கணக்கு!
‘‘கலை, கடைவீதி போய்ப் பரிசுப் பொருள் வாங்கிட்டுப் போகணும். பெங்களூர் போய்ச் சேர குறைஞ்சது மூணு மணி நேரம் ஆகும். புறப்படு சீக்கிரம்!’’ என்றார் சிவாச்சலம்.‘‘ரெண்டு பேர் எதுக்கு? நீங்க மட்டும் போய்வாங்களேன்’’ என்றாள் கலையரசி.‘
‘ஏன், நீயும் வந்தா என்னவாம்?’’‘‘நம்ம வீட்டுக் கல்யாணங்களுக்கெல்லாம் சாமியப்பன் மட்டும்தான் வந்துட்டுப் போனார்!”“அதனாலென்ன, அவங்க வீட்டுக் கல்யாணத்துக்கு நாம ரெண்டு பேருமே போகலாம். தப்பில்ல!’’
‘‘கிஃப்ட் வாங்கணும்னு சொன்னீங்க. அவர் நம்ம பொண்ணு கோபிகா கல்யாணத்துக்கும் சரி, ரெண்டு பசங்க கல்யாணத்துக்கும் சரி வெறுங்கையோடுதான் வந்தார். மொய்கூட வைக்கல!’’ - தன் விருப்பமின்மைக்கான காரணத்தை முன் வைத்தாள் கலையரசி.
‘‘அதெல்லாம் சரி... இப்ப அவருடைய ஒரே பையனுக்கு கல்யாணம். முதல் தடவையா அவர் வீட்டு விசேஷத்துக்குப் போறோம். கல்யாணத்துக்குனு போற வகையில் நமக்கு ஒரு போக்குவரத்துச் செலவுதான். அவர் மூணு தடவை வந்து போயிருக்கார். மூணு மடங்கு அதிக செலவு. அது மட்டுமில்லாம, இது மாதிரி விசேஷங்களுக்குப் போறதால சொந்தபந்தங்களுக்கு இடையே உறவு பலப்படும். இதிலெல்லாம் வரவு செலவுக் கணக்கு பார்க்கக் கூடாதும்மா!’’ என்றார் சிவாச்சலம்.
பசி.ப.பரமசிவம்
|