குட்டிச்சுவர் சிந்தனைகள்



தலையில பேனில்லாம இருக்கிற மனுஷன பார்க்கலாம், கைல போனில்லாத மனுஷன பார்க்க முடியுமா? இதுல அரசாங்கமே இலவசமா செல்போன் தருதாம். ஃபேனை போட்டா ஃபேனுக்கு எதிர்ல இருக்கிற பொருள் பறக்கலாம்... ஆனா ஃபேனே பறக்குற மாதிரி ஒரு ஃபேன் கொடுத்தாங்களே. அப்படி நாம பேசறது நமக்கே கேட்காத மாதிரி ஒரு போன் கொடுக்காம இருந்தா சரி.

அப்புறம் இலவச ரிங்டோன்களா கீழ இருக்கிற பாடல்களைப் போட்டுக் கொடுத்திடாதீங்க! ஏற்கனவே மாமியார் - மருமகள் சண்டைகள் தமிழக வீடுகளில் ஓடிக்கிட்டு இருக்கு. இதுல இந்த அம்மா சென்டிமென்ட் பாடல்களைப் போட்டா பிரிஞ்சு கிடக்குற வீடுங்க எல்லாம் இடிஞ்சே போயிடும்.

‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே, அம்மாவை வணங்காது உயர்வில்லையே...’‘ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம், அம்மாவை வாங்க முடியுமா?’‘அம்மா அம்மா எந்தன் ஆருயிரே... நானும் நீயும் என்றும் ஓருயிரே...’‘அம்மா என்னும் வார்த்தைதான் பல அர்த்தம் சொல்கிற வாக்கியம்...’

நாட்டுல இந்த தொழிலதிபர்கள் தொல்லைக்கு அப்புறம் பெரிய இம்சை இந்த அவார்டு ஃபங்ஷன் மேட்டர்தான். அட, நம்ம நாட்டுல துக்க வீட்டுல அழறவங்கள விட அவார்டு ஃபங்ஷன்ல அழறவங்க அதிகமாயிட்டாங்கப்பா. நல்ல சிரிப்பாளருனு அவார்டு கொடுத்தா அழறாங்க, நல்ல தொகுப்பாளர்னு அவார்டு கொடுத்தா அழறாங்க, நல்ல நடிப்பாளருனு அவார்டு கொடுத்தா அழறாங்க, நல்ல முறைப்பாளருனு அவார்டு கொடுத்தா அழறாங்க. இவனுங்களுக்கு கைல கேடயம் வருதோ இல்லையோ, கண்ல இருந்து குடம் குடமா தண்ணி வந்திடுது.

உலகத்துல நோபல் பரிசு வாங்குனவன், ஆஸ்கர் பரிசு வாங்குனவனெல்லாம் நல்லாத்தான் இருக்கான், ஆனா இந்த அரையணாவுக்கு அவார்டு வாங்கிட்டு இவங்க விடுற கண்ணீர் இருக்கே, அதைக் குழாய்ல புடிச்சு செங்குன்றம் ஏரிக்கும் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் கொண்டுபோனா, சென்னைக் குடிநீர் பிரச்னையின் குடுமியை முடிஞ்சு கொண்டை ஊசி குத்திடலாம். ஒருவேளை அழுதாதான் அவார்டு தருவோம்னு சொல்லிடுறாங்களோ? இதுவே கொஞ்சம் ஓவராகி, ‘யாரு அதிகமா அழுதாங்களோ அவங்களுக்கு ஒரு அழுமூஞ்சி அவார்டு’ன்னு எல்லாம் தர ஆரம்பிக்காம இருந்தா போதும்!

பாலா எடுக்கிற படத்துல காஸ்ட்யூமுக்கு மிச்சமாகுற காசெல்லாம், கதாநாயகன் கதாநாயகிக்கு மேக்கப் பண்ண லாரி லாரியா செம்மண், களிமண் லோடு வாங்கவே சரியா போகுதாம். இப்படித்தான், மிஷ்கின் படத்துல மிச்சமாகுற கரன்ட் செலவும் டீசல் ஜெனரேட்டர் செலவும், வெறும் காலையே குனிஞ்சு படம் புடிக்கிற கேமராமேனின் முதுகுவலிக்கு அயோடெக்ஸ் வாங்கவே சரியாயிடுதாம்.

ஹரி படத்துல பிரமாண்ட செட்டுக்கு போக வேண்டிய ஷேர் எல்லாம், ஒரு ஊரையே கூட்டியாந்து நடிக்க வச்சு சோறு போடுறதுல போயிடுது. மணிரத்னம் படத்துல வசனம் எழுத பயன்படும் பேப்பர் செலவு மிச்சமானா, அதுக்கு சரி சமமா செலவாயிடுது அடிக்கடி ரயில்ல ஷூட்டிங் பண்ண வாங்குற டிக்கெட்டு. சுந்தர்.சி படத்துல ஹீரோயின் டிரஸ் செலவ மிச்சம் பண்ணுனா, அந்தக் காசெல்லாம் கார், ஜீப் பறக்க பெட்ரோல் வாங்கவே சரியா போயிடுதாம்.

சேரன்  படத்துல சாங்கையும் சண்டையையும் சிம்பிளா செஞ்சாலும், ஹீரோ ஹீரோயின் அழுகையைத் துடைக்க வாங்குற கர்ச்சீப் செலவே பாதி பட்ஜெட்ட புடிச்சிடுது. இயக்குநர் ராஜேஷ் படங்களில் ஆர்ட்டிஸ்ட்களின் சம்பளத்த மிச்சம் பண்ணினா, ஹீரோ காமெடியன் சரக்கு செலவுக்கே மொத்தமும் அத்துக்கிட்டு போயிடுது.

சரி, இதனால நாங்க என்ன சொல்ல வரோம்னு கேட்கறீங்களா? அடடா, அவங்களைப் போலவே ஏதாவது கருத்தை சொல்லி முடிக்கணுமே, ஆங்... இப்படி ஒரு பக்கம் காசு மிச்சமானா, இன்னொரு பக்கம் பிச்சுக்குது, அதனால யாரும் திருட்டு விசிடில படம் பார்க்காதீங்க.

* வாழ்க்கை என்பது மொபைலின் எதிர்முனையில் பேசும் மனைவி போல, அது எது சொன்னாலும் சரி என்பதைத் தவிர வேறு வழியேயில்லை.
* கஷ்டம் என்பது வாக்கிங் போயிருக்கும் மாமனார் போல, உடனே வருமா கொஞ்சம் நேரம் விட்டுட்டு வருமான்னு தெரியாட்டியும் நிச்சயம் வரும்.
* உலகம் என்பது ஊர்ல இருந்து வந்திருக்கும் மாமியார் போல, நாம அதை கவனிக்காட்டியும், அது நம்மளை நல்லாவே கண்கொட்டாம கவனிச்சுக்கிட்டு இருக்கும்.
* சந்தோஷம் என்பது மச்சினிச்சி போல, அது நம்ம கூட இருக்கோ இல்லையோ, ஆனா இருக்கிற மாதிரி நம்பிக்கிட்டு இருந்துட்டு போயிடணும்.
* அன்பு என்பது குழந்தைங்க ஸ்கூல் ஃபீஸ் போல, எதுக்கு தர்றோம் ஏன் தர்றோம்னு தெரியாட்டியும், எடுத்து கொடுத்துக்கிட்டேதான் இருந்தாகணும்.
* ஆசை என்பது நம்ம மச்சினன் போல, மொத்தமா அடக்கியும் வைக்கக்கூடாது, அதுக்காக ஓவரா ஆடவும் விடக்கூடாது.
* வசதி வாய்ப்புகள் என்பது தாத்தா பாட்டி போல, இருக்கலாம் இல்லாம போகலாம், ஆனா இருந்தா சரியா பார்த்துக்கணும்.
* நம்பிக்கை என்பது கைக்குழந்தை போல, அப்பப்ப இருக்கேன்னு அழுதோ சிரிச்சோ ஒரு அட்டண்டன்ஸ் போட்டுடணும்.
* சேமிப்பு என்பது நட்பைப் போல, நாம் களைக்கும்போது கூட அது தாங்கிப் பிடிக்க வேண்டும்.

செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்குன்னு நாசா சொல்லிடுச்சாம். இப்ப ஒவ்வொரு நாட்டுக்காரனும் செவ்வாய் கிரகத்துக்கு டூர் போனா என்ன எப்படி ப்ளான் பண்ணுவாங்கன்னு பார்ப்போம். கிடைக்கிற தண்ணிய வச்சு எப்படி சிக்கனமா துணிய துவைக்கவும், தலைக்கு குளிக்கவும் ஒரு மெஷின் கண்டுபிடிக்கலாம்னு சிந்திச்சுக்கிட்டு இருந்தானாம் ஜப்பான்காரன்.

கிடைக்கிற தண்ணிய அதிசயத் தண்ணினு சொல்லி எப்படி உலகம் முழுக்க மார்க்கெட் பண்ணலாம்னு யோசிக்கிறான் ஜெர்மன்காரன். இந்தத் தண்ணிய எப்படி நம்ம நாட்டுக்கு மட்டும் அபேஸ் பண்ணலாம்னு யோசிக்கிறான் அமெரிக்காக்காரன்.

தண்ணில ஏதாவது பூச்சி கிடந்தா, அதைத் தின்னுட்டு தண்ணிய நல்ல விலைக்கு வித்திடலாம்னு கணக்கு பண்றான் சீனாக்காரன். ‘தண்ணி யாருக்கு போனாலும் பரவாயில்லை, அமெரிக்காக்காரனுக்கு மட்டும் போயிடக் கூடாது’ன்னு திட்டம் தீட்டுறான் ரஷ்யாக்காரன். கிடைக்கிற தண்ணில கொஞ்சத்த எடுத்து குடிச்சுக்குவோம், மிச்சத்த சேர்த்து வச்சு ஒண்ணா குளிச்சுக்குவோம்னு ப்ளான் போடுறான் இங்கிலீஷ்காரன். அங்க தண்ணி இருக்கிறதுனால, நாம சரக்கும் முறுக்கும் கொண்டு போனா போதும்னு நாலு குவாட்டர  பார்சல் கட்டியிருக்கான், கடைசியா வந்த நம்மூருக்காரன்.                         

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்