தங்கமகன்அப்பாவின் மரணத்திற்குக் காரணமானவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ‘தங்கமகன்’தான் தனுஷ். ‘வேலையில்லாத பட்டதாரி’ என்ற வெற்றிப்படத்தை முடித்துக் கொடுத்த கையோடு வேல்ராஜ் மற்றும் தனுஷ் இணைந்திருக்கும் இரண்டாவது படம். விளையாட்டுப்போக்காக நண்பர்களோடு சேர்ந்து வளர்கிறார் தனுஷ்.

கோயிலுக்குச் சென்ற வகையில் அங்கேயே எமி ஜாக்ஸனை விரட்டி காதலில் விழுகிறார். காதல் அப்படியே கல்யாணத்திற்கு மாறும் வேளையில் பிரிவு வந்து சேர, கடைசியாக பெற்றோர் நிச்சயித்த சமந்தாவை மணக்கிறார். அலுவலகத்தில் வேலை பார்க்கும் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் தற்கொலை செய்து கொள்ள, அதற்கான ஆதாரங்களைச் சேகரிக்கக் கிளம்புகிறார்... கண்டுபிடித்தாரா, தகப்பனின் மீதான பழியைத் துடைத்தாரா என்பது இறுதிச் சுற்றுக் கதை.

பார்த்துப் பார்த்துப் பழகிய கதை என்றாலும், ஏழெட்டு கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு சின்னச்சின்ன கலகல வசனங்களால் படத்தை ஆரம்பகட்டங்களில் வெகுவாக ரசிக்க வைக்கிறார் இயக்குநர். எமியை விரட்டி விரட்டிக் காதலிப்பது, வர்ணித்து வர்ணித்து சரண்டர் செய்ய வைப்பது, வேடிக்கையாக முதலாண்டு காதல் சொல்லிய தினத்தை கொண்டாட வெளியூர் போன நேரத்தில் காதலையே முறித்துக்கொள்வது எல்லாம் ரசனை அத்தியாயங்கள்.

தனுஷுக்கு இது ‘ப்பூ’ என உதறித் தள்ளக்கூடிய கேரக்டர். அதை செய்தும் காட்டுகிறார். மீசையில்லாத இளவயது(!) தனுஷ் அரட்டையில் உச்சமாய் இருந்தாலும், என்னவோ மேக்கப்பில் ஒட்ட மறுக்கிறது. அவர் ‘வெயிட்’டுக்கு தக்க ரோல்தான் படத்தில் இல்லை. ஆனால் எமி, சமந்தா இரண்டு பேருக்கும் கொடுக்கும் எண்ணிக்கையில்லாத முத்தங்களுக்கு மட்டும் குறைவே இல்லை. குடும்பப்படம் என்றாலும் முத்த மொத்த கிளுகிளுப்புக்கு பஞ்சம் இல்லை.

எமி இந்தத் தடவை கொஞ்சம் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் கவனத்துக்கு வரும் அவர், உணர்ச்சிவசப்பட்டு அழும் காட்சிகளில் பரிதாபப்பட வைக்கிறார். ஏன் பிரிகிறோம் என்று ெசால்லியே பிரியும் எமி, இறுதியில் அதற்காக பிரியவில்லை என்பது குழப்பம்.சமந்தா படம் முழுக்கவே செம க்யூட். கணவர் தனுஷுடன் நெருக்கம் அணுக்கம் காட்டும் காட்சிகளில் மெச்சத்தக்க இயல்பு. பென்சில் அழகிக்கு நன்றாகவே கை ெகாடுக்கிறது அவரது கேரக்டர். அலுப்பு சலிப்பில் கொஞ்சம் திணறும் படத்தைக் காப்பாற்றுவது சமந்தாவின் கிறக்கக் கண்களும், ஹனி ஸ்ைமலும்.

காதலும், வீட்டிற்கு அடங்கிய கலகலப்புமான இளைஞனாக வலம் வரும் தனுஷ் இருக்கிறவரை நகரும் திரைப்படம், அதற்குப் பிறகு மெதுவாகவே நகர்கிறது. காதல், முறிவு, திருமணம், அப்பா மறைவு என ஒரு நிமிடத்தையும் வீணாக்காத முன்பாதி திரைக்கதை பின்பகுதியில் ஏன் அவ்வளவு தடுமாறுகிறது? அப்பாவின் இறப்பிற்குக் காரணமான பணத்தை எடுத்தது அத்தை மகன் என்பதை தனுஷ் கண்டுபிடிக்கும் புத்திசாலித்தனத்தை, இன்னும் பவர்ஃபுல் ஃப்ளாஷ்பேக்காக  படம் பிடித்துக் காட்டியிருக்கலாம்.

கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா சரத்குமார் அசல் அப்பா - அம்மாவாகவே உருவெடுத்திருக்கிறார்கள். ரொம்பவும் எதிர்பார்த்த ‘பீப்’ புகழ் அனிருத், பாடல்
களில் கட்டாய ஓய்வு தருகிறார். இந்தத் தடவை ‘பொயட்டு’ தனுஷும் பின் வாங்கியிருக்கிறார். ஒளிப்பதிவில் குறை வைக்கவில்லை அறிமுக குமரன்.
இரண்டாம் பகுதியை செதுக்கியிருந்தால் இன்னும் தங்கமகன் ஜொலித்திருக்கலாம்!

- குங்குமம் விமர்சனக் குழு