பழக்கம்
‘‘ஏய் நில்லுடி! எத்தனை நாளாய் நடக்குது இந்தக் கூத்து?’’ - தாய் லைலாவின் அதட்டல் குரல் கேட்டு நின்றாள் கல்லூரி மாணவி மீனா. ‘‘எது?’’
‘‘நீயும் விமலும் சந்திக்கிறது, பேசறது, ஒண்ணா காலேஜ் போறது?’’ ‘‘ரெண்டு வருஷமா நடக்குது!’’‘‘ஓகோ, எத்தனை தரம் கண்டிச்சாலும் நீங்க கேட்க மாட்டீங்களா?’’‘‘கேட்க முடியாது!’’
‘‘அவ்வளவு திமிரா? இப்போ நான் அடக்கறேன் உங்க கொட்டத்தை!’’ - கத்திய லைலா, கைபேசி எடுத்து எண்களை அழுத்தி ஒலிபெருக்கியையும் உயிர்ப்பித்து, ‘‘மிஸ்டர் சந்திரசேகரன்!’’ என்றாள். ‘‘சொல்லுங்க மேடம்!’’ - எதிர் குரலில் கோபத்தின் சாயல். ‘‘உங்க பையன் என் பொண்ணோட பேசறான், பழகறான், கெடுக்கறான்!’’
‘‘அதைத்தான் மேடம் இங்கே நானும் கேட்டு கண்டிச்சிக்கிட்டிருக்கேன்...’’ ‘‘அப்படியா? என்ன சொல்றான் அவன்?’’‘‘ ‘ஒரே ஊர்ல இருந்து, பெத்த குழந்தைகளை ஆளுக்கொண்ணா பிரிச்சி வளர்க்குறது உங்களுக்கு வேணும்னா சரியா இருக்கலாம். உங்களுக்கு விவாகரத்து கொடுத்த சட்டத்துக்கும் சரியா இருக்கலாம். ஆனா, அண்ணன் தங்கச்சியா பொறந்த நாங்க அந்தப் பாசம் தெரியாம வளர விரும்பல. முடிஞ்சா நீங்களும் சேர்ந்து வாழுங்க. இல்லாட்டி எங்களை பழகவாச்சும் விடுங்க’ன்னு சொல்றான் மேடம்!’’லைலா முகத்தில் அதிர்ச்சி மற்றும் சிந்தனைக் கோடுகள்.
காரை ஆடலரசன்
|