சூரிய நமஸ்காரம்



எனர்ஜி தொடர் 7

சென்ற வாரம் சூரிய நமஸ்காரத்தின் முதல்நிலையைப் பற்றிப் பார்த்தோம். யோகா உலகத்தால் மிகவும் மதிக்கப்படும் பதஞ்சலியின் ‘யோக சூத்திரம்’, அஷ்டாங்க யோகத்தில் யமம், நியமம் என்கிற இரு அரிய பயிற்சிகளை முதலில் வைக்கிறது. அதன் பிறகுதான் ஆசனம், பிராணாயாமம் ஆகியன வருகின்றன.

பொதுவாகவே நமது மரபில் முன் தயாரிப்புக்கு முக்கிய இடம் உண்டு. ஆயுர்வேத சிகிச்சையில் கூட மருந்து தருவதற்கு முன், வயிற்றை சுத்தம் செய்வார்கள்; நடவுக்கு முன்பாக விவசாயி நிலத்தை உழுது பண்படுத்துவது மாதிரி!

இதில் யமம் என்பது நமது வெளியுலக உறவுகளை- பழக்க வழக்கங்களை-ஒழுக்கங்களைப் பற்றிப் பேசுகிறது. அதாவது இந்த சமூகத்தோடு நாம் எப்படித் தொடர்பில் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இதற்கு ஐந்து பண்புகளை வரையறுக்கிறது யமம். அவை... அகிம்சை, சத்யம், அஸ்தேயம், பிரம்மச்சரியம் மற்றும் அபரிக்ரஹம்.
அகிம்சை என்பது எந்த வகையிலும் யாரையும் புண்படுத்தாமல் இருப்பது என்பதாகும்.

அப்படி வளரும் ஒருவருக்கு யார் மீதும் கோபமோ, வெறுப்போ எழாது. சத்யம் என்பது, சரியான நேரத்தில், உரிய வார்த்தைகளில், மனதிற்கு விரோதமில்லாமல் பேசுவதாகும். கசப்பு வார்த்தைகளை அள்ளித் தெளித்துவிட்டு, அதை எண்ணி எண்ணி வருந்துவதில் அர்த்தமில்லை. பேசிய வார்த்தைகளுக்காகப் பெருமைப்படும்படி வாழ்வது சத்யமாகும்.

அஸ்தேயம் என்பது பிறர் உடைமைகளுக்கு ஆசைப்படாமல், எவரிடமும் எதையும் அபகரிக்காமல் இருப்பது. இயல்புக்கும் இயற்கைக்கும் மாறாக பிறர் பொருளுக்கு ஆசைப்படும் குணம், நம் ஆரோக்கியத்திற்குத் துணை நிற்காது. வசதிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிறைவான பண்போடு வாழ்கிறவர்களைப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கைமுறையின் ரகசியம் தேடுங்கள். அந்த இயல்பு எப்படிப்பட்டது என்பது புரியும். மிகப்பக்குவமான, கட்டுப்பாடான நிலை அது. எதுவுமே அவர்களுக்குப் பிரச்னையாக மாறாது.

பொதுவாக, திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதை பிரம்மச்சரியம் எனச் சொல்வதுண்டு. ஆனால், திருமணம் ஆனவரும் கூட வாழ்க்கை நெறிப்படி சுய
கட்டுப்பாட்டுடன் வாழ்வதை இப்படித்தான் சொல்கிறார்கள். இப்படி வாழ்பவர்களால், நினைத்ததைச் செய்ய முடியும். அபரிக்ரஹம் என்பது, நமது தகுதிக்கு எது உரியதோ அதை மட்டும் பெறுதல். தகுதிக்கு சம்பந்தமே இல்லாமல் ‘வேறு’ மாதிரி வருவதெல்லாம், நியாயமான வாழ்வுக்கு ஏற்றதாக இருக்காது. இந்த வாழ்க்கையில் ஆனந்தம், அமைதி, ஆரோக்கியம் என எல்லாமே சாத்தியம். மனதில் பயச் சிந்தனைகளோ, குற்ற உணர்வோ இருக்காது. அதனால், தங்கள் மேல் மதிப்பும் நம்பிக்கையும் கூடும்.

‘மற்றவர்களோடு எப்படிப் பழக வேண்டும்’ என்பதை இப்படி யமம் பகுதியில் குறிப்பிட்ட பதஞ்சலி முனிவர், ‘நம்மை எப்படி வைத்திருக்க வேண்டும்’ என நியமம் பகுதியில் ஐந்து அம்சங்களைக் குறிப்பிடுகிறார்.

* செளச: சுத்தம் என்பது பொருள். நமக்கு உள்ளேயும் வெளியேயும் சுத்தமாக இருக்க வேண்டும்.

*  சந்தோஷம்: மகிழ்ச்சியாக இருந்தால், மனம் ஆரோக்கியம் பெறும்; பிரச்னைகள் குறையும். ஞாபக சக்தி கூடும். மனதில் சோகத்தை சுமப்பது வேதனையைத்தான் அதிகரிக்கும்.

* தபஸ்: ஒவ்வொரு செயலையும், தவம் மாதிரி கருதி ஈடுபாட்டோடு செய்வதாகும். அப்படிச் செய்தால் நம்முள்ளே இருக்கும் மன அழுக்கு, தீய எண்ணங்கள் எல்லாம், செய்யும் செயல்களின் மூலமே குறையும். ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள்.

* ஸ்வாத்யாயம்: நம்மைப் பற்றி சிந்தித்தல். வாழ்க்கை பற்றி ஆழமாகப் பேசும் நூல்களைப் படித்து, நம் வாழ்க்கையோடு அந்த அனுபவங்களை ஒப்பிட்டுப் பார்த்தல், அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுதல் போன்றவை நல்ல பலன்களைத் தரும். இல்லையேல், நம்மை அறியாமல் எங்கோ போய் முட்டிக்கொண்டு நிற்போம்.

* ஈஸ்வரப்ரணிதானம்: ஏதாவது ஒரு சக்தியிடம் நம்பிக்கை வைத்தல். அந்த நம்பிக்கை அமைதியைத் தரலாம்; நிம்மதி யைத் தரலாம்; பலத்தைத் தரலாம். அது உங்களின்   நம்பிக்கையைப் பொறுத்து அமையும். இது நமது சக்தியைத் தாண்டிய விஷயங்களைக்கூட செய்ய வைக்கும்.

இந்த எல்லாவற்றுக்கும்பிறகுதான் ஆசனம் - அதாவது பயிற்சிக்கு வருகிறார் பதஞ்சலி முனிவர். இப்படியெல்லாம் யமம் மற்றும் நியமப்படி வாழ்ந்தால் என்னவெல்லாம் நடக்கும், எது எது கிடைக்கும் என்று அவரே பின்னர் சொல்கிறார். அதன் சுருக்கத்தை இங்கே தர முயல்கிறேன்.யமப்படி வாழ்ந்தால் பகைவர்களையும் நண்பர்களாக மாற்ற முடியும். கடமைகளை சரியாகச் செய்ய முடியும். எல்லோரின் நம்பிக்கையையும் பெற முடியும். வாழ்க்கையில் பொய் என்பதே குறுக்கிடாது; அதனால் ஏமாற்றமும் இருக்காது. 

நியமப்படி வாழ்ந்தால், எல்லா விஷயங்களிலும் கவனம் கூடும்; முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும்; கடினமான விஷயத்தைக் கூட எளிதில் புரிந்து கொள்ளும் திறன் வரும்; நம்பிக்கை கூடி, மனதை தேவையானபடி நன்கு பயன்படுத்த முடியும். நீங்கள் எப்படி இவற்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து இன்னும் பலன்கள் கூடும்.

வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் எவர் முயற்சி செய்தாலும் அதற்குரிய பலன் கிடைத்தே தீரும். முயற்சியின் அளவைப் பொறுத்து சிலருக்கு பலன் உடனே கிடைக்கும்; சிலருக்கு சற்றுத் தாமதமாகலாம். அந்த முயற்சியே கூட பல விஷயங்களைப் புரியச் செய்யும், பல விரயங்களைத் தடுத்து விடும் என்பதெல்லாம் வாழ்க்கையின் அழகு.பதஞ்சலி முனிவரின் இந்தப் பத்து முத்துக்கள் வாழ்க்கையின் அங்கமாகும்போது, பெரும் மாற்றங்கள் இயல்பாய் நடக்கும். இந்தப் பேரானந்தம் வாழ்க்கையை சொர்க்கமாக்கி விடும்.

நீங்கள் இந்த ‘பத்து’ பண்புகளைப் பற்றி நன்கு யோசித்துப் பாருங்கள். இவை சூரிய நமஸ்காரத்திற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கே மிக வலிமையான அடித்தளமாக அமையும்! இந்தப் பண்புகளோடு எதைச் செய்தாலும் தரம் இருக்கும்; மகிழ்ச்சி இருக்கும்; முழு ஈடுபாடு இருக்கும். செயல்களில் தெளிவு இருக்கும். நினைப்பு, பேச்சு... எல்லாமே ஆரோக்கியம்தான்!

யமம், நியமம் என்கிற இரண்டும்தான் வாழ்க்கைக்கும் ஆதாரம்; சூரிய நமஸ்காரம் போன்ற ஆசனங்களுக்கும் அடிப்படை!

(உயர்வோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: சத்யா

ஏயெம்