பிளான்



‘‘என்னப்பா ஹரி! நீ எதிலும் ரொம்ப கவனமாக பிளான் பண்ணி செய்வே. உன் பிள்ளை கல்யாணத்துக்கு எத்தனை பேர் வருவாங்க... எத்தனை சாப்பாடு தயார் பண்ணணும்னு கரெக்டா திட்டம் போட்டிருப்பே! இப்ப நூறு பேருக்கான சாப்பாடு மிஞ்சிருச்சுன்னு சமையல்காரர் சொல்றார்... எப்படி?’’ என்றார் நண்பர் குமரேசன்.

குமரேசனை கை அமர்த்தி நிறுத்தி, தன் செல்போனில் ஏதோ ஒரு நம்பரை அழுத்தினார் ஹரிஹரன். இணைப்பு கிடைத்ததும், ‘‘ஹலோ! அமர்சேவா ஆதரவற்றோர் இல்லம்தானே? நான் பிஎஸ்எஸ் கல்யாண மண்டபத்தில் இருந்து பேசுறேன். நூறு பிள்ளைகள் சாப்பிடுற மாதிரி சாப்பாடு இருக்கு! அனுப்பி வைக்கலாமா?’’ என்றார்.அடுத்த சில நொடிகளில் இசைவு பதில் கிடைத்து. உடனே வேன் ஒன்றில் சாப்பாடு வகைகளை ஏற்றி துரிதமாக அனுப்பி வைத்தார்.

குமரேசன் விடவில்லை... ‘‘என்னப்பா! நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலியே?’’ என்றார்.‘‘குமரேசா, இதுவும் நான் பிளான் பண்ணினதுதான். என் மனைவிகிட்ட ஆரம்பத்துலயே அந்த ஆதரவற்றோர் இல்லப் பிள்ளைகளையும் கல்யாண விருந்துக்குக் கூப்பிடலாம்னு சொன்னேன். அவளுக்கு அதுல விருப்பம் இல்லை. மீறி வற்புறுத்த முடியாது. அதனால கூடுதலா நூறு சாப்பாடு தயாரிக்க வச்சி, மிச்சப்படுத்தி, அனுப்பியும் வச்சிட்டேன்!’’ என்றார் ஹரி.                                 

கு.அருணாசலம்