ஃபேன்டஸி கதைகள்!



செல்வு @selvu

வேறொன்று செய்


தீயில் இறங்கிச் சத்தியம் செய்தாலும் கூட அவள் சொல்வதை யாரும் நம்புவதாகத் தெரியவில்லை. பின்னே, ‘இந்த அலுவலகத்தில் இருக்கும் ஒரு டைப்ரைட்டிங் மெஷின், அவளை வேலையை விட்டுத் துரத்தத் திட்டமிட்டுச் சதி செய்கிறது’ என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்?அலுவலகத்தில் இருக்கும் நான்கு டைப்பிஸ்ட்டுகளில் அவள்தான் சீனியர். வேகமாகவும், துல்லியமாகவும் டைப் அடிக்கக் கூடியவள். இப்படி படபடவென டைப்படிக்கும் அவளது வாழ்க்கை கடகடவென்று போய்க்கொண்டிருந்தபோது எதிர்பாராத திருப்பமாக அவளது டைப்ரைட்டிங் மெஷினே வில்லனாகக் களமிறங்கியது.

திடீரென ஒருநாள் அவள் டைப் அடித்தது ஒன்றாகவும், பேப்பரில் பிரின்ட் ஆனது வேறொன்றாகவும் இருந்தது. அதாவது ‘அன்புள்ள’ என்று அடித்தால் பேப்பரில் ‘சாம்பார் சாதம்’ என்று வந்தது. சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை. டைப்ரைட்டிங் பழகிய காலங்களில் கீ போர்டைப் பார்த்து, ஒவ்வொரு எழுத்தும் எங்கிருக்கிறது என்று தேடித் தேடி அடித்திருக்கிறாள்.

டைப்ரைட்டிங்கில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்ட இந்த ஆறேழு வருடங்களில் கீ போர்டைப் பார்த்ததே கிடையாது. டைப் அடிக்க வேண்டிய எழுத்துப் பிரதியில்தான் கண்கள் இருக்கும். கீ போர்டிலோ, டைப்பாகிக் கொண்டிருக்கும் பேப்பரிலோ கண்கள் பதியவே பதியாது. அத்தனை வேகமாக அடிக்கக் கூடியவள். முதல் ஓரிரு வருடங்களில் சிறுசிறு பிழைகள் ஏற்பட்டது உண்மைதான் என்றாலும், கடந்த நான்கைந்து வருடங்களாக ஒரே ஒரு சின்ன தவறினைக்கூட செய்ததில்லை.

இந்தப் பிரச்னையை யாரும் நம்பாவிட்டாலும் தொடர் முயற்சிகளின் பயனாக அவளே ஒன்றைக் கண்டுபிடித்தாள். பெரும்பாலும் சரியாக வேலை செய்யும் அவளது டைப்ரைட்டிங் மெஷின், எப்பொழுதாவது அவள் டைப் செய்வதை விட்டுவிட்டு வேறொன்றை பிரின்ட் செய்தது. எதற்காக திடீரென இப்படி மாறிக் கொள்கிறது எனப் புரியவில்லை. அவள் டைப் அடிப்பதை யாராவது வந்து பார்த்தால் அது சரியாகிவிடுகிறது. அதாவது அவள் அப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்று நிரூபிப்பதற்காக யாரையாவது அழைத்து வந்து டைப் அடித்துக் காட்டி விளக்க நினைத்தபோதெல்லாம் அது அந்தத் தவறினைச் செய்யவே இல்லை. அப்புறம் யார்தான் அவளை நம்புவார்கள்?

அந்த மெஷினால் தான் வேலையை இழப்பது நிச்சயம் என்று அவள் நினைத்துக்கொண்டாள். அது வேண்டுமென்றே தவறாகப் பிரின்ட் செய்கிறது என்பதை இவளால் நிரூபிக்கவே முடியவில்லை. ஏனென்றால் அது எப்பொழுதாவதுதான் அப்படிப் பிரின்ட் செய்தது. பிறகு அதுவே சரியும் ஆகிக் கொண்டது. பேப்பர்கள்தான் அதிகளவில் வீணானது.

சீனியர் டைப்பிஸ்ட் என்பதால் திடீரென அதிரடி முடிவுகள் எதுவும் எடுத்துவிட மாட்டார்கள் என்ற ஒரு நம்பிக்கைதான் அவளின் ஆறுதல்.
ஒரு வாரத்திற்குப் பிறகு வேறொரு பிரச்னை. இந்த முறை மொழியையே மாற்றியிருந்தது. அந்த டைப்ரைட்டிங் மெஷினில் தமிழ் மட்டும்தான் இருக்கும். இந்த முறை அது ‘அன்புள்ள’ என்ற உள்ளீட்டிற்கு இந்தியிலும், தெலுங்கிலும், ஹீப்ரூவிலும் பிரின்ட் செய்து படம் காட்டியது. தன் ஜாதகத்தில் இருக்கும் பன்னிரண்டு கட்டங்களிலும் சனி பகவானே சம்மணமிட்டு அமர்ந்துவிட்டாரென்று அவளுக்குத் தோன்றியது.

இப்படி வேறொரு மொழியை பிரின்ட் செய்ததில் இவளுக்கு ஒரு நல்லதையும் செய்திருந்தது அந்த மெஷின். ஆமாம். இப்பொழுது அவள் சொல்வதை எல்லோருமே நம்பினார்கள். வெறும் தமிழ் மட்டுமே இருக்கும் ஒரு மெஷினில் இருந்து எப்படி வேறு மொழிகள் எல்லாம் வரமுடியும்? சரி, அந்த மெஷினில் என்ன காரணமோ இருந்துவிட்டுப் போகட்டும் என்று புது மெஷின் ஒன்றை வாங்கினார்கள்.

அதுவும் அந்தப் பழைய மெஷினைப் போலவே அடிக்கடி வேறொன்றைப் பிரின்ட் செய்தது.
நிச்சயமாக வேலை போய்விடுமே என அழுது அரற்றிக் கொண்டிருந்தபோது மேனேஜர் ரூமிலிருந்து அழைப்பு வந்தது. என்னவென்று விசாரிக்கப் போனபோது அங்கே அவர் ஆபீஸ் பாயை வாணலியில் போட்டு வறுத்துக் கொண்டிருந்தார். பொன்னிறமாகச் சிவந்த பிறகு எப்படியும் இறக்கி வைத்துவிடுவார் என்று காத்துக் கொண்டிருந்தாள். ‘‘உன்னை டீதானே வாங்கிட்டு வரச் சொன்னேன்? எதுக்கு காபி வாங்கிட்டு வந்த? குடுத்த வேலைய எப்பவுமே ஒழுங்கா செய்ய மாட்டியா?’’ என்று கடும் வெப்பநிலையில் தாளித்துக் கொண்டிருந்தார்.

‘‘குடுத்த வேலையை விட்டுட்டு வேறொன்றைச் செய்றது தப்புல்ல’’ என்று மேனேஜர் அவனிடம் சொன்னபோது, அந்த அறைக்குள் ஒரு வெளிச்சம் மின்னி மறைந்தது. வேறொன்றுமில்லை. இவள் தனது டைப்ரைட்டிங் மெஷின் செய்யும் பிரச்னைக்கான காரணத்தைக் கிட்டத்தட்ட கண்டுபிடித்துவிட்டதால் இவளது மூளையில் எரிந்த பல்பின் வெளிச்சம்தான் அது.

அப்படி அவள் என்னதான் கண்டுபிடித்தாள்? அந்த மெஷினும் அதற்குக் கொடுத்த வேலையை விட்டுவிட்டு வேறொன்றைச் செய்கிறது. அதற்குக் காரணம் என்னவென்றால், எப்பொழுதெல்லாம் இவளுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை விட்டுவிட்டு வேறொன்றைச் செய்ய ஆரம்பித்தாளோ, அப்பொழுதெல்லாம் அந்த மெஷினும் அதில் டைப் செய்ததை விட்டுவிட்டு வேறொன்றைப் பிரின்ட் செய்தது. அதாவது, அந்த மெஷின் தவறாகப் பிரின்ட் செய்த நான்கைந்து முறைகளிலுமே அந்த வேலைகள் எதுவும் இவளுக்குக் கொடுக்கப்பட்டவை இல்லை.                  

அன்புள்ள’ என்று அடித்தால் பேப்பரில் ‘சாம்பார் சாதம்’ என்று வந்தது. சத்தியமாக ஒன்றுமே புரியவில்லை.