மனைவி



‘‘என்னங்க, மேலத்தெரு  கார்மேகத்தோட அப்பா தவறிட்டாராம். வயசு எண்பதுன்னாலும் மனுஷன்  நல்லாதான் இருந்தாரு. எல்லார்கிட்டயும் நல்லா பேசுவாரு...’’
‘‘ஆமாம் கற்பகம்! நானும் இப்பதான் கேள்விப்பட்டேன். அந்த சட்டையை எடு. போயிட்டு வந்துடுறேன்’’ எனப் பரபரத்தார் சுந்தரம்.

‘‘ஒரு நிமிஷம்ங்க... அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு சின்ன உதவி... இந்த வெங்காயத்தை வெட்டிக் கொடுத்துட்டுப் போறீங்களா?’’‘‘கொடு’’ என வாங்கி, ஐந்து நிமிடத்தில் அதை வெட்டி முடித்த  சுந்தரம்... ‘‘என்ன கற்பகம்? கண்ணு எரியுது... இப்படி அழ  வச்சிட்டியே...’’ என மனைவியிடம் அலுத்துக்கொண்டார்.

‘‘ஆமாங்க... போன மாசம் பக்கத்து ஊர்ல ஒரு சாவுக்கு   நாம போனப்ப, நீங்க வாசல்ல ஒருத்தரோட சத்தமா பேசி அரட்டை அடிச்சீங்க. அதப்  பாத்துட்டு உங்களை நாகரிகம் இல்லாதவர்னு எல்லோரும் சொன்னாங்க. என்னதான் வயசான சாவுன்னாலும், கொஞ்சம் அழுது சோகத்தைக் காட்டிக்கறது நம்ம ஊருக்குத் தேவைப்படுது. அந்த நடிப்பெல்லாம் உங்களுக்கு வராது. இப்ப இதே முகத்தோட போங்க. எல்லாம் சரியா வரும்!’’ - கற்பகம் சொல்ல, அருகில் வந்த சுந்தரம் கற்பகத்தின் தோளில் தட்டி, ‘‘மனைவிடா...’’ என்றார்!

கீதா சீனிவாசன்