மரம் வளரும்... பாவம் கரையும்!



“வாழ்க்கை ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமாய் பாடம் நடத்தும். எனக்கு என் மகனின் மரணம் மூலமாக பாடம் நடத்தியது. சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒருநாள் மொத்தமாய் எடுத்துப் பார்த்தபோது, அவை எல்லாம் என்னைப் பார்த்துச் சிரித்தன. ‘பாவம் பண்ணிட்டியேடா’ என உள்ளம் குமைந்தது. இப்போது நிம்மதியாய் இருக்கிறேன். நான் வளர்க்கும் மரங்களில் எல்லாம் என் மகனைப் பார்க்கிறேன்!’’

- தத்துவமாய் பேசும் அர்ஜுனனை ‘மரச்சித்தர்’ என்கிறார்கள் நெல்லை மக்கள். அதென்ன மரச்சித்தர்? ‘‘திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் என் சொந்த ஊர். எங்க அம்மா-அப்பாவுக்கு பதிமூணு பிள்ளைங்க. நான் 12வது பிள்ளை. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். எப்படியோ அம்மா என்னை பத்தாவது வரைக்கும் படிக்க வச்சாங்க. பசியோடதான் வளர்ந்தேன். சின்னச் சின்னதா கிடைக்கற வேலைகளைச் செய்தேன். பஸ் ஸ்டாண்டு, ரயில்வே ஸ்டேஷன்ல  பின்னு, ரேஷன் கார்டு கவர், காது குடையற பட்ஸ் வித்துக்கிட்டு இருந்தேன்.

இதுக்கு நடுவுல கல்யாணம், ரெண்டு குழந்தைங்க. இனி நமக்குனு சொந்தமா ஒரு தொழில் வேணும்னு டீ, காபி விற்க ஆரம்பிச்சேன். நல்லா பேசுவேன். என் பேச்சைக் கேட்கவே என்கிட்ட டீ குடிக்க வருவாங்க. நல்ல வருமானம் வந்துச்சு. ஆசையும் அதிகமாச்சு.அடுத்தவங்களை ஏமாத்துறதை அல்வா குடுக்கறதுனு சொல்வாங்க. நான் அந்த அல்வாவிலேயே ஏமாத்தினேன். டீயோட சேர்த்து அல்வாவும் வித்தேன். தண்ணியில்லாம கெட்டியா கிண்டுன தரமான அல்வா இல்ல அது. சும்மா போஸ்டர் ஒட்டற பசை கணக்கா இருக்கும். வாங்கினவன் ஒருநாள் வச்சிருந்து  அடுத்த நாள் சாப்பிட்டாக்கூட வயிறு வலிதான்.

ஒருநாள் என் மூணு வயசுப் பையன்  பால் குடிக்கும்போது புரை ஏறி மூச்சுத் திணறி செத்துட்டான்.  உடம்பு சரியில்லாம கெடந்து... நாலு டாக்டரைப் பாத்து ஒண்ணும் சரியாகாம இறந்து போயிருந்தாகூட மனசு ஆறும். பால் குடிச்ச பையன் அடுத்த நிமிஷத்துல செத்துப் போனது என்னை உலுக்கிடுச்சு. இது எனக்கு தண்டனையோன்னு நினைச்சு புலம்பினேன். டீ வியாபாரத்தை விட்டுட்டேன். மனசு மகன் பின்னாலயே சுத்திச்சு.

மோசமான அல்வா வித்து பணம் சேர்த்தேன்... அந்தப் பணம் எதுக்கும் உதவலையேன்னு கண்கலங்கி ஒரு மரத்தடியில உட்கார்ந்திருந்தேன். அப்ப 80 வயசுப் பெரியவர் ஒருத்தர் வந்தாரு. ‘கவலைப்படாதே! மரம் நட்டு தண்ணி ஊத்தி வளருப்பா. படிப்படியா உன் பாவம் கரையும்’னு சொன்னார்.

நானும் ஒரு ஆலமரக் கன்னு வாங்கி எங்க வீட்டுக்குப் பின்னால நட்டு தினமும் தண்ணி ஊத்தினேன். அது வளர வளர மனசுல நிம்மதி உண்டாச்சு. ஒரு மரம் நட்டதுக்கே இத்தனை நிறைவான்னு யோசிச்சி நிறைய மரக்கன்று நட ஆரம்பிச்சேன். 2 வருஷத்துல 1200 மரம். ஊரே பசுமை ஆச்சு. ஒவ்வொரு மரத்தைப் பார்க்கும்போதும் என் மகனைப் பார்க்கும் நிறைவு...’’ - அவர் மரச்சித்தர் ஆனதன் பின்னணி நமக்குப் புரிந்தது.

‘‘மகன் இறந்த துக்கத்துல எனக்குக் கிறுக்கு பிடிச்சுடுச்சுன்னு முதல்ல ஊரே கேலி பண்ணிச்சு. அப்புறம் இன்னொரு பிரச்னை... ‘எங்கே இவன் செடி நடும் இடத்தை எல்லாம் சொந்தம் கொண்டாடுவானோ’ன்னு நினைச்சி, நட்ட கன்றுகளைப் பிடுங்கிப் போட்டாங்க. இப்ப எல்லாருக்கும் என்னைப் பத்தி புரிஞ்சிடுச்சு. ஊர் மக்களே இந்த வேலைக்கு உதவு றாங்க!’’ என்கிற அர்ஜுனன் இப்போதெல்லாம் செடி நடுவதில்லை. மரமே நடுகிறார். அவரே சோதித்து வெற்றி கண்டிருக்கும் தொழில்நுட்பம் அது.

‘‘ஒரு மரக்கன்று வாங்கி நட்டா அது குறிப்பிட்ட உயரம் வளர்ற வரைக்கும் அதை பாதுகாக்கணும். மரக்கன்று வாங்கி நடவும் வருமானம் பத்தல. இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். ஊர்ல நல்லா வளர்ந்த மரங்களில் ஆறடி உயரக் கிளைகளை வெட்டி, இலைகளைக் கழிச்சிட்டு ஒரு சாக்குப் பையில மண்ணைக் கொட்டி, பசுஞ்சாணம் போட்டு அதுல நட்டு வச்சா... 15 நாளில் துளிர் விட்டுரும். மூணு மாசத்துல நல்லா வளர்ந்துடும்.

அதை அப்படியே எடுத்துக்கிட்டு போய் விரும்பற இடத்துல நட்டுடலாம். ஆடு மாடும் கடிக்காது!’’ என்று சொல்லும் அர்ஜுனன், இப்படி தமிழகம் முழுக்க நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு வைத்திருக்கிறார்.  சித்தர் என்று பெயர் வந்த பிறகு காவி உடுத்தாவிட்டால் எப்படி? எனவேதான் தோற்றத்திலும் அந்த ஃபீல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.

‘‘மரம் நடும் புண்ணிய காரியத்தை நான் செய்யறதால என்னை மரச்சித்தர்னு அழைக்கறாங்க. பலரும் அவங்க வீட்டுல நடக்கற நல்லது கெட்டதுக்கு அழைச்சு மரியாதை செய்யறாங்க. கொஞ்சம் பணம் தருவாங்க. அதையும் மரம் நடறதுக்குத்தான் பயன்படுத்தறேன்’’ என்று சொல்லும் அர்ஜுனன், ‘செப்பறை வளபூமி பசுமை உலகம்’ என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்துள்ளார்.  அதன் மூலம் கல்லூரி மாணவர்களுக்கும் இந்த ‘மரம்  நடும்’ தொழில்நுட்பத்தை சொல்லிக் கொடுத்து வருகிறார். சென்னை முதல்  கன்னியாகுமரி வரை 30 அடிக்கு ஒரு மரம் வீதம் 2 லட்சம் மரம் நடுவதுதான்  இவரின் கனவாம்!

ஒரு மரம் நட்டதுக்கே இத்தனை நிறைவான்னு  யோசிச்சி நிறைய நட ஆரம்பிச்
சேன். 2
வருஷத்துல 1200 மரம். ஊரே
பசுமை
ஆச்சு. ஒவ்வொரு மரத்தைப் பார்க்கும் போதும்
என்
மகனைப் பார்க்கும்  நிறைவு...

- எஸ்.ஆர்.செந்தில்குமார்
படங்கள்: மா.கண்ணன்