தயாராகுது தல சட்டை!
கொண்டாடும் கோவில்பட்டி
‘‘அஜித்தின் ‘வேதாளம்’ எப்போ ரிலீஸ்?’’ எனக் கேட்க வேண்டிய தல ரசிகர்களை, ஒரு சட்டை ரிலீஸுக்காக காக்க வைத்திருக்கிறார் கோவில்பட்டியைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் முருகன். ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் இந்தச் சட்டை பரவிப் படர்கிறது.
இதற்கு அட்வான்ஸ் புக்கிங் வேறு. அப்படியென்ன இதில் விசேஷம் என்கிறீர்களா? அஜித்தின் வாழ்க்கை வரலாறு தொடங்கி சினிமா பயணம் வரை சகலமும் இந்தச் சட்டையில் புள்ளிவிவரங்களோடு எழுத்துக்களால் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும். பின்புறத்தில் ‘தல 56’ என்கிற வாசகமும், அஜித் உருவமும் செமயாய் பின்னியெடுக்கும்!
‘‘எனக்கு சொந்த ஊர் சாத்தூர் பக்கத்துல ஒத்தையால்னு ஒரு குக்கிராமம் சார். ஃபேஷன் டிசைனிங்ல ரொம்ப ஆர்வம். படிப்பு முடிஞ்சதும் ‘Front page fashion house’னு கடை ஆரம்பிச்சேன். அதுல, நானே புதுசா டிசைன் பண்ணி உடைகளை தைத்து வித்துட்டு இருக்கேன். எங்கிட்ட பத்து பேர் வேலை பாக்குறாங்க.
‘இப்படி வேணும்’னு கேட்குறவங்களுக்கும் தனியா டிசைன் செஞ்சு கொடுக்குறது என்னோட வழக்கம். குறிப்பா, பள்ளிகள்ல போட்டிகள் நடக்கும்போது நிறைய பேர் வந்து கேட்பாங்க. அவங்களுக்கு வித்தியாசமா உடைகளை டிசைன் பண்ணிக் கொடுப்பேன். தொடர்ந்து, ஸ்கூல் யூனிஃபார்ம் ஆர்டர்ஸ் கிடைச்சது. அதுலயும் காலர், பாக்கெட்னு தனித்துவமா சில விஷயங்களைப் பண்ணினேன். இப்படியேதான் போயிட்டிருந்தது வாழ்க்கை.
இது, தீபாவளி நேரம்ங்கிறதால புதுசா டிசைன் யோசிச்சு பண்ணிட்டு இருந்தேன். அப்போ, திடீர்னு இந்த ஐடியா உதிச்சது. இதுவரைக்கும் பெரிய ஹீரோக்களோட போட்டோக்களைத்தான் சட்டையில பிரின்ட் பண்ணியிருக்காங்களே தவிர, அவங்களைப் பற்றிய முழு விவரங்களையும் கோர்த்து பிரின்டட் ஷர்ட் யாரும் செய்ததில்லை. ஸோ, வித்தியாசமா இருக்கும்னு நினைச்சேன். நினைச்சபடியே வொர்க் அவுட் ஆகியிருக்கு!’’ என்கிற முருகனுக்கு இப்போதே ஐந்நூறு சட்டைகளுக்கு மேல் ஆர்டர் குவிந்திருக்கிறதாம். ஒரு சின்ன கடைக்கு இது எதிர்பாராத எண்ணிக்கையாச்சே. அதனால் தயாரிப்பு வேலைகளை மும்முரப்படுத்தியிருக்கிறாராம்.
‘‘இந்தச் சட்டையில 1971ம் வருஷம் அஜித் பொறந்ததுல தொடங்கி சினிமாவுக்கு வந்த கதை, ெபற்றோர் பெயர், குடும்பம்னு எல்லாம் அச்சிட்டு இருக்கும். அப்புறம், அவர் நடிச்ச படங்கள் எல்லாத்தையும் போட்டிருக்கோம். அந்தந்த படங்களோட டைரக்டர் பெயர், அந்தப் படம் பண்ணின சாதனைகள் பற்றின விஷயங்கள்னு எல்லாம் இதில் அடங்கியிருக்கும்.
சட்டை முன்பக்க கை மேல அல்டிமேட், சூப்பர்ங்கிற வார்த்தையும், பின்னாடி ரேஸர், ஆக்டர்னும் எழுதி ‘தல’ படத்தை பெரிசா வச்சிருக்கோம்!’’ என்கிற முருகன் இந்தச் சட்டைக்கு 399 ரூபாய் என விலை நிர்ணயித்திருக்கிறார். எல்லோருக்கும் பொருந்தும் விதவிதமான சைஸ்களில் இது கிடைக்குமாம். ‘‘ஒருவேளை இந்த ஐடியா ஒர்க் அவுட் ஆனா, மத்த நடிகர்களுக்கும் இது மாதிரி டிசைன் பண்ணலாம்னு இருக்கேன். பார்க்கலாம்!’’ என்கிறார் இந்த இளைஞர் நம்பிக்கையாக!
- பேராச்சி கண்ணன் படங்கள்: எஸ்.பி.பாண்டியன்
|