2016ல் வெப்பம் தகிக்கும்... மழையும் அதிகரிக்கும்..!



கடும் வெப்பத்தில் உதித்து, கடும் வெள்ளத்தில் கரைந்திருக்கிறது 2015. நூறாண்டுகளுக்குப் பிறகு இயற்கையின் இன்னொரு முகத்தை தரிசித்திருக்கிறார்கள் மக்கள். பல மாவட்டங்களில் இன்னும் ஈரம் காயவில்லை. துயரம் வடிந்து இயல்பு திரும்பாத ஒரு சூழலில் பிறக்கிறது 2016. தட்பவெப்ப மாற்றம், குளோபல் வார்மிங் என பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் உதிக்கும் 2016ம் ஆண்டு எப்படி இருக்கும்..?

“2016 மட்டுமல்ல... இனி வருங்காலங்கள் எல்லாம் பெருமழை, மிகுவெயில், கடும் குளிர் என்றுதான் இருக்கும்” என்கிறார் இந்திய அரசின் இளம் அறிவியல் விஞ்ஞானியும், வன உயிரியல் ஆராய்ச்சியாளருமான முனைவர் உதயகுமார். ‘‘பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் விளைவுகளை இந்தியா மெல்ல மெல்ல உணரத் தொடங்கியிருக்கிறது. இனியும் பழங்கால கணிப்பு முறைகளைக் கையாளாமல், சர்வதேச அமைப்புகளுடன் இணைந்த நவீன கணிப்பு முறைகளுக்கு மாற வேண்டும். பருவ காலங்களின் தன்மை வெகுவாக மாறிவிட்டது. இயற்கை மாற்றத்தை சர்வதேச ஆய்வு அமைப்புகளுடன் சேர்ந்து நுணுக்கமாக கணிக்க வேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளின் தட்பவெப்ப மாற்றத்தை கணக்கில் எடுத்து ஆய்வு செய்தால், இந்தியாவில் - குறிப்பாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சூழலியல் மாற்றங்களை உணர முடியும். ‘இனி வருங்காலங்களில் பருவக்காற்று காரணமாக மழை பெய்ய வாய்ப்பில்லை’ என்று சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் கணித்துள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காற்றழுத்த தாழ்வுநிலை, புயல், வெப்ப சலனம், காற்றடுக்குச் சுழற்சி காரணமாகவே நாம் மழையைப் பெற்றிருக்கிறோம். இனியும் பெறவிருக்கிறோம்.

மழையைப் போலவே, 2016ல் வெப்பநிலையும் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்று நாசா, இஸ்ரோ போன்ற அமைப்புகள் கணித்துள்ளன. வெப்பநிலை அதிகமாகும்போது, ஆவியாதல் அதிகமாகும். அதனால் எதிர்பாராத மழைப் பொழிவும் அதிகமிருக்கும். காற்றழுத்தத் தாழ்வு நிலை, புயலும் வர வாய்ப்பிருக்கிறது.

ஆண்டுக்கு ஆண்டு வெப்பத்தின் தன்மையும், அளவும், வீரியமும் மாறிக்கொண்டே இருக்கிறது. அதேபோல மழையின் தன்மையும் வேகமும் மாறிக் கொண்டுதான் இருக்கிறது. அண்மைக்கால மழைகள், குறைந்த நேரத்தில் அதிகப் பொழிவை தந்துள்ளன. இதையெல்லாம் நாம் கவனத்தில் வைத்து 2016க்கு தயாராக வேண்டும். வடிகால்கள் நிறைந்துள்ள கடலோர நகரங்களில் நாம் நிரந்தர முன்னேற்பாடுகளைச் செய்து வைத்திருப்பது நல்லது...’’ என்கிறார் உதயகுமார்.

தட்பவெப்பம் பற்றி இணையதளம் நடத்துபவரும், வானிலை ஆராய்ச்சி வல்லுனருமான வேலாயுதம், ‘‘2015ம் ஆண்டை புரட்டிப் போட்ட எல் நினோவின் தாக்கம், 2016ம் ஆண்டிலும் தொடரும்...’’ என்கிறார்.‘‘2015 ஏப்ரல்- மே வாக்கில் எல் நினோவின் தாக்கம் தமிழகத்தில் தொடங்கியது. நவம்பர், டிசம்பரில் அது உச்சம் பெற்றது. அதன் விளைவுதான் கடும் மழை. 2016 ஜூன்-ஜூலையில் எல் நினோவின் வீரியம் படிப்படியாகக் குறையும். அதனால் ஏப்ரல்-மே மாதங்களில் வெப்பம் வழக்கத்தை விட 1-2 டிகிரி அதிகமாக இருக்கும்.

அந்தக் காலகட்டத்தில் மதுரை, திருச்சி போன்ற உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது. வழக்கமாக வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் கடற்பரப்பில் தோன்றும் புயலானது, தமிழகத்தில் தாக்கத்தை உருவாக்கிவிட்டு, ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களுக்கு செல்லும்.

ஆனால் அண்மைக்காலமாக காற்றழுத்தத் தாழ்வுநிலை தமிழகத்திற்குள்ளாகவே சுழல்கிறது. அதனால் வழக்கமாக கனமழை பொழியும் விஜயவாடா, தெலுங்கானா, ஒடிஷா பகுதிகளில் மழை வெகுவாகக் குறைந்து விட்டது. இதேமாதிரியான தட்பவெப்ப நிலை மாற்றம், 2016லும் ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஆனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்போது, மழைப்பொழிவின் அளவும் அதிகரிக்கவே செய்யும்...’’ என்கிறார் வேலாயுதம்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் கடலோர ஆராய்ச்சிப் பிரிவின் இயக்குனர் டாக்டர் வி.செல்வத்திடம் இதுகுறித்துக் கேட்டோம்.‘‘எல் நினோவின் தாக்கம்தான் அண்ைமயில் பெய்த மழைக்குக் காரணம். எல் நினோ உருவாக்கத்துக்கு பருவநிலை மாற்றம் காரணமா என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. அது தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், பருவநிலை மாற்றம் நிச்சயம் வருங்காலங்களில் பெரும் பாதிப்புகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பருவநிலை மாற்றத்தால் 3 பாதிப்புகள் இருக்கலாம். 1. கடல் மட்டம் உயரும். இது, இன்றோ, நாளையோ நடந்து விடாது. அண்மைக்கால ஆய்வுகள்படி, ஆண்டுக்கு 2.1 மி.மீ அளவுக்கு கடல்மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 30 வருடத்தில் 6-7 செ.மீ அளவுக்கு உயரக்கூடும். அப்போது அதன் முழுமையான தாக்கத்தை நாம் எதிர்கொள்வோம். கடல் மட்டம் உயர்வதால், கரையோர நிலப்பரப்பு கடலுக்குள் போகும். நிலத்தடி நீர் உப்பாகும். வாழ்வாதார சிக்கல் உருவாகும்.

2வது பாதிப்பு, கடல் தண்ணீர் அதிகமாக வெப்பமடைவதால், புயலின் தாக்கம் அதிகரிக்கும். அடிக்கடி புயலை எதிர்கொள்ள நேரிடும். மூன்றாவது, சில இடங்களில் அதிக மழைப்பொழிவும், சில இடங்களில் குறைந்த மழையும் இருக்கும். வெள்ளம், வறட்சி இரண்டையும் எதிர்கொள்ள வேண்டும்.

இந்த பாதிப்புகள் படிப்படியாக ஏற்படும். இதற்கு, இன்றிலிருந்தே நாம் தயாராக வேண்டும். விவசாயம் பற்றிய நம் பாரம்பரிய முன்முடிவுகள் மாறியாக வேண்டும். ‘இந்த தேதிக்கு மழை பெய்யும், இந்த தேதிக்கு விதை விதைக்க வேண்டும்’ என்று பழைய நம்பிக்கைகளைக் கொண்டு இனி விவசாயம் செய்ய முடியாது. தட்பவெப்பக் கணிப்பையும் அறிவியல் அறிவையும் விவசாயத்தில் கலந்தாக வேண்டும். இல்லாவிட்டால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்படும். கடலோரங்களில் தீவிரமான கண்காணிப்பு அமைப்புகளையும் உருவாக்க வேண்டும்...’’ என்கிறார் செல்வம்.

மனிதர்களின் அளவற்ற பேராசையும், ஆதிக்கமும் இயற்கையின் போக்கை மாற்றிவிட்டதன் விளைவுதான் இதெல்லாம். இயற்கைக்கு பாதகம் செய்யாத வாழ்க்கைக்கு நாம் தயாராக வேண்டும். அச்சமூட்டும் அபாயகரமான காலகட்டத்தில் வானிலை ஆய்வுகளை இன்னும் நவீனமாக்க வேண்டிய அவசியத்தை மத்திய - மாநில அரசுகள் உணர வேண்டும்.

பேரிடர் நிகழும் வரை கைகட்டிக் காத்திராமல், இப்போதிருந்தே ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 2016ம் ஆண்டாவது மக்களுக்கு நிம்மதியான, துயரமற்ற வாழ்க்கையை அள்ளித் தரட்டும்!`இந்த தேதிக்கு மழை பெய்யும், இந்த தேதிக்கு விதை விதைக்க வேண்டும்’ என்று பழைய நம்பிக்கைகளைக் கொண்டு இனி விவசாயம் செய்ய முடியாது.

- வெ.நீலகண்டன்