சுந்தர் சி.யின் ‘அரண்மனை 2’ ஸ்பெஷல்



ரியல் ஹீரோ சித்தார்த்... ரெகுலர் ஹன்சிகா... கிளாமர் த்ரிஷா

‘‘என் படங்கள்ல முடிவு எப்பவும் சுபமா இருக்கும். ‘அரண்மனை’ படத்தோட க்ளைமேக்ஸிலும் அப்படி ஒரு ஹேப்பி ஃபினிஷிங்தான் வச்சிருந்தேன். அப்புறம்தான் அது பேய்ப் படம்ங்கறதை ஞாபகப்படுத்தட்டுமேனு ஜன்னல்ல ஒரு பேய் நிற்கற மாதிரி முடிச்சிருந்தோம். 

மத்தபடி பார்ட் 2 ஆரம்பிக்கற எந்த ஐடியாவும் இல்லை. ஆனா, அதைப் பார்த்த எல்லாருமே ‘அரண்மனை2’ எப்போன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு கட்டத்துல என் பொண்ணுங்களே ‘அரண்மனை 2’வைக் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க!’’ - கலகலப்பாகப் பேசுகிறார் சுந்தர் சி. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது அலுவலகத்தின் எல்லா திசைகளிலும் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் புத்தர்.  மினியேச்சர் போதி மரங்களால் அழகில் மிளிர்கிறது அறை!

‘‘ ‘சந்திரமுகி’, ‘அருந்ததி’ டைப்ல ஒரு கிராண்ட் ஹாரர் படம் பண்ணலாமேனு தொடங்கினதுதான் ‘அரண்மனை’. அந்தப் படம் நல்லா ஓடும்னு நெனச்சேன். ஆனா, பெரிய வெற்றியாகும்னு எதிர்பார்க்கல. ரிலீஸ் ஆன முதல் நாள், ‘பேயா நடிச்சிருக்கேனே.. ரிசல்ட் எப்படி இருக்குமோ?’னு ஹன்சிகாவுக்கு டென்ஷன்ல காய்ச்சலே வந்திடுச்சு. நான் எதைப் பத்தியும் கவலைப்படாம, விஷாலின் ‘மதகஜராஜா’ ஷூட்டிங்ல இருந்தேன். சரியா மதியம், விஷால்கிட்ட இருந்து போன். ‘படம் சூப்பர் ஹிட்... எல்லா இடத்திலும் பிரமாண்ட ஓபனிங் சார்.. கலக்குறீங்க’னு விஷால்தான் முதல் தகவல் சொன்னார். எனக்கு சந்தோஷமான அதிர்ச்சி!’’  ‘‘அப்புறம் எப்படி உருவாச்சு ‘அரண்மனை 2’?’’

‘‘எல்லாரும் கேட்டுட்டாங்களேனு ஆரம்பிச்சிட முடியாதே! சரியான கதை அமையணும். ஸ்கிரிப்ட் வொர்க்குக்காகவே அஞ்சு மாசம் டைம் எடுத்துக்கிட்டோம். ‘அரண்மனை 2’ வொர்க் ஆரம்பிச்சதுமே, ‘சார் இது என்னோட படம். நான் இருக்கணும்’னு ஹன்சிகா சொல்லிட்டாங்க. இன்னொரு ஸ்ட்ராங்கான ஹீரோயினுக்கு த்ரிஷா.

முதல் பாகம் படத்தை வெளியே இருந்து பார்க்குறப்போ ஹீரோயின் சப்ஜெக்ட் மாதிரிதான் தெரியும். ஆனா, ஹீரோவுக்கான ஸ்கோப் அதுல அதிகம். அதுல வந்த சின்னச் சின்ன கேரக்டருக்குக்கூட முக்கியத்துவம் இருக்கும். ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில இருந்து சித்தார்த்தை தெரியும்ங்கிறதால அவர் கமிட் ஆனார். அவர் ஒரு சூப்பர் நடிகர். அரண்மனை குடும்பத்தில் ஒரு ஆளா வர்றார்.

மத்தவங்க கேரக்டர் பத்தி சொன்னா, கதை ஓப்பன் ஆகிடும்னு பயமா இருக்கு. என் படங்கள்ல காமெடி நல்லா இருக்கும்ங்கிற பேரு என் தலை மேல பாரம் மாதிரி இருக்கு. அதைத் தக்க வச்சிக்கணும்னு ரொம்பவே மெனக்கெடுறோம். நான் காமெடி ட்ராக் பண்ணினதில்ல. கதையோடு இணைந்த சீக்குவென்ஸ் காமெடிதான் எப்பவுமே. முதல் தடவையா என் படத்துல சூரி நடிச்சிருக்கார்.

அவரை ரொம்ப வருஷமா தெரியும்னாலும், படங்கள் பண்றது மிஸ் ஆகிட்டே இருந்தது. ‘அண்ணே எல்லா படத்துலயும் நம்ம காம்பினேஷன் தொடரணும்’னு சூரியே சொல்ற அளவுக்கு இதில் காமெடி பிரமாதமா வந்திருக்கு. பூனம் பஜ்வா இருக்காங்க. ரொம்ப நாளைக்கு அப்புறம் கிளாமரான த்ரிஷாவைப் பார்க்கலாம். கராபி தீவுல ஷூட் பண்ணின பாடல்ல த்ரிஷா கிளாமர்ல கலக்கியிருக்காங்க!’’

‘‘முதல் பாகத்துக்கும் இதுக்கும் தொடர்பு உண்டா?’’‘‘இல்லை. ஆனா, அதைவிட விறுவிறுப்பா, காமெடியில பின்னியெடுக்கும். அதுல மனோபாலாவும் கோவை சரளாவும் கணவன் - மனைவியா நடிச்சிருப்பாங்க. இதுல அக்கா தம்பி. நானும் நடிச்சிருக்கேன். முதல் பார்ட் தொடர்ச்சி மாதிரிதான் இதுலயும் என் கேரக்டர்.  முதல் பாகம் பண்ணும்போது அரண்மனைக்காக பல இடங்கள்ல தேடி அலைஞ்சோம். ஐதராபாத்ல ஒரு அரண்மனை கிடைச்சது. அந்த இடம் கிட்டத்தட்ட வெறும் தரை மட்டும்தான் இருந்துச்சு. ஸோ, முழுக்க அதை ரீமாடல் பண்ணினோம்.

பார்ட் 2வுக்கு அதைவிட பிரமாண்ட அரண்மனை தேடினோம். ஐதராபாத், ஜெய்ப்பூர்னு எங்கே தேடியும் நெனச்ச மாதிரி அமையல. அதனால செட் போட்டு பிரமாண்டமா உருவாக்கிட்டோம். ஒரு இயக்குநரா எனக்கு எந்த அளவு வேலையோ, ஆர்ட் டைரக்டர் குருராஜுக்கும், கேமராமேன் யூ.கே.செந்தில்குமாருக்கும் அந்த அளவு வேலை இருந்துச்சு. என் சென்டிமென்ட் ஒளிப்பதிவாளர் அவர். என் இணை இயக்குநர் வெங்கட், இந்தப் படத்திற்கான கதை, காமெடி போர்ஷனை எழுதியிருக்கார். அடுத்து என் பேனர் மூலம் அவர் இயக்குநராகிறார். உதயன் எழுதியிருக்கற வசனம், கலக்கலா வந்திருக்கு. ஜனவரி 29ல ரிலீஸ் பண்றோம்!’’
‘‘சித்தார்த்..?’’

‘‘சினிமாவில் வர்ற ஒரு புரட்சி இளைஞன் மாதிரிதான் நிஜ சித்தார்த். சமுதாயத்தில் நடக்குற விஷயங்களைக் கண்டு ரொம்பவும் கோபப்படக்கூடியவர். நாம கண்டுக்காத விஷயத்தில் கூட ‘இப்படி பொறுப்பில்லாமல் இருக்காங்களே’னு வெகுண்டு எழுவார். இந்த மழை, வெள்ளத்தில் கூட அவர் ரியல் ஹீரோனு பெயர் வாங்கினது எனக்கு சந்தோஷம்... பெருமை!’’‘‘ஹன்சிகா உங்க ஃபேவரிட் ஆகிட்டாங்களே?’’

‘‘ஆமாம். ஒரு ப்ராஜெக்ட் தொடங்கும்போது, ‘ஹீரோ யாரு’னு ஹன்சிகா கேப்பாங்க. ஹீரோயின் யாருனு அவங்க என்கிட்ட கேட்குறதில்ல. ஹன்சிகாதான்னு அவங்களே முடிவு பண்ணிக்குறாங்க. ஹன்சிகாவோட ரெகுலரா படங்கள் பண்றதால நல்ல அண்டர்ஸ்டாண்டிங் அமைஞ்சிடுது. ஹன்ஸ் என் படங்களின் ஹீரோயின்ங்கறதை விட, என் மகள்களின் ஃப்ரெண்ட்... எங்க ஃபேமியில ஒருத்தர்னு ஆகிட்டாங்க. அவங்களுக்கு டைமிங் எல்லாம் இல்லை. சாயங்காலம் பேக்கப் பண்ற டைம்ல, ‘ஒரு ஷாட் பேலன்ஸ் இருக்கு’னு சொன்னால் கூட, ‘ஓகே’னு சிரிச்ச முகமா ரெடி ஆகிடுவாங்க. அந்த டெடிகேஷன் அவங்க ப்ளஸ்!’’
‘‘படத்துக்காக போடப்பட்ட பிரமாண்ட அம்மன் சிலை லிம்கா ரிக்கார்ட் பண்ணியிருக்காமே?’’

‘‘ஆமாம்.  ‘ஆம்பள’ படத்துல ஹிப்ஹாப் தமிழாவை இசையமைப்பாளர் ஆக்கியிருந்தேன். இந்தப் படத்துக்கும் அவங்கதான் இசை. க்ளைமேக்ஸ்ல வர்ற அம்மன் பாட்டு எப்படி இருக்கணும்னு ஆதிகிட்ட சொன்னேன். அவர் இசையமைச்ச அந்த அம்மன் பாட்டைக் கேட்ட பிறகுதான், பிரமாண்டமான அம்மன் சிலை செட் போடணும்னு தோணுச்சு.

இதுவரை இந்தியாவிலேயே இல்லாத அம்மன் சிலை உருவாக்கணும்னு விரும்பினேன். 125 அடி அம்மன் சிலை. அம்மனை நிற்க வச்சா, ஃபிரேம்லயே வைக்க முடியாது. இப்போ இருக்கற கிராஃபிக்ஸ் யுகத்துல, இதெல்லாம் கிராஃபிக்ஸ்லயே பண்ணிட்டோம்னு ஈஸியா சொல்லிடுவாங்க. பொள்ளாச்சி பக்கமெல்லாம் படுத்த நிலையில் அம்மன் இருக்கும். அதனால படுத்த மாதிரி செட் போட்டோம். பார்த்தவங்க எல்லாருமே பிரமிச்சிட்டாங்க. அது லிம்கா ரெக்கார்ட் வரை வந்திடுச்சு. பிறைசூடன் எழுதியிருக்கும் அந்தப் பாடலைக் கேட்டா, இப்பவும் எனக்கு புல்லரிக்குது!’’

‘‘2015 எப்படி அமைஞ்சது?’’‘‘சென்னை மழை, வெள்ளம்தான் மறக்க முடியாத பாதிப்பை ஏற்படுத்திருச்சு. அத்தனை கஷ்டத்திலும் துன்பத்திலும் சென்னை மக்கள் ஒண்ணா நின்னு உதவி செஞ்சது நெகிழ்ச்சி.  ‘அரண்மனை’ எனக்கு நல்லா அமைஞ்சுது. ரொம்ப நாளைக்கு அப்புறம் போன ஏப்ரல், மே மாசங்கள்ல குடும்பத்தோட நாங்க ஜப்பான் போயிருந்தது சந்தோஷமான தருணங்கள். சினிமா இண்டஸ்ட்ரியில 2015 பத்தி சொல்றதுன்னா பிஸினஸ் பெரிய அளவில் மாறியிருக்கு.

முன்னாடியெல்லாம் சூப்பர் பிஸினஸ், ஆவரேஜ், பிலோ ஆவரேஜ், நோ பிஸினஸ்னு சொல்வாங்க. இப்போ நடுவில இருந்த ஆவரேஜ் கேட்டகரி போயிடுச்சு. ஒண்ணு ஃபுல் பிஸினஸ்... இன்னொண்ணு ஒண்ணுமே இல்ல. டி.வி.டி., நெட்னு வந்துடுறதால செகண்ட் ரிலீஸ் எல்லாம் இல்லை. முதல்லயே முழு வீச்சுல ரிலீஸ் பண்ணக்கூடிய தகுதி இருந்தாதான் படத்தை வெளியிட முடியும்கிற சூழல். ஆனா, 2016ல் சினிமா இன்னும் ஆரோக்கியமா இருக்கும்னு தோணுது!’’

- மை.பாரதிராஜா