விளையாட்டுதான் டீச்சர்!



ஒரு புதுமை முயற்சி!

“ஒரு குழந்தையோட 3 வயசுல இருந்து 7 வயசுக்குள்ளயே மொத்த மூளை வளர்ச்சியில 80 சதவீதம் நடந்து முடிஞ்சுடுது. ஆனா அந்த வயசுல அவங்களுக்கு ஆக்கபூர்வமான விஷயம் எதையாச்சும் சொல்லித் தர்றோமா நாம? சுவாரஸ்யம் இல்லாத பாடப் புத்தகத்தைக் கொடுத்து ‘படி... படி...’ன்னு டார்ச்சர் பண்றோம்.

அதைவிட்டா, டி.வி.யில ஆக்‌ஷன் படம், வீடியோ கேம்ஸ்ல கொலை, ரத்தம், துப்பாக்கி... இந்தத் தலைமுறை நாளைக்கு எப்படி இருக்கும்?’’ - நறுக் கேள்வியோடு ஆரம்பிக்கிறார் விஜய். ஃபாரீன் வேலையை விட்டுவிட்டு நம்மூரில் வந்து பொம்மை செய்து கொண்டிருப்பவர் இந்தக் கேள்வி கூட கேட்காவிட்டால் எப்படி!விஜய்யும் அவரது நண்பர்கள் அருணும் நிதியும் இணைந்து, குழந்தைகளுக்கு விளையாட்டு மூலம் கல்வி தரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

 ‘‘நாங்க எல்லோருமே ஐ.டி. துறையில வேலை பார்த்தவங்க. அமெரிக்க வேலை; நல்ல சம்பளம். எல்லாம் இருந்தும் என்ன? அடுத்த தலைமுறையில நம்ம பிள்ளைங்க எப்படி இருப்பாங்களோன்னு ஒரு பயம் நம்ம எல்லாருக்குள்ளயும் இருக்கு. ஒரு முறை நிறைய விளையாட்டுப் பொருட்களை வாங்கிட்டு வந்து என் பையன்கிட்ட கொடுத்தேன்.

எல்லாத்தையும் ஒதுக்கி வச்சிட்டு அவன் டி.வி முன்னாடி உக்கார்ந்துட்டான். அந்தக் காலத்துல நாம மணலைக் குவிச்சு வச்சி விளையாடின விளையாட்டுகள் நம்ம படைப்பாற்றலையும் வளர்த்துச்சு. பெரிய உடற்பயிற்சியாவும் இருந்துச்சு. இப்ப அதுக்கு வாய்ப்பே இல்ல. டாய்ஸ்னு கடைகள்ல கிடைக்கிறதெல்லாம் குழந்தைகளோட அறிவு வளர்ச்சிக்கு கொஞ்சம் கூட உதவுறதில்ல.

இந்தியாவுல இருந்த நண்பர்கள் அருண்கிட்டயும் நிதிகிட்டயும் இதைப் பத்தி பேசினேன். அவங்களும் இதையே ஃபீல் பண்ணினாங்க. விளையாட்டுப் பொருட்கள் எப்படியெல்லாம் இருந்தா, அவை குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உதவும்னு ஆராய்ச்சி பண்ணிப் பார்த்தோம். அப்படிப்பட்ட டாய்ஸ்க்கு இங்கே மார்க்கெட் இருக்குமான்னும் செக் பண்ணினோம். எல்லாம் பாஸிட்டிவ். ஒன் ஃபைன் டே, மூணு பேருமே வேலையை விட்டுட்டு ‘ஃப்ளின்டோ’ங்கற கம்பெனியை ஆரம்பிச்சோம்!’’ என்கிறார் விஜய்.

இந்த பேனரில் இவர்கள் தயாரிக்கும் விளையாட்டுப் பொருட்கள் குழந்தைகளின் பொழுதைப் போக்குவதோடு அறிவாற்றலையும் வளர்க்குமாம்! ‘‘குழந்தைகள் வெறும் கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினா மட்டும் போதாது. தொட்டு உணரும் திறன், தன்னிச்சை செயல்கள், குழு உணர்ச்சி, ஞாபகத் திறன்னு மூளை வளர்ச்சிக்கு ரொம்ப முக்கியமான 12 ஏரியாக்கள் இருக்கு. அது எல்லாத்திலும் ஒரு குழந்தையை ஈடுபடுத்துற மாதிரி விளையாட்டுகளை வடிவமைக்கறது எப்படின்னு கல்வி, உளவியல், விளையாட்டுத் துறை நிபுணர்கள்கிட்ட கேட்டோம். அவங்க வழிகாட்டுதல் படி உருவானதுதான் இந்த டாய்ஸ்!’’ என்கிற அருண், சில உதாரணங்களையும் நமக்கு டெமோவாகக் காட்டுகிறார்.

‘‘சின்ன வயசிலிருந்தே ஒரு கலருடன் இன்னொரு கலரை சேர்த்தா மூணாவதா வரும் கலரைப் பத்தி நாம கேள்விப்பட்டிருப்போம். ஆனா, நேரடியா செய்து பார்த்திருக்க மாட்டோம். அப்படி ஒரு செய்முறை விளையாட்டை இந்தக் கலர் விளையாட்டில் வச்சிருக்கோம். இது சோதனைக் குழாய் மாதிரி இருக்கும். அதில் வேண்டிய கலர்களை இணைச்சுக்கலாம், பிரிச்சுக்கலாம். ரெண்டு வித்தியாச கலர்கள் சேரும்போது என்ன கலர் வருதுன்னு அவங்க கண்டுபிடிக்கணும். இது தொடுகை, பார்வை, ஞாபகத் திறன், செயல் போன்ற விஷயங்களை வளர்த்து, நிறங்கள் மேல ஒரு ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வர வைக்குது.’’

இப்படிப்பட்ட அறிவு விளையாட்டுகள் மட்டுமில்லாமல், குழந்தைகளை பெற்றவர்களின் ‘வழிக்கு’ கொண்டு வரவும் சில விளையாட்டுக்கள் உள்ளன. உதாரணம், காய்கறி களைச் சாப்பிட வைக்கும் கேம்.‘‘இந்த விளையாட்டுல பல வகையான காய்கறிகள் உள்ள அட்டைகள் இருக்கும். ஒவ்வொரு காய்கறிக்கும் ஒவ்வொரு மார்க். உலக அளவில் குழந்தைகள் அதிகம் விரும்பிச் சாப்பிடுற காய்கறிகளுக்கு குறைஞ்ச மார்க்கும், பாகற்காய் மாதிரியான காய்கறிகளுக்கு அதிக மார்க்கும் கொடுத்திருப்போம்.

குழந்தைகள் வீட்டுல சாப்பிடுற சாப்பாட்டுல எவ்வளவு காய்கறிகள் இருக்கோ, அவ்வளவு மார்க் அவங்களுக்கு. அதிகம் மார்க் எடுத்தா அவங்களுக்குக் கொடுக்க அதே விளையாட்டுப் பொருள் பேக்கேஜில் ஒரு பரிசுப் பொருள் வச்சிருப்போம். அதிக மார்க் வாங்கி அந்தப் பரிசை வாங்கணும்னே பிடிக்காத காய்கறிகளையும் குழந்தைங்க சாப்பிடுறாங்க’’ என்கிறார் நிதி.

இவை தவிர ப்ரொஜெக்‌ஷன் முறையில் நட்சத்திரக் குடும்பங்களைப் பார்வையிடும் விளையாட்டு, நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து நீருக்கு மேலே நடப்பதைப் பார்க்க உதவும் பெரிஸ்கோப் என இதுவரை 11 கான்செப்ட்களில் விளையாட்டுப் பொருட்களை உருவாக்கியிருக்கிறார்கள் இவர்கள். இவை எல்லாம் ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன.

‘‘நல்ல சம்பளம் தந்த வேலையை விட்டுட்டோமேன்னு எங்களுக்கு இதுவரை தோணலை சார். அந்த அளவுக்கு இந்தத் துறைக்கு வரவேற்பு இருக்கு. நம்ம ஊர் குழந்தைங்க என்ன பொம்மையை வச்சி விளையாடணும்னு சீனாக்காரங்க முடிவு பண்ற நிலைமைதான் இப்ப இருக்கு. இவ்வளவு தூரம் நாம அசட்டையா இருந்துட்டோம். இதோ நாங்க இப்ப அதை சரி பண்ணிட்டிருக்கோம்.

நாளைய குழந்தைகளையும் நாளைய இந்தியாவையும் பார்த்து பிரமிக்கப் போறீங்க பாருங்க!’’ - அவர்கள் தரும் ஃபினிஷிங்கில் நம்பிக்கை நாலு டன்!நம்ம ஊர் குழந்தைங்க என்ன பொம்மையை வச்சி விளையாடணும்னு சீனாக்காரங்க முடிவு பண்ற நிலைமைதான் இப்ப இருக்கு. இவ்வளவு தூரம் நாம அசட்டையா இருந்துட்டோம்!

- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்