நினைவோ ஒரு பறவை 9நகர் நீங்கும் படலம்

நீ என் சொந்த ஊருக்கு செல்லும் பாதை போல் இனிமையானவள்!
- எழுத்தாளர் பா.செயப்பிரகாசம்

அதிகாலையின் முதல் குரலாய் தொலைபேசியில் அத்தை அழைத்தது. ‘‘ஆயாவுக்கு உடம்புக்கு முடியலை. உன்னைப் பார்க்கணும்னு சொல்லுது, உடனே கிளம்பி வா!’’
‘‘சரி, பத்து மணிக்கு வர்றேன்!’’ என்றேன்.பக்கத்தில் உறங்கிக்கொண்டிருந்த மனைவியை எழுப்பி விஷயத்தைச் சொன்னதும் மகன் விழித்துக்கொண்டான்.

 ‘‘ஊருக்குப் போறீங்களாப்பா? நானும் வர்றேன்’’ என்று அவன் சொல்ல, ‘‘டேய்! உனக்கு இன்னிக்கு ஸ்கூல் இருக்கு. லீவுல போய்ட்டு வா’’ என்றாள் மனைவி.‘‘நானும் பாட்டியைப் பார்க்கணும்’’ என்று மகன் அழத் தொடங்க, ‘‘விடுடீ... மூணாவதுதானே படிக்கிறான். ஒரு நாள் லீவு போட்டா என்ன? பெருசா டாக்டருக்கு படிக்கிறா மாதிரி அலட்டறே!’’ என்றேன்.

மனைவி என்னை முறைத்தபடி, ‘‘உங்க சொந்தக்காரங்க வீட்டுக்குன்னா ‘மூணாவதுதானே படிக்கிறான்’னு சொல்வீங்க... எங்க வீட்டு விசேஷம்னா ‘அவனுக்கு எக்ஸாம் இருக்கு, கூட்டிட்டுப் போகாதே’ன்னு கடுப்படிப்பீங்க!’’ என்றாள். மகன் ‘இன்றைக்கு ஸ்கூலா? லீவா?’ என்று தீர்மானிக்க முடியாமல் எங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.‘‘சரி... சரி... குளிச்சிட்டு கெளம்புங்க. நானும் வர்றேன்! அவனைக் கெடுக்கறது நீங்கதாங்க!’’ என்றாள் மனைவி. மகன் என் கழுத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.

ஊருக்குப் போகிறோம் என்பதை நினைக்கும்போதே மனதிற்குள் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சியும், பதற்றமும் தொற்றிக்கொண்டது. உண்மையில் ஊருக்குச் செல்வது என்பது ஊருக்குச் செல்வது மட்டும்தானா? அது நாம் வளர்ந்த கர்ப்பப்பையில் மீண்டும் சென்று ஒருக்களித்துப் படுக்கும் சுகம் அல்லவா? ஒவ்வொரு முறையும் நெடுநாட்கள் கழித்து நாம் சொந்த ஊருக்குச் செல்லும்போதெல்லாம், சின்னதாகிப் போன பால்ய வயதின் சட்டைக்குள் வளர்ந்த உடலுடன் நுழைகிறோம்.
பொருள்வயிற் பிரிவுக்கு முன்பு ஒவ்வொரு அணுவும் பரிச்சயமாயிருந்த நம் சொந்த வீடு, சற்றே அந்நியமாகி - தங்கும் விடுதி போல திகிலூட்டு
கிறது. கொஞ்சம் உப்பும், பாசமும் தூக்கலான சாப்பாட்டு ருசி மட்டும் ‘இது நம் வீடுதான்’ என்கிற ஆறுதல் தருகிறது.

சிற்றிலாடிய வயல்வெளிகள் பன்னாட்டுத் தொழிற்சாலைகளின் புகைபோக்கிகளுக்குக் கீழே புதைந்து கிடக்க... மிக சகஜமாய்த் தென்படும் புதிய புதிய முகங்கள், பூர்வீக வீட்டை விற்றுவிட்ட பழைய நண்பர்களைப் பற்றி விசாரிக்க வைக்கின்றன. சம்சாரிகளாகி விட்ட ஸ்நேகிதர்கள் ‘‘எப்படா வந்தே?’’ என வழிமறித்துக் கேட்கிறார்கள். பதில் சொல்வதற்கு முன்பே, ‘‘என்னிக்குப் போற?’’ என அடுத்த கேள்வி வருகிறது.

ஒவ்வொரு முறை வந்து போகும்போதும் நெருங்கிய ஒருவரின் மரணம் பற்றிய செய்தியும், தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியாமைக்கான வருத்தமும் யார் வீட்டுத் திண்ணையிலேயோ ஒரு கண்ணீர்த்துளியைப் போல் அமர்ந்திருக்கிறது.உலகமெங்கும் மனிதர்கள் நத்தைகளைப் போல் தங்கள் சொந்த ஊரின் நினைவுகளை முதுகில் சுமந்தபடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக எப்போதோ படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் வில்லியம் ஹென்றி ஹட்சன், லண்டனில் தங்கியிருந்தபோது காலை நடைப் பயிற்சிக்காக மாநகரின் வீதிகளில் நடந்து கொண்டிருக்கிறார். குறிப்பிட்ட ஒரு வீட்ைடக் கடக்கையில், அவருக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பறவையின் குரலைக் கேட்கிறார். அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்த, ஒரு இளம்பெண் கதவைத் திறக்கிறாள்.

ஹட்சன் அவளிடம் வீட்டுத் தோட்டத்தில் கூண்டில் வைத்திருந்த பறவையைக் காட்டி, ‘‘இது அர்ஜென்டினாவைச் சேர்ந்த பறவைதானே?’’ என்று கேட்கிறார்.
அதற்கு அவள் ஆச்சர்யத்துடன், ‘‘ஆமாம், நாங்கள் அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரிலிருந்து வருகிறோம். எப்படி அடையாளம் கண்டுபிடித்தீர்கள்?’’ என்று கேட்க, ஹட்சன் புன்னகையுடன் ‘‘நம் ஊர்ப் பறவையின் குரலை நமக்குத் தெரியாதா?’’ என்று சொல்கிறார்.

அன்று ஹட்சன் கேட்டது அந்தப் பறவையின் குரலை மட்டுமா? அவரது பால்யத்தின் குரலை; கனவுகளின் குரலை; கடந்த காலத்தின் குரலை; அவருக்குள் இருக்கும் ஊரின் குரலை.என் ஊரின் குரலைக் கேட்க, சிற்றுண்டி முடித்து கிளம்பினேன். வண்டியில் ஏறியதும் மனைவி சொன்னாள், ‘‘படப்பை வரும்போது என்னை எழுப்புங்க. பழம், பூ எல்லாம் வாங்கணும்.’’ சொன்ன அடுத்த நொடி காரின் கதவில் சாய்ந்து உறங்கிப் போனாள். ‘எப்படி இந்தப் பெண்கள் மட்டும் படுத்த சில நொடிகளில் உறங்கி விடுகிறார்கள்’ என்று நினைத்துக் கொண்டேன். கந்தர்வன் எழுதிய கவிதை ஞாபகம் வந்தது. ‘நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை! ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை!’ கூடவே கண்ணதாசனின் பாடல் வரிகளும்... ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே!’

வீடியோ கேம்ஸ், தொலைக்காட்சி என எதுவும் இல்லாத இத்தகைய பயணங்களில்தான் மகன் தன் மனதை என்னிடம் முழுக்கத் திறந்து காட்டுவான். ‘‘அப்பா, உங்க ஊரைப் பத்தி சொல்லுங்க!’’ என்று நூற்றி பத்தாவது முறையாக மகன் கேட்க... நான் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யன் ஆகி சொல்லத் தொடங்கினேன்.

பெருமாள் கோயில் மதில் சுவரை ஸ்டம்ப் ஆக்கி கிரிக்கெட் ஆடியது... பொன்வண்டுகள் பிடித்து அவை இடும் மஞ்சள் முட்டைகளைப் பார்த்துப் பரவசப்பட்டது... தர் கேப் சாம்பாரின் சுவையில் மெது வடையை மூழ்கடித்தது... அப்பாவுடன் சைக்கிளில் சென்று சங்கம் தியேட்டரில் தண்டவாளத்தில் கை வைக்கும் ‘சூப்பர்மேன்’ படம் பார்த்து அகாலத்தில் வீடு திரும்பியது... புராதன கோயில்களையும் சிற்பங்களையும் ரசிக்க வரும் வெள்ளைக்காரர்களிடம் ‘‘Pen Please’’ என்று கேட்டு அவர்கள் தரும் சாக்லெட்டுகளை ருசித்தது...

நான் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, மகன் கண்கள் விரிய கேட்டுக் கொண்டிருந்தான். அப்பனும் பிள்ளையும் கால ஊஞ்சலில், அடிவயிற்றுப் பரவசத்துடன் முன்னும் பின்னுமாக ஆடிக் கொண்டிருந்ேதாம்.படப்பை வந்ததும் மனைவியை எழுப்பினேன். பழங்கள், பூச்சரம், இனிப்புகள் வாங்கிக் கொண்டு வந்தாள். வாங்கி வந்த பூச்சரத்திலிருந்து பத்து முழப் பூவை தனியாகக் கத்தரித்து கூந்தலில் வைத்துக் கொண்டாள்.

‘‘ஏன்டீ... இது என்ன பூவா? பூக்கடையா? எதுக்கு இவ்வளவு பூ வெக்கிற?’’ என்றேன்.‘‘உங்களுக்குத் தெரியாது. ஆயா போன தடவை என்ன கேட்டுச்சு தெரியுமா?’’‘‘என்ன கேட்டுச்சு?’’‘‘ஒரு மொழம் பூ மட்டும் வெச்சிட்டுப் போனேன். ‘ஏம்மா, என் புருஷன் மாசம் பத்து ரூபா சம்பாதிக்கும்போதே நான் ஒரு ரூபாய்க்கு பூ வாங்கி தலையில வெச்சுப்பேன். உன் புருஷன் கை நெறைய சம்பாதிக்கிறான்... ஒரு பத்து மொழம் பூ வாங்கி வெச்சா என்ன?’ன்னு கேட்டுச்சு!’’
நான் மௌனமானேன்.

‘‘இது பரவால்லைங்க! உங்க அம்மா பீரோ நெறைய புடவை வெச்சிருப்பாங்களாம். ஆனா பழைய சேலைதான் எப்பவும் கட்டுவாங்களாம். ஆயா ஒரு முறை கேட்டதுக்கு ‘இந்த கிராமத்துக்கு இது போதும்’னு சொன்னாங்களாம்! ‘உங்க மாமியார் மாதிரியே இருக்கியே? உங்கிட்ட பட்டுச் சேலையே இல்லையா?’ன்னு கேட்டாங்க’’ என்று மனைவி சொல்ல நான் ‘‘உம்’’ என்ேறன்.

அந்த ‘உம்’மை மனைவி கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். ‘‘உங்க ஆயாவோட கிண்டலும், கேலியும்தாங்க உங்களுக்கும் அப்படியே வந்திருக்கு. எதுக்கு எடுத்தாலும் குறை சொல்றது. இப்ப உங்க புள்ளையும் உங்களை மாதிரியே குறை சொல்றான். அதே ரத்தம். நேத்து நான் சுட்ட இட்லியைப் பார்த்துட்டு என்ன சொன்னான் தெரியுமா?’’‘‘என்ன சொன்னான்?’’‘‘இட்லிக்கு எதுக்கும்மா ஹெல்மெட் போட்டே? இப்படி கல்லு மாதிரி இருந்தா அதுக்கு வலிக்காதான்னு கேட்கிறான்...’’
நான் மகனைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன். ‘‘ரொம்பதான் பெருமை போங்க’’ என்று மனைவி அலுத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரம் கழித்து ‘‘இப்ப பழம் வாங்கிட்டுப் போறோம். இதுக்கு ஆயா என்ன சொல்லும் தெரியுமா?’’ என்று மனைவி என் மேல் தூண்டிலை வீச, நான் காது கேட்காதவன் போல் வெளியே வேடிக்கை பார்த்தேன். ‘‘கொஞ்சம் இப்படித் திரும்புங்க’’ என்று மனைவி மீண்டும் களத்தில் இறங்கி தாக்கத் தொடங்கினாள்.
‘‘ஏம்மா, மாம்பழம் எதுக்கு வாங்குன? சூடும்மா. திராட்சையா, அது ரொம்ப குளிர்ச்சி. ஆப்பிள்ல இப்பல்லாம் மெழுகு தடவுறான். சீதாப்பழம் சாப்பிட்டா ஜுரம் வரும். சாத்துக்குடி சீதளம். வேற என்னங்க நான் வாங்குறது? ஒரு தடவை வாழைப்பழம் மட்டும் வாங்கிட்டுப் போனேன். அதுக்கு என்ன சொன்னாங்க தெரியுமா?’’
‘‘என்ன சொன்னாங்க?’’ என்றேன் ஆர்வத்துடன்.

‘‘ஏம்மா... காஞ்சிபுரத்துல இது கெடைக்காதுன்னா மெட்ராஸ்ல இருந்து வாங்கிட்டு வர்றேன்னு கேட்டாங்க!’’நான் உறக்கம் வந்ததைப் போல் நடிக்க ஆரம்பித்ேதன்.சில வாரங்களுக்கு முன்பு என் அப்பாவைப் பெற்ற ஆயாவைப் பற்றி ‘கறிச்சுவை’ என்ற தலைப்பில் எழுதியிருந்தேனே... அந்த ஆயாவைப் பற்றித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆயாவுக்கு 98 வயதாகிறது. அந்தக் காலத்து உடம்பு. இன்றும் கண் தெரிகிறது, காது கேட்கிறது, பற்களும் சொற்களும் உறுதியாக இருக்கின்றன.

சென்னையில் வந்து தங்கி விடு என்று ஒருமுறை அழைத்து வந்தேன். அட்டாச்டு பாத்ரூமில் இருந்த வெஸ்டர்ன் டாய்லெட்டைப் பார்த்ததும் முகம் வெளிறிப் போய் ‘‘வீட்டுக்கு உள்ளேயேவா இதெல்லாம் இருக்கும்? எனக்கு இது சரிப்படாது. காஞ்சிபுரத்திலேயே உட்டுடு’’ என்று ஊருக்குத் திரும்பி விட்டது. எதிர் வீட்டில் குடியிருக்கும் அத்தைதான் ஆயாவிற்கு சமைத்துப் போடும். மாதா மாதம் சென்று நலம் விசாரித்து இருவருக்கும் செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு வருவேன். என் மனைவியை விட ஆயாவைப் பற்றி அத்தை சொல்லும் குறைகள் ஆயிரம் மடங்கு இருக்கும். ‘‘எந்தக் காய்கறியை சமைச்சாலும் ஒடம்புக்கு ஒத்துக்காதுன்னு சொல்லுதுப்பா! என்னதான் சமைக்கிறது?’’

முதுமையில் அனைவரும் மீண்டும் குழந்தையாகிறார்கள். ஆயா என்னும் குழந்தையை மனம் கோணாமல் பராமரிப்பது என் கடமையாக இருந்தது.
ஊரை அடைந்து ஆயாவைப் பார்த்ததும், ‘‘என்ன பண்ணுது உடம்புக்கு?’’ என்ேறன்.‘‘ரெண்டு நாளா ஜுரம். நின்னா காலு வலிக்குது. ரொம்ப நேரம் படுத்தா முதுகு வலிக்குது’’ என்று ஆயா சொல்ல, ‘‘சரி, கெளம்பி வா... டாக்டர்கிட்ட போகலாம்’’ என்றேன். என் மகன் என் மடிமீது ஏறி விளையாடிக் கொண்டிருப்பதை கவனித்த ஆயா, ‘‘டேய்! கீழ எறங்குடா... குழந்தைக்கு வலிக்காது?’’ என்று அதட்டியது. மகன் பயத்துடன் பார்த்து, ‘‘இன்னாப்பா உங்களப் போயி குழந்தைன்னு சொல்றாங்க?’’ என்றான்.

‘‘அவங்களுக்கு நான் எப்பவும் குழந்தைதான் ராஜா. இப்ப உனக்கு எவ்வளவு வயசானாலும் நீ எனக்கு குழந்தைதானே!’’ என்றேன்.‘‘நான் போயி பொடவை மாத்திட்டு வர்றேன்’’ என்று அறைக்குள் சென்ற ஆயா, அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தது. ஆரஞ்சு வண்ணத்தில் பட்டுப்புடவை. ஆங்காங்கே ரஸகற்பூர வாசம். ‘‘ஒடம்பு சரியில்லன்னு டாக்டர்கிட்ட போறோம். இப்ப இந்தப் பட்டுப்புடவை தேவையா?’’ என்றேன் ஆயாவிடம்.

‘‘பாடலாசிரியர் பாட்டின்னு எல்லாரும் பார்ப்பாங்க இல்ல. அதான் தேடி எடுத்து கட்டிட்டு வந்தேன்!’’ என்றது ஆயா.‘‘உங்க தாத்தா மட்டும் சினிமால இருந்திருந்தா ஆயா செம அட்டகாசம் பண்ணியிருக்கும்’’ என்றாள் மனைவி காதிற்குள்.‘‘வயசானவங்களுக்கு வர்ற அதே பிரச்னைதான். நீங்க பயப்படாதீங்க! நான் டேப்லெட் எழுதித் தர்றேன்’’ என்றார் டாக்டர் நந்தகுமாரி.

கிளினிக்கில் இருந்து திரும்பி வருகையில் ஆயா என்னிடம் சொன்னது... ‘‘ஏம்பா! நான் செத்துப் போய்ட்டா என்னைப் புதைச்சிடு, எரிக்காதே!’’
‘‘ஏன் பயப்படறே... நீ நூறு வருஷம் தாண்டி இருப்பே’’ என்றேன்.‘‘அதில்லப்பா... நான் எப்ப செத்தாலும் எரிக்காதே. ெபாதைச்சிடு’’ என்று ஆயா மீண்டும் சொல்ல, ‘‘ஏன்?’’ என்றேன்.‘‘எரிச்சா உடம்பு வலிக்காதா?’’ என்று கேட்டது ஆயா.

‘‘நீ செத்துப் போன பிறகு உன் உடம்பு வலிக்கிறது உனக்கெப்படி தெரியும்?’’ என்றேன்.‘‘செத்துப் போன பிறகு உடம்பு வலிக்காதுன்னு செத்துப் போனாதானே தெரியும்? அதனால்தான் சொல்றேன். என்னை பொதைச்சிடு’’ என்றது ஆயா.உண்மையில் ஊருக்குச் செல்வது என்பது  ஊருக்குச் செல்வது மட்டும்தானா? அது நாம் வளர்ந்த கர்ப்பப்பையில் மீண்டும்  சென்று ஒருக்களித்துப் படுக்கும் சுகம் அல்லவா?

ஒவ்வொரு முறை சொந்த ஊர் வந்து போகும்போதும் நெருங்கிய ஒருவரின் மரணம் பற்றிய செய்தியும், தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியாமைக்கான வருத்தமும் யார் வீட்டுத் திண்ணையிலேயோ ஒரு கண்ணீர்த்துளியைப் போல் அமர்ந்திருக்கிறது.

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்