குட்டிச்சுவர் சிந்தனைகள்



டிராபிக் லைட்டில் பச்சை விழும் முன்பே இச்சையை அடக்க முடியாமல் முந்திப் பறப்பார்கள். போலீசாரைக் கடந்தவுடன் ஹெல்மெட்டை தூக்கி பெட்டியில் ஒளிப்பார்கள். இலவசத்தை ஒழிக்கணும்னு உதார் விட்டு விட்டு, ஏழைகளுக்காக அரசு தந்த இலவச வண்ணத் தொலைக்காட்சியை அரை விலைக்குக் கேட்பார்கள். பிளாட்பார விபத்து வழக்கில் சல்மான் கான் விடுதலையை விமர்சித்துவிட்டு, சாலையில் பார்க்கும் விபத்துகளை சலனமின்றிக் கடப்பார்கள்.

காரியங்கள் சாதித்துக்கொள்ள கையூட்டு தருவார்கள். புகழ்கிறேன் என சொல்லி பொய்யூத்தி வைப்பார்கள். பதின்ம வயதுக்காரன் பரிமாற, வாழையிலையில் வயிறார விருந்துண்பார்கள். ரத்த உதவி கேட்டு வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் குரூப்பில் போட்டுவிட்டு புண்ணியம் தேடுவார்கள். பேஸ்புக்கில் பத்தாயிரம் பேரை நண்பர்களாக்கிக்கொண்டு பக்கத்துப்ளாட்காரர் பெயரைக் கேட்டால் முழிப்பார்கள். கோக்கை குடித்துக்கொண்டே கையேந்தி பவனின் சுகாதாரம் அளப்பார்கள். பொருளாதாரம் பற்றி வகுப்பெடுத்துவிட்டு ஃப்ரீ wifi பாஸ்வேர்டு கேட்பார்கள். பஸ்ஸிலும் பார்க்கிலும் பிறர் பார்க்கும்போதே பொட்டலம் பிரித்து உணவு உண்பார்கள்.

டாக்கிங் டாமை கொஞ்சும் நேரத்தில் கொஞ்ச நேரம் கூட வேலைக்கார்கள் குழந்தைகளைக் கொஞ்சுவதில்லை. கேட்பது நண்பனாக இருந்தாலும், கடனைப் பற்றி கதைகள் பேசிவிட்டு கை விரிப்பார்கள். பின்னால ஃப்ளைட்டே வந்தாலும், நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு நினைத்த இடத்தில் திரும்புவார்கள். போக்குவரத்து நெரிசல் எனத் தெரிந்தும் ஓயாமல் ஹாரன் அடிப்பார்கள். முழு போதையில் கணக்கு தவறென டாஸ்மாக் சப்ளையரிடம் வம்பிழுப்பார்கள்.
அன்று சந்தித்த அழகான பெண்ணை, இரவு கனவினில் இல்லத்தரசியாக்கிக் கொள்வார்கள்.

தவறாக யாரேனும் குறுக்க வந்தால் கூட, மனசுக்குள் கெட்ட வார்த்தை சொல்லிப் பார்ப்பார்கள். குறுக்கு வழிகளை குழந்தைகளுக்கும் சொல்லித் தருவார்கள். பிள்ளைகள் மனதில் போட்டி, பொறாமைகளைப் பதிய வைப்பார்கள். நீண்ட நெடிய வரிசையில் இடையில் நுழைய வாய்ப்பிருக்கா என பார்ப்பார்கள். கர்ப்பிணியோ கிழவியோ நின்றே பயணிப்பதைப் பார்த்தாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வார்கள். கவுன்சிலரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு காந்தியையும் காமராஜரையும் கக்கனையும் கிழிப்பார்கள்.  வீட்டுக்குள் வெள்ளம் வராவிட்டால் கூட, நிவாரண நிதிக்கு பேர் கொடுப்பார்கள்.

பெரியாரின் பேரன் போல பேசினாலும், ஜாதி தேர்ந்தபின்தான் பழகுவார்கள். நேர்மை, நாணயம் பேசிக்கொண்டே, சிபாரிசு கிடைக்குமா என தேடிப் போவார்கள். மன அமைதிக்கு யோகா கிளாஸ் சென்று விட்டு, வெளியே டூ வீலரில் யாராவது உட்கார்ந்திருந்தால் சண்டைக்குப் போவார்கள். திரையுலகம் தவறான வழியில் செல்கிறதென விமர்சித்தபடி திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

இப்படியாக எல்லாவற்றையும் மறக்காமல் மாறாமல் செய்துகொண்டே, மாற்றம் வேண்டுமென, ஒழுங்காகப் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசியலுக்கு அழைப்பார்கள். மாற்றங்கள் மற்றவர்கள் கொண்டு வருவதல்ல; என்னை நானும் உன்னை நீயும் மாற்றினால், நாம் உலகை மாற்றலாம்.

இது ஒரு ‘பீப்ப்ப்ப்’ கட்டுரை. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் இந்த உலகமே ‘பீப்ப்ப்’ல்தான் உழல்கிறது, சுழல்கிறது, இயங்குகிறது.  ‘பீப்ப்ப்ப்’ இல்லாமல் வாழ்வதெல்லாம் வாழ்க்கையே இல்லை. வாழ்வில் ஒரு முறையாவது ‘பீப்ப்ப்ப்’பை கடந்து போயிருக்காவிடில், நாம் வாழும் வாழ்க்கைக்கே அர்த்தமில்லை. ‘பீப்ப்ப்ப்’களை தவிர்க்க முடியாது, ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தங்கள் வாழ்வில் ஒரு ‘பீப்ப்ப்ப்’பையாவது கடக்கும் அற்புத வாய்ப்பு அமைந்திருக்க வேண்டும். ‘பீப்ப்ப்ப்’ காலத்தின் கட்டாயம், ‘பீப்ப்ப்ப்’ வாலிபத்தை வரவேற்கும் நிகழ்வு, ‘பீப்ப்ப்ப்’ ஒரு நிகழ வேண்டிய அதிசயம்.

திருவள்ளுவர் முதல் வாலி, வைரமுத்து வரை ‘பீப்ப்ப்ப்’ பற்றி எழுதியிருக்கிறார்கள். இன்று முளைக்கும் காளான்கள் கூட ‘பீப்ப்ப்ப்’பை முதலாகக் கொண்டு தங்கள் மொக்கை கவிதைகளையும் கட்டுரைகளையும் ஆரம்பிக்கிறார்கள். அகநானூறு முதல் அ.முத்துலிங்கம் கவிதைகள் வரை ‘பீப்ப்ப்ப்’ பாடுபொருளாகவும் எழுதும் மையமாகவும் இருந்திருக்கிறது. வருடத்தில் வரும் 150 சொச்ச தமிழ்ப் படங்களில் ‘பீப்ப்ப்ப்’தான் கருவாகவும், எருவாகவும், உருவாகவும், ஏன்... கன்னத்தில் வைக்கும் மருவாகவும் இருக்கிறது. மெகா சீரியல்களில் பல பிரச்னைக்கும் பல தீர்வுகளுக்கும் காரணமாய் அமைவதும் ‘பீப்ப்ப்ப்’தான்.

டி.வி.யில் ஓடும் பாடல்களில் 90% பாடல்கள்  ‘பீப்ப்ப்ப்’ பற்றியதாகவே இருக்கும். இத்தகைய புனிதமான ‘பீப்ப்ப்ப்’பை ஏன்தான் பெற்றவர்களுக்குப் பிடிக்காமல் போகிறதோ? அடுத்த வீட்டில் இருக்கும் ‘பீப்ப்ப்ப்’பை பார்த்து ரசிக்கும் அதே சமூகம்தான், திரையினில் டி.வியினில் ‘பீப்ப்ப்ப்’பை ரசிக்கும் அதே சமூகம்தான், கதைகளில் காவியங்களில் ‘பீப்ப்ப்ப்’பை ரசிக்கும் அதே சமூகம்தான், தங்கள் வீடுகளில்  ‘பீப்ப்ப்ப்’ இருந்தால் மட்டும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது! புரிதல்தான் ‘பீப்ப்ப்ப்’ என்று முதலில் புரிந்துகொள்ளுங்கள். ‘பீப்ப்ப்ப்’ தவறல்ல, தப்பான வயதிலும் தவறான நபர்களிடமும் தள்ளி வைக்க வேண்டியது மட்டுமே. ‘பீப்ப்ப்ப்’பை தாமதிக்கலாம், ஆனா தவிர்க்கக் கூடாது.

(பின்குறிப்பு: பெரும்பாலான வீடுகளில் ‘காதல்’ என்பதே கெட்ட வார்த்தையாக பாவிக்கப்படுவதால், இதில் ‘காதல்’ என்ற வார்த்தை சென்சார் செய்யப்பட்டு, ‘பீப்ப்ப்ப்’ என்ற ஒலி சேர்க்கப்பட்டுள்ளது.)

கடைகளில் 18 வயசுக்குக் கீழே இருக்கிறவங்களுக்கு சிகரெட் விற்பது தவறு. டாஸ்மாக்கிலோ, பாரிலோ 18 வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு  மது விற்பதோ வழங்குவதோ சட்டப்படி குற்றம். சினிமா தியேட்டர்களில் 18 வயசுக்குள்ள இருக்கிறவங்க ‘ஏ’ சர்டிபிகேட் படங்கள் பார்க்க முடியாது. மீறி பார்ப்பது சட்டப்படி குற்றம். 18 வயசுக்குள்ள இருக்கிறவங்களுக்கு கார் ஓட்டவோ, டூ வீலர் ஓட்டவோ லைசென்ஸ் கிடைக்காது. மீறி ஓட்டுனா சட்டப்படி குற்றமாகும். இவ்வளவு ஏன், 18 வயசுக்குள்ள இருக்கிறவங்க கல்யாணம் செஞ்சா கைது செய்யலாம் என சட்டம் சொல்கிறது. இதையெல்லாம் சொல்லும் அதே சட்டம்தான், 18 வயசுக்குள்ள வன்புணர்வும் கொடூரக் கொலையும் செஞ்சா விட்டுடும் போலிருக்கு!                                  

ஆல்தோட்ட பூபதி