நியூஸ் வே
சிவகார்த்திகேயன் படத்தில் நடிப்பதாக இருந்த ஸ்ருதி ஹாசன் இப்போது விலகிவிட்டார். மறுபடியும் கீர்த்தி சுரேஷ் ஒன்ஸ்மோர் கேட்டு அவரோடு நடிக்கிறார்.
‘‘என் வாழ்க்கையில் நடந்தவற்றுக்கு எவரையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. யாரும் என்னைத் தொந்தரவு செய்வதாகவும் நான் நினைக்கவில்லை’’ என பிரஸ் மீட் ஒன்றில் நெகிழ்ந்திருக்கிறார் நடிகர் சல்மான்கான்.
தென் ஆப்ரிக்கா அருகே இருக்கும் செஷல்ஸ் தீவு, தங்கள் கலாசார தூதராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானை அறிவித்துள்ளது. ‘என் மீது அன்பு கொண்ட செஷல்ஸ் மக்களுக்கும் அரசுக்கும் நன்றி’’ என ட்விட்டரில் நெகிழ்ந்திருக்கிறார் புயல்!
‘‘ ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, இளைஞர்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்லும் படமா?’’ என்ற கேள்வியை ஜி.வி.பிரகாஷிடம் கேட்டிருக்கிறார்கள். ‘‘அந்தப் படத்துல நான் வெறும் நடிகன்தான். நீங்க இந்தக் கேள்வியை டைரக்டர்கிட்டதான் கேட்கணும்’’ என்று செம ஸ்மார்ட் பதிலை வீசியிருக்கிறார் ஜி.வி.
உலகம் முழுக்க நம்பிக்கை, சத்தியம், மற்றும் ஒற்றுமையை விதைக்க போப் ஆண்டவர் பிரான்சிஸ், ‘Wake Up’ என்கிற ஆல்பத்தை வெளியிடுகிறார். அவரது முக்கிய உரைகளின் பகுதிகள், புனிதப் பாடல்கள் என எல்லாமே இசை கோர்க்கப்பட்டு, நான்கு மொழிகளில் வருகின்றன. நவம்பர் 27ல் வெளியாகவிருக்கிறது இந்த ஆல்பம்!
‘புலி’ பட ரிலீஸின்போது ஏ.எம்.ரத்னமும், டி.ஆரும் சேர்ந்துதான் லேபில் இருந்து எல்லா வேலைகளையும் பார்த்தார்கள். அதை நேரில் பார்த்த விஜய், உடனே அடுத்த படத்திற்கான கால்ஷீட்டைக் கொடுத்துவிட்டு, சம்பளத்திலும் கணிசமான தொகையை குறைத்துக் கொண்டார். படத்தின் டைரக்டர், காத்திருக்கிற எஸ்.ஜே.சூர்யாவாக இருக்கலாம்.
மீண்டும் அஜித்தை சந்தித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். கூடவே ‘வேதாளம்’ இயக்குனர் சிவாவும் சேர்ந்துகொள்ள, சிவகார்த்தியின் மதுரை சம்பவத்தில் தொடங்கி அடுத்த படம் வரை அத்தனையும் பேசி மகிழ்ந்திருக்கிறார்கள்.
தனது 150வது படம் கமர்ஷியலாகவும் சமூக அக்கறையுடனும் இருக்க வேண்டும் என விரும்பிய சிரஞ்சீவி, ஏகப்பட்ட கதைகள் கேட்டு வந்தார். இப்போது ‘கத்தி’யை ரீமேக் செய்யும் முடிவு செய்திருக்கிறார்.
‘எந்திரன்2’வில் ரஜினியோடு நடிக்க அர்னால்டிடம் கேட்டிருக்கிறார்கள். வில்லன் கேரக்டர். அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. டேட்ஸ், சம்பளம் பேசிய பிறகே அவர் நடிக்கிறாரா என்பது தெரியவரும்.
ஆங்கிலத்தில் கவிதை எழுதுவது தீபா சன்னிதியின் ஹாபி. மனதை பாதித்த விஷயங்களை எல்லாம் கவிதைகளாக்கி பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறார் தீபா.
புலிகள் பாதுகாப்புக்கான தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார் அமிதாப். இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, மும்பையின் சஞ்சய் காந்தி உயிரியல் பூங்காவுக்குச் சென்றபோது, அமிதாப்பின் வாகனத்தை 4 கி.மீ தூரத்துக்கு துரத்தி வந்திருக்கிறது ஒரு புலி. அந்த த்ரில் அனுபவத்தை ரசித்து வந்திருக்கிறார் பிக் பி!
கைத்தறித் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக பட்டமளிப்பு விழாக்களில் வேட்டி, சேலை, குர்தா போன்ற கைத்தறி ஆடைகளையே பட்டதாரிகள் அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்டது ஐதராபாத் பல்கலைக்கழகம். பிரிட்டிஷ் கால அங்கி முறையை மாற்றுவதற்கான இந்த முயற்சி, ஆடைக் கட்டுப்பாடு என பார்க்கப்பட்டு எதிர்ப்பு கிளம்ப, இப்போது ‘கைத்தறி உடை கட்டாயமில்லை’ என இறங்கி வந்துவிட்டது பல்கலைக்கழகம்!
லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் மத்திய அமைச்சராக இருக்கிறார்; அவரது மகன் ஒரு எம்.பி. வருகிற பீகார் சட்டசபைத் தேர்தலில் தம்பிக்கும், மருமகனுக்கும் சீட் வழங்கியிருக்கிறார் பஸ்வான். இதனால், ‘குடும்ப அரசியல்’ குற்றச்சாட்டு வலுக்க, பஸ்வானோ ‘‘வெற்றிவாய்ப்பு இருக்கும் போட்டியாளர்களுக்கு மட்டுமே சீட் வழங்கியிருக்கிறோம்’’ என்கிறார் சூடாக!
சதர்ன் கலிஃபோர்னியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவராக இருக்கிறார் இந்தியப் பெண் ரினி சம்பத். இவரை ‘இந்தியக் கழிவுத் துண்டு’ என அசிங்கமாக விமர்சித்தார்கள் சக வெள்ளை இன மாணவர்கள். இதனால் காயப்பட்ட ரினி, அமெரிக்கக் கல்லூரி வளாகங்களில் நிலவும் நிறவெறி, பாலினப்பாகுபாடு பற்றி ஃபேஸ்புக்கில் எழுதினார். அவரது நெகிழ்ச்சிக் கட்டுரை ஆயிரக்கணக்கானவர்களால் ஷேர் செய்யப்பட்டிருக்கிறது.
‘தூங்காவன’த்தை தொடர்ந்து துரித காலத் தயாரிப்பாக ஒரு படத்தை தயாரிக்கிறார் கமல். அமெரிக்காவிலேயே நடக்கிற கதை. அங்கேயே போய் லொகேஷன் பார்த்துத் திரும்பியிருக்கிறார் உலக நாயகன்.
‘சண்டக்கோழி 2’ டிஸ்கஷனில் இருந்த லிங்குசாமி, திடீரென ‘பையா’ படத்தை இந்தியில் இயக்கப் போய்விட்டார்.
தனது மத வாரிசு குறித்துப் பேச ஆரம்பித்திருக்கிறார் தலாய் லாமா. ‘‘எனக்குப் பிறகு என் இடத்தில் ஒரு பெண் வந்தால் மகிழ்ச்சியே. ஆனால், அந்தப் பெண் மிகக் கவர்ச்சிகரமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அவரால் ஒரு பயனும் இல்லை!’’ என லண்டனில் அவர் அதிரடியாகச் சொன்னது சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
மும்பையில் நேரம் கிடைத்தால் தன் வீட்டுத் தோட்டத்தைப் பராமரிப்பதில் பரவசமாகி விடுகிறார் ஹன்சிகா. ‘‘சந்தோஷம் என்பது ரெடிமேடா கிடைக்கறதில்ல... நம்மளோட செய்கைகளினாலதான் அது தேடி வருது’’ என ஃப்ரெஷ் ஃபீல் காட்டுது பொண்ணு!
|