சிட்டுக்குருவி வளர்க்கும் கிராமங்கள்!அந்த லேகியம் ஒருவரின் தாம்பத்ய வாழ்க்கையையே தாறுமாறாக மாற்றிவிடும் என்ற மூடநம்பிக்கை எழுந்தபோது பாதி சிட்டுக்குருவிகளைத் தொலைத்தோம். கோயில் கோபுரங்களைவிட அதிகமாக ஒவ்வொரு ஊரிலும் செல்போன் கோபுரங்கள் முளைத்தபிறகு மீதியையும் தொலைத்துவிட்டோம்.

ஒருகாலத்தில் கிராமத்து தார்ச்சாலையில் பயணிக்கும்போது மின்சாரக் கம்பிகளில் வரிசையாக அமர்ந்திருக்கும் சிட்டுக்குருவிகள், மனித நடமாட்டத்தால் கலவரமாகி விசுக்கென கூட்டமாய் பறந்து ஒரு ரவுண்டு அடித்துவிட்டு மீண்டும் வரிசை மாறாமல் கம்பியில் வந்தமரும். அது ஒரு கனாக்காலம். நம் நவீன வாழ்க்கைமுறை சிட்டுக்குருவிகளை சிதைத்துவிட்டது. இந்நிலையில் எப்படியாவது சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன நூறு கிராமங்கள்.

தமிழகத்தின் ஓசூர் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரத்தில் உள்ள சுமார் 100 கிராமங்களில் பத்தாயிரம் குடும்பங்கள் தங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளும் சேர்ந்து வாழ கூடு அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்துச் செய்துவருகிறது டி.வி.எஸ் நிறுவனத்தின் சீனிவாசன் அறக்கட்டளை. அதன் களப்பணியாளர் துரையன், சிட்டுக்குருவிகள் குறித்து பேசும்போதே உற்சாகமாகிறார்.‘‘காகங்களுக்கு அடுத்து மனிதர்களோட ரொம்ப நெருக்கமா வாழ்ந்த பறவை சிட்டுக்குருவிங்கதான். நவீன வாழ்க்கைமுறையால எப்படி திண்ணைகள் வெச்ச வீடுகள் எல்லாம் இல்லாம போச்சோ, அதே மாதிரிதான் சிட்டுக்குருவிங்க வாழவும் இடம் இல்லாமல் போச்சு. இதுக்கு முழுக்க முழுக்க நாமதான் காரணம்.

வீடுகளில் பழங்கால போட்டோக்களுக்கு பின்பக்கமும் மாட்டுத் தொழுவங்கள்லயும் மாடங்கள்லயும் சின்னதா கூடுகட்டி வாழ்ந்துக்கிட்டு இருந்தன சிட்டுக்குருவிங்க. சிதறும் தானியங்கள்தான் சிட்டுக்குருவிகளுக்கு பிரதான உணவு. அறுவடை செஞ்சு களத்துக்கு வரும் தானியங்களை காயவைக்கும்போது வந்து ஒண்ணு ஒண்ணா கொத்திக்கிட்டு போகும். இதனால விவசாயிக்கு நஷ்டமெல்லாம் வராது. ஏன்னா, அந்த தானியங்கள் வயல்ல வளரும்போது, மகசூலைப் பாழ்படுத்தும் பூச்சிகள், வெட்டுக்கிளிகளை சாப்பிட்டு பயிர்களைக் காப்பது இந்த குருவிகள்தான். ஆகவே, இது விவசாயிகளோட
நண்பன்னும் சொல்லலாம்.

அதேபோல வீட்டுல பெண்கள் முறத்துல அரிசியைக் கொட்டிப் புடைத்து கல், குருணை நீக்கும்போது தவறி விழும் தானியங்களைக் கொத்தித் தின்னும் இவை. அதுக்கும் நம் வாழ்க்கை முறை வேட்டு வைத்தது. இன்னைக்கு அறுவடை முடிச்சி நேரா ஆலைக்குப் போகும் தானியங்கள் கல் நீக்கி, பாலித்தீன் பாக்கெட்ல வீட்டுக்கு வர்றதால யாரும் முறத்துல கொட்டிப் புடைக்கறது இல்ல. உணவு கிடைக்காம திண்டாடிப் போச்சு குருவிங்க.

தோட்டங்களில் வளரும் செடிகளில் வாழும் சின்னச் சின்ன புழு, பூச்சிகள் அதுக்கு உணவாக இருந்தது. இடப்பற்றாக்குறை, நகரமயமாக்கம் இதெல்லாம் தோட்டத்துக்கு குட்பை சொன்னதால இதுங்களுக்கு கெடைச்ச புழு, பூச்சிக்கும் ஏக டிமாண்ட். உணவுக்குதான் பிரச்னைன்னா, கிராமங்கள்லகூட புதிதாகக் கட்டப்படற வீடுகளில் அது கூடுகட்டும் வசதி இல்லை.

பெரும்பாலான அடுக்கு மாடி வீடுகள் எப்பவும் மூடியே கெடக்குது. இப்படி திக்கு தெரியாம தவித்துக் கொண்டிருந்த சிட்டுக்குருவிகளை 2000க்குப் பிறகு கலங்கடிச்ச பெருமை செல்போன் கோபுரங்களையே சேரும். மொட்டை மாடிகளில் முளைத்த செல்போன் டவர்களில் இருந்து வரும் மின்காந்த அதிர்வலைகளால சிட்டுக்குருவிகளோட முட்டைகள் பாதிக்கப்பட்டு குஞ்சு பொறிப்பது தடைபட்டுச்சி.


மிகவும் நுண்ணறிவு கொண்ட இந்தப் பறவைகளை செல்போன் டவர்கள் வெளியிடும் 900 முதல் 1800 மெகாஹெர்ட்ஸ் மைக்ரோ அலைகள் வெகுவாக பாதிச்சுது. இந்த மின்காந்த அலைகளால் சிட்டுக்குருவிகள் பாதை மாறிப் போனது. திசை திருப்பப்பட்டது. இதனால் வழி தப்பி கூடு திரும்புவதும் தடைபட்டது. இப்படி காரணங்களை அடுக்கிக்கிட்டே போகலாம்.

போன தலைமுறை வரைக்கும் நம்மோட இணக்கமா வாழ்ந்த சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாத்தணும். அதை அழிய விடக்கூடாதுன்னு முடிவு செஞ்ச எங்க நிறுவனம் களத்துல இறங்குச்சு. சிட்டுக்குருவிகளுக்கு முதல் தேவை, பாதுகாப்பான வாழிடம். அது கிடைச்சாலே குருவிகள் தைரியமா வந்து முட்டையிடும்; குஞ்சு பொறிக்கும். தானாகவே அதன் பெருக்கம் அதிகமாகிடும். அதுக்கு என்ன செய்யணும்னு யோசிச்சோம். அது தங்கற மாதிரி பிரத்யேகமாக ஒரு அட்டைக் கூட்டை தயார் செஞ்சோம். அதுக்குள்ள குருவி வந்து போக வழி இருக்கும். நாம தண்ணீர், உணவு எல்லாம் வைக்கலாம்.

அதை எடுத்துக்கிட்டு நாங்க போனது கிராம மக்கள் கிட்டயும் பள்ளிக்கூட மாணவர்கள் கிட்டயும்தான். அவங்ககிட்ட சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லி, வீடுகளில் நாங்க கொடுக்கற சிட்டுக்குருவிக்கான அட்டைக்கூடுகளைக் கட்டச் சொன்னோம். குழந்தைங்க ஆர்வமா வாங்கிட்டுப் போய் தங்கள் வீடுகள்ல கட்ட ஆரம்பிச்சாங்க. 375 கிராமங்களில் இதைச் செய்ய முடிவெடுத்து வேலையை ஆரம்பிச்சோம். இப்ப ஓசூர் பகுதியில மட்டும் சுமார் 100 கிராமங்களில் பத்தாயிரம் வீடுகளில் சிட்டுக்குருவிக்கான அட்டைக் கூடுகள் இருக்கு.

தமிழகம் முழுக்க சுமார் 1000 கிராமங்களில் சிட்டுக்குருவிக்கு அட்டைக் கூடுகளைக் கட்டி இருக்கோம். இப்ப இந்த கிராமத்து வீடுகளில் இருக்கும் அட்டைக் கூடுகளுக்கு சிட்டுக்குருவிகள் தைரியமாக வந்து வாழத் தொடங்கிவிட்டதால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கையும் அதிகமாகி இருக்கு. இது மாதிரி  எல்லா ஊர்லயும் சிட்டுக்குருவிக்கு கூடு கட்டணும். பழையபடி எல்லா இடங்கள்லயும் சிட்டுக்குருவிகள் சிறகடிச்சுப் பறக்கணும்’’ என்றவர், ஒரு நெகிழ்வான சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒரு ஸ்கூல் பையன் வந்தான். அவங்க வீட்டுல வெச்ச அட்டைக்கூட்டுல வாழற குருவி முட்டையிட்டு குஞ்சு பொறிச்சிருக்காம். ‘அதுகளோட சந்தோஷயான கீச்ச்... கீச்ச்... சப்தம் கேட்கும்போதெல்லாம், அதுங்க மொழியில நமக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரியே இருக்கு சார்’னு சொன்னான். உண்மையில் நாம செஞ்ச பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடறோம்னு மனசுக்குள்ளயே நினைச்சிக்கிட்டு, ‘வெரிகுட்’னு சொல்லி சிரிச்சிக்கிட்டேன். பசங்களோட இந்த ஆர்வம் போதும்,சிட்டுக்குருவிகள் பிழைச்சிக்கும்!’’ அதுகளோட சந்தோஷயான கீச்ச்... கீச்ச்... சப்தம் கேட்கும்போதெல்லாம், அதுங்க மொழியில நமக்கு தேங்க்ஸ் சொல்ற மாதிரியே இருக்கு!

- எஸ்.ஆர்.செந்தில்குமார்