் செய்ய அனுமதியில்லை. அதனால் 1,173வது தானத்துடன் நிறுத்திக் கொண்டார் ஜேம்ஸ். இவரது அரிய பிளாஸ்மா 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு, தனது 88வது வயதில் மரணமடைந்தார் ஜேம்ஸ்.

இ-டேஸ்ட்

அமெரிக்காவில் கிடைக்கும் ஒரு பொருளை ஆண்டிப்பட்டியில் இருந்துகொண்டே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வதைப் போல, உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ள பேக்கரியில் இருக்கும் கேக்கை, நாம் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் சுவைக்க முடியும். இதற்கு இ-டேஸ்ட் என்று பெயர். அமெரிக்காவில் உள்ள ஒஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆய்வகத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து இ-டேஸ்ட் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கின்றனர்.

இ-டேஸ்ட் விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியை நம்முடைய வாயுடன் பொருத்த வேண்டும். இக்கருவியில் உள்ள வேதியியல் சென்சார்களும், ஒயர்லெஸ் டிஸ்பென்சரும் நம்முடைய சுவை உணர்வைத் தூண்டும். இது நம்மை மகத்தான ஒரு டிஜிட்டல் சூழலுக்குள் அழைத்துச் செல்லும். அங்கே மீன், கேக், சூப் என சகல உணவுகளையும் டிஜிட்டல் முறையில் சுவைக்கலாம்.

எப்படி விர்ச்சுவல் ரியாலிட்டி கருவியைக் கண்களில் மாட்டிக்கொண்டால், வேறொரு உலகத்துக்குச் செல்கிறோமோ அதுபோலவே இந்த இ- டேஸ்ட் சுவையும் உண்மைக்கு நிகரான அனுபவத்தை தரும் என்கின்றனர். இதுவரை நிறைய முறை இ-டேஸ்ட் கருவியை வைத்து, நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை செய்துவிட்டனர். உண்மைக்கு நிகரான சுவையைத் தருகிறது என்று 70 சதவீதம் பேர் தெரிவித்திருக்கின்றனர். மீதியிருக்கும் 30 சதவீதமும் வெற்றியடையும் நிலையில் மக்களின் பயன்பாட்டுக்கு இ-டேஸ்ட் வரலாம்.

த.சக்திவேல்