விளம்பரங்களில் நடிப்பவர்களுக்கு பொறுப்பு வேண்டாமா?



காலையில் விழித்ததும் எந்த பிரஷ்ஷில் பல் துலக்க வேண்டும் என ஒரு நடிகர் சொல்கிறார். உங்க டூத் பேஸ்ட்டில் இது இருக்கா என ஒரு நடிகை கேட்கிறார். அண்ணன் நடிகரும் தம்பி நடிகரும் வெவ்வேறு காபிகளை பரிந்துரைப்பதால், எதைக் குடிப்பது எனக் குழப்பம் வருகிறது.

சில விளையாட்டு வீரர்கள் வேறு, ‘சத்து பானங்களைக் குடிக்காவிட்டால் ஆபத்து’ என எச்சரிக்கிறார்கள். இந்தக் குழப்பம் தீர்ந்து குளிக்கப்போனால், எத்தனை சோப், ஷாம்புக்களை இவர்கள் எடுத்துக் கொடுக்கிறார்கள்! ரெடியானதும் அணியும் உள்ளாடை முதல் வெளி ஆடை வரை இவர்கள் சொல்லும் பிராண்டுகள் ஏராளம்.

சாப்பிடப் போனால் இன்னும் பெரிய லிஸ்ட். உப்பு, பருப்பில்கூட பிராண்ட்கள்! வாசலைத் தாண்டினால் பைக்கிலும் காரிலும் எது பெஸ்ட் என பரிந்துரைக்கும் நிபுணர்களாகவும் இந்த நடிகர்கள் இருக்கிறார்கள். டாய்லெட் க்ளீன் செய்யும் திரவம் முதல் தங்கம் வரை இவர்கள் விற்காத பொருள் இல்லை. ‘ஐயோ, தலை சுற்றுகிறதே!’ என படுக்கையில் விழுந்தால்... ‘இதமான தூக்கத்துக்கு இந்தப் படுக்கையே நல்லது’ என அங்கும் விற்க வருகிறார்கள். ஆனால் பிரச்னை வந்தாலோ முதல் நபராக ஒதுங்குகிறார்கள்!    

‘அம்மாவின் அன்பைப் போலவே ருசிக்கும்’ என்று அமிதாப் பச்சனும், மாதுரி தீட்சித்தும், ப்ரீத்தி ஜிந்தாவும் அறிமுகப்படுத்திய மே்கி நூடுல்ஸ், குழந்தைகளை நோயாளிகளாக்கும் அளவுக்கு ரசாயனச் சேர்க்கைகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. அதைத் தயாரித்த நிறுவனத்தோடு சேர்த்து விளம்பரப்படுத்திய நடிகர்கள் மீதும் வழக்கு பதிய உத்தரவிட்டிருக்கிறது பீகார் நீதிமன்றம்.

 இதற்கு முன்பும், ‘ஈமு கோழி வளர்த்தால் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்று ஆசை காட்டி பல நூறு பேரை போண்டிகளாக்கிய நடிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. “நடிப்பது எங்கள் தொழில். எங்களுக்கும் பொருளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொருள் தரமானதா என்பதை மக்கள்தான் பார்த்து வாங்க வேண்டும்” என்று கைது நடவடிக்கையை எதிர்க்கிறார்கள் நடிகர்கள். 

ஒரு சிவப்பழகு க்ரீம் நிறுவனம், தங்கள் விளம்பரத்தில் நடிக்க நடிகை கங்கணா ரனாவத்துக்கு 2 கோடி ரூபாய் தர முன்வந்தது. ‘‘என் சகோதரி மாநிறம். ஆனாலும் அழகானவள். இந்த விளம்பரத்தில் நடித்தால் என் சகோதரியை அவமதிப்பதாக ஆகிவிடும். என் சகோதரிக்குச் செய்ய விரும்பாததை இந்த நாட்டுக்கு எப்படி நான் செய்ய முடியும்?” என்று மறுத்தார் கங்கணா. நடிகர் ராஜ்கிரணுக்கு வேட்டி விளம்பரத்தில் நடிக்க 1 கோடி ரூபாய் தர வந்தார்கள். ‘‘வேட்டி என்பது ஏழைகளின் ஆடை. விளம்பரத்துக்காக எனக்குத் தருகிற தொகையையும் அதன் விலையில் சேர்த்து அவர்களின் தலையில்தான் கட்டுவீர்கள். நான் நடிக்க மாட்டேன்...” என்று மறுத்தார். இத்தனைக்கும் அப்போது ராஜ்கிரண் கடும் கடன் சுமையில் இருந்தார்.

“ஒவ்வொரு விளம்பரத்திலும் பொருளின் தரத்தைப் பேசியே நடிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், பெரும்பாலான பொருட்கள் தரமற்றவை. அதனால் நடிகர்களை நம்பும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த ஏமாற்று வேலைக்கு எக்காலத்திலும் உடந்தையாக இருக்கமாட்டேன்...” என்றார் அஜித். ரஜினி, கமல், விஜயகாந்த் போன்றவர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் பெரும் தொகையை கொட்டிக்கொடுக்க முனைந்தபோதும், கமர்ஷியல் விளம்பரங்களில் நடித்ததில்லை. ரசிகர்களை தவறாக வழிநடத்திவிடக்கூடாது என்ற பொறுப்பும், தரமற்ற எந்தப் பொருளையும் அவர்கள் தலையில் கட்டிவிடக்கூடாது என்ற தார்மீக அறமுமே அதற்குக் காரணம். இந்த அறம் இன்று..?

“அமேசான் காடுகளில் விளைந்த மூலிகைகளால் தயாரானது என்று ஒரு எண்ணெயை விளம்பரம் செய்கிறார்கள். நிறைய மிகையான செய்திகளோடு ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. டெலி மார்க்கெட்டிங்கிலும் நிறைய மோசடிகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். நடிகர்களை மக்கள் நம்புகிறார்கள். அந்த மதிப்பில் அவர்கள் பரிந்துரைக்கிற பொருட்களை வாங்குகிறார்கள். அந்தப் பொருள் தரமற்றதாகவோ, பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருந்தால், அவர்கள் மீது கிரிமினல் சட்டப்படி நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் மற்றும் ஏமாற்று வேலைகளுக்கு துணை போதல் போன்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுப்பது சரிதான்.

நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படியும் வழக்குப்பதிவு செய்யலாம். இதுதவிர, Grievances Against Misleading Advertisements விதிமுறைப்படி யும் நடவடிக்கை எடுக்கலாம். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் சட்டமும் தரமற்ற பொருட்களை விளம்பரப்படுத்துபவர்களை குற்றவாளியாக்குகிறது. விளம்பரம் என்பது வணிகம். அது தவறாக இருந்தால் விளம்பரத்தில் நடித்தவர்களும்தான் பொறுப்பு...’’ என்கிறார் நுகர்வோர் பிரச்னைகள் சார்ந்த வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நெடுமாறன்.

தேசிய அளவில் விளம்பரப் படங்கள் கண்காணிப்பு கமிட்டி ஒன்று உள்ளது. தரமற்ற பொருட்கள், போலி விளம்பரங்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுப்பதே இதன் பணி. ஆனால் இதுவரை எந்த விளம்பரத்தின் மீதும் இவர்கள் நடவடிக்கை எடுத்ததில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால் இப்படி எல்லா விளம்பரங்களுக்கும் பிராண்ட் அம்பாசிடர்கள் உருவாகி இருக்க மாட்டார்கள். சில வருடங்களுக்கு முன்பு, ஒரு மலையாள நடிகர் ஒரு எண்ணெய் விளம்பரத்தில் தோன்றி ‘இதைத் தேய்த்தால் சில நாட்களில் முடி வளரும்’ என்றார். ஏராளமானோர் வாங்கினார்கள். ஆனால் முடி வளர்ந்தபாடில்லை. புகார்கள் குவிந்தன.

இதையடுத்து, அதுபற்றி விசாரிக்க குழு ஒன்றை அமைத்தது கண்காணிப்புக் கமிட்டி. நுகர்வோர் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் அடங்கிய அக்கமிட்டி பலமுறை கூடி விவாதித்ததோடு சரி... எதுவும் நடக்கவில்லை. “தயாரிப்பு நிறுவனங்கள் பொருளின் தரத்தைவிட விளம்பரங்களையே பெரிதும் நம்புகின்றன. எந்தக் குப்பையையும் சந்தையில் தள்ள வெளிநாட்டு விளம்பர ஏஜென்சிகள் தயாராக இருக்கின்றன. இது பல நூறு கோடி ப்ராஜெக்ட். ஏராளமான ‘எக்ஸ்பர்ட்கள்’ இதன் பின்னணியில் இருக்கிறார்கள். பொருளையும், பணத்தையும் ஒப்படைத்து விட்டால் மற்றதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

விளம்பரப் படங்களை வடிவமைப்பதும், நடிகர்களைத் தேர்வு செய்வதும் அவர்கள்தான். பொருள் பற்றி எந்தக் கேள்வியும் எழுப்பாதவாறு நடிகர்களின் வாயை பணத்தால் அடைத்துவிடுவார்கள். ஒருநாள் ஷூட்டிங்கிற்கு 15 கோடி ரூபாய் வாங்கும் நடிகர்கள் எல்லாம் வட இந்தியாவில் இருக்கிறார்கள். தரமற்றது எனத் தெரிந்தால், பொருளைத் தயாரித்த நிறுவனத்தின் மீது எடுக்கும் அதே நடவடிக்கையை விளம்பரத்தை வடிவமைத்த நிறுவனத்தின் மீதும் எடுக்கவேண்டும்.

இந்த விஷயத்தில் நடிகர்களுக்கும் மிகுந்த பொறுப்பு இருக்கிறது. ஊரில் இருக்கும் குழந்தைகளை சாப்பிடச் சொல்வதற்கு முன்னால், ‘நம் பிள்ளைக்கோ, பேரனுக்கோ இந்த உணவைத்  தருவோமா?’ என்று நடிகர்கள் யோசிக்கவேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் இதைப்போன்ற ஒரு சம்பவம் நடந்திருந்தால் விளம்பரப்படுத்தியவர்கள் இந்நேரம் சிறையில் இருப்பார்கள். ஆனால் இங்கு வழக்குப்பதிவுக்கே நீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறது...” என்று வருந்துகிறார் விளம்பரப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சண்முகராஜன்.

கவிஞரும் சமூகவியலாளருமான மனுஷ்யபுத்திரன் இந்த விவகாரத்தை வேறொரு கோணத்தில் அணுகுகிறார்.  “ஒரு நிறுவனம் வெளியிடும் விளம்பரத்தின் நம்பகத்தன்மைக்கு அந்த நிறுவனம்தான் பொறுப்பே தவிர, விளம்பரங்களில் நடித்தவர்களைப் பொறுப்பாக்குவது நியாயமல்ல. இது நடைமுறையில் பெரும் குழப்பங்களையும் பிரச்னைகளையும் ஏற்படுத்தும்.

ஒரு உணவுப்பொருளில் பிரச்னை இருக்கிறது என்றால் அதைக் கண்காணிக்க வேண்டியது உணவுத்தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள்தான். அவர்கள் செய்யத் தவறிய கடமைக்கு நடிகர், நடிகைகளைப்  பொறுப்பாக்க முடியாது. ஒரு ரியல் எஸ்டேட் விளம்பரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். திடீரென அந்தக் கட்டிடம் இடிந்து விழுந்துவிட்டால் அந்தக் கட்டிடத்தைக் கட்டிய எஞ்சினியர், முறைகேடாக அனுமதி வழங்கிய அதிகாரிகளை தண்டிப்பீர்களா? அல்லது அந்த விளம்பரத்தில் நடித்த நடிகையை தண்டிப்பீர்களா?

இதை எல்லா துறைகளுக்கும் விரிவுபடுத்திப் பார்க்கலாம். ஒரு விளம்பரத்தில் நடிப்பவர் பொருளின் அத்தனை விவகாரங்களையும் அறிந்துகொண்டுதான் பங்கேற்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லை. விளம்பரம் என்பதே மிகையானதுதான்; அது கற்பனை கலந்த படைப்பு. விளம்பரங்களில் சொல்லப்படும்  செய்திகள் முழு உண்மை அல்ல என்ற விழிப்புணர்வு மக்களுக்குத் தேவை. விளம்பரங்களில் நடிப்பவர்கள் அந்தப் பொருளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர்கள் போன்றவர்கள். அவர்களை எந்த விதத்திலும் பொறுப்பாக்க முடியாது...” என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

‘‘ஊரில் இருக்கும் குழந்தைகளை சாப்பிடச் சொல்வதற்கு முன்னால், ‘நம் பிள்ளைக்கோ, பேரனுக்கோ இந்த உணவைத்  தருவோமா?’ என்று நடிகர்கள் யோசிக்கவேண்டும்.’’

கொட்டும் கோடிகள்

விளம்பரப் படங்களைப் பொறுத்தவரை வட இந்திய நடிகர்களின் ஆதிக்கமே அதிகம். அதிகபட்சம் 3 நாளில் ஒரு விளம்பரப் படப்பிடிப்பு முடிந்து விடும். அதற்கு வட இந்திய மாஸ் ஹீரோக்கள் ரூ.3 கோடி முதல் 15 கோடி வரை வாங்குகிறார்கள். நடிகைகளுக்கு ரூ.50 லட்சம் முதல் 2 கோடி வரை தரப்படுகிறது. சினிமாவில் கதாநாயகி தகுதியை இழந்த நடிகைகள் பலரே விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்துவது ஆச்சரியமான விஷயம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை, அந்த ‘டாப்’ ஹீரோ 5 கோடிக்கும் மேல் வாங்குவதாகச் சொல்கிறார்கள். முன்னணி ஹீரோயின்களுக்கு ரூ.1 கோடி வரை வழங்கப்படுகிறது. ‘வாரிசு’ சகோதரர்களில் மூத்தவர் ‘மூன்றும்’, இளையவர் ‘இரண்டும்’ வாங்குவதாகச் சொல்கிறார்கள். ‘மாப்பிள்ளை’ நடிகருக்கு இரண்டரை. குளிர்பானத்தை திறக்கும் நடிகர்களுக்கு ரூ.1 கோடிக்கும் மேலாம். மார்க்கெட் இழந்த பிரபலங்கள் ரூ.20 லட்சம் முதல் 50 லட்சம் வரை கேட்கிறார்கள்.

‘‘ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தால்,  அதைக் கட்டிய எஞ்சினியர், முறைகேடாக அனுமதி வழங்கிய அதிகாரிகளை  தண்டிப்பீர்களா? அல்லது
அந்த விளம்பரத்தில் நடித்த நடிகையை  தண்டிப்பீர்களா?’’

- வெ.நீலகண்டன்