ஐ. நா. தீர்மானம் இன்னொரு இனப்படுகொலை!
‘‘இதற்கு முன் சரித்திரம் இப்படியொரு அநீதியைப் பதிவு செய்ததில்லை’’ என்கிறார்கள் உலகெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள். கொலை செய்தவனையே நீதிபதியாக நியமித்து ‘ஆகச்சிறந்த’ தீர்ப்பை வழங்கியிருக்கிறது ஐ.நா. சபை. கொத்துக்குண்டுகள் வீசியும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியும், சித்திரவதைகள் செய்தும் கொல்லப்பட்ட பல்லாயிரம் இளைஞர்கள், பெண்கள், குழந்தைகளின் ஆன்மாக்கள் இந்த அவல நீதியைக் கண்டு துடிதுடிக்கின்றன. இது ‘ஐ.நா.வே முன்னின்று நடத்திய அரசியல் முள்ளிவாய்க்கால்’ என்று வெடிக்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள்.
‘இறுதிப்போரில், வெளிநாடுகளின் உதவியோடு இலங்கை நிகழ்த்திய படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்’ என்று இதுநாள் வரை குரல் கொடுத்துவந்த அமெரிக்காவும், இன்னபிற நாடுகளும்தான் இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்திருக்கின்றன. இலங்கையும் அதை இருகரம் தட்டி வரவேற்றிருக்கிறது.
‘காமன்வெல்த் உள்ளடங்கிய வெளிநாட்டு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், நீதி வல்லுனர்களும், விசாரணை அதிகாரிகளும் கொண்ட நம்பகத்தன்மை மிக்க விசாரணைக் குழுவை இலங்கை அரசே அமைத்து போர்க்குற்றங்களை விசாரிக்க வேண்டும்’ என்று கூறுகிறது அந்தத் தீர்மானம்,
‘இலங்கையில் தற்போது புதிய அரசு பொறுப்பேற்று நிலை மாறிவிட்டதால் இந்த விசாரணை நேர்மையாக நடக்கும் என்று நம்புவதாக’ சொல்கிறது இந்தத் தீர்மானம். ‘இது வெறும் கண்துடைப்பு’ என்று சில தமிழர் கட்சிகள் எதிர்க்கின்றன. சிங்களர்களும் இதை எதிர்க்கிறார்கள். ‘விசாரணையே கூடாது’ என்பது அவர்கள் கருத்து.
‘‘இந்தத் தீர்மானத்துக்குப் பின்னால் வலுவான சர்வதேச அரசியல் சூழ்ச்சி இருக்கிறது. முழுக்க முழுக்க இலங்கையைக் காப்பாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட தீர்மானம் இது. இதன் மூலம், சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே தன் மீதான விசாரணைக்கு ஒரு குழுவை அமைத்து தீர்ப்பளித்துக்கொள்ள வேண்டும். யாரை வேண்டுமானாலும் அவர்கள் நீதிபதியாக நியமிக்கலாம்.
இந்தோனேஷிய அரசு கிழக்கு திமோரில் 10 லட்சம் பேரை படுகொலை செய்தது. பாதிக்கப்பட்ட இனக்குழுவிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கு தனி நாடு வழங்கிவிட்டு அதன்பிறகு கலப்புத் தீர்ப்பாயம் அமைத்து விசாரணை நடத்தினார்கள். கம்போடியாவில் இனப்படுகொலையில் ஈடுபட்ட அரசு நீக்கப்பட்டு, ராணுவ நிர்வாகம் மாற்றப்பட்டு, அதன்பிறகு கலப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது.
ஆனால் இலங்கையில் நிர்வாகம், ராணுவம், அரசியல் சாசனம் எதுவுமே மாறவில்லை. 2006ல் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.என்.பகவதி தலைமையில் சர்வதேச நீதிபதிகள் குழு இலங்கையில் விசாரணை அமர்வு ஒன்றை நடத்தியது. ‘இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சி சொல்பவர்களுக்கும் சிறிதும் பாதுகாப்பில்லை. அவர்கள் விசாரணைக் குழுவை அணுகத் தயங்குகிறார்கள்’ என்று அந்தக்குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. ஒவ்வொரு தமிழனின் தலைக்கு நேராக ராணுவத்தின் துப்பாக்கி நீட்டிக்கொண்டிருக்கிறது. அங்கு நடக்கும் விசாரணையில் அவர்கள் எப்படி வந்து சாட்சி சொல்வார்கள்?
இலங்கை அமைக்கிற கலப்புத் தீர்ப்பாயம் எந்த லட்சணத்தில் விசாரணை நடத்தும் என்பதற்கு ஒரு உதாரணம், பண்டாரநாயகா கொலை வழக்குக்காக அமைக்கப்பட்ட கலப்பு தீர்ப்பாயம். இலங்கை, யு.ஏ.இ., கானா நாட்டு நீதிபதிகள் அடங்கிய அந்தத் தீர்ப்பாயம், இதுவரை தன் விசாரணையை முடிக்கவில்லை. இதை நான் ஐ.நா.சபையிலேயே சுட்டிக் காண்பித்தேன்.
இந்தத் தீர்மானத்தில் இன்னொரு அரசியல் விளையாட்டும் இருக்கிறது. இதுவரை இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றம் பற்றியே பேசி வந்தவர்கள், இந்தத் தீர்மானத்தில் விடுதலைப்புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என்கிறார்கள். சிறையிலிருக்கும் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையும், புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களையும் குற்றவாளிகளாக்கி கொன்றொழிப்பதே இதன் நோக்கம்.
தமிழர்களும் சிங்களர்களும் பகைமறந்து ஒற்றுமையாக வாழ வழிசெய்யும் நல்லிணக்கக் குழுவுக்கு சந்திரிகா தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆட்சிக் காலத்தில்தான் செம்மணி புதைகுழியிலிருந்து நூற்றுக்கணக்கான தமிழர்களின் பிணங்கள் அள்ளப்பட்டன. அவரின் கைப்பாவைதான் இப்போதைய அதிபர் சிறீசேனா. சம்பந்தன், சுமந்திரன், மாவை.சேனாதிராஜா போன்றோர் இந்த விஷயத்தில் சிறீசேனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பக்கத்துணை நிற்கிறார்கள். இவர்களின் ஒட்டுமொத்த துரோகத்தாலும் சர்வதேச ஒத்துழைப்பாலும் இலங்கையில் நடந்த அப்பட்டமான இனப்படுகொலை மறைக்கப்பட்டு விட்டது...’’ என்கிறார் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்.
‘‘தென் பிராந்தியத்தை சீனாவின் பிடியிலிருந்து மீட்டு தன் வசப்படுத்தத் துடிக்கும் அமெரிக்கா, அதற்காக தமிழர்களின் நீதியை பலிகொடுத்து விட்டது...’’ என்று விமர்சிக்கிறார் மூத்த ஊடகவியலாளரும், ஈழ விவகாரத்தில் தேர்ந்த புரிதலுடையவருமான அய்யநாதன். ‘‘மார்டி அட்டிஸாரி, சில்வியா கார்ட்ரைட், அஸ்டா ஜஹாங்கிர் ஆகியோர் அடங்கிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக் குழு இலங்கையில் தீவிரமாக விசாரணை நடத்தி, 262 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் இலங்கையில் நடந்த அத்தனை கொடூரங்களும் தெள்ளத் தெளிவாக பதிவாகியுள்ளன.
அந்த அடிப்படையில்தான் மனித உரிமை ஆணையம் சர்வதேச விசாரணையைக் கோரியது. ஆனால் இப்போது பெரும் சமரசம் நடந்துள்ளது. இலங்கையை ஆட்கொள்ளத் துடிக்கும் சர்வதேச அரசியலே இதன் பின்னணியில் இருக்கிறது. இனப்படுகொலை நடந்தபோது அமைச்சராக இருந்த சிறீசேனா, இப்போது அதிபர். ராணுவத்துக்கு தலைமை வகித்த சரத் பொன்சேகாவுக்கு ஃபீல்டு மார்ஷல் பட்டம் கொடுத்து அழகு பார்க்கிறார்கள்.
போரில் முக்கிய பங்காற்றிய ஜெகத் டயஸ், இப்போது ராணுவத் தளபதி. நிர்வாகம், ராணுவம் உள்பட அனைத்திலும் குற்றத்தில் பங்காற்றியவர்களே நிறைந்திருக்கும்போது, இலங்கையே நிர்மாணித்து நடத்துகிற விசாரணை எப்படி நேர்மையாக நடக்கும்? இதைக் குழந்தைகள் கூட ஏற்றுக்கொள்ளாது. அமெரிக்கா தன் லாபத்துக்காக நியாயத்தை பலியிட்டு வரலாற்றில் கருப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டிருக்கிறது...’’ என்கிறார் அய்யநாதன்.
உலகத் தமிழர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் ஐ.நா. தீர்மானம் பொய்த்துப் போகச் செய்திருக்கிறது. வணிகமும், ஆதிக்க வெறியும், லாப நோக்கமுமே உலகத்தின் கொள்கைகளாக மாறிப்போன பிறகு நியாயமாவது? நீதியாவது?
- வெ.நீலகண்டன்
|