வணக்கம் பேரறிவு பேசுகிறேன்



ஜனநாதன் நெகிழ்ச்சி!

ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு, ஒரு கடிதம், இயக்குநர் ஜனநாதனை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ‘புறம்போக்கு’ பரவலாக நல்ல விமர்சனத்தையும், வரவேற்பையும் பெற்றிருக்கும் நேரத்தில் இது இன்னமும் ஆச்சரியத்தில் தள்ளியிருக்கிறது... பேரறிவாளனின் தொலைபேசி அழைப்புதான் அது. நடந்ததை உண்மைக்கு மிக நெருக்கமாக நம்மிடம் பகிர்ந்தார் ஜனநாதன்.

‘‘சீமான் சிறையில் இருந்தபோது அவரைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கே பேரறிவாளன் இருக்க, அனைவரும்  கூடிவிட்டார்கள். மனதை விட்டு அகலாத சந்திப்பு. 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனையை எதிர்நோக்கி வாழ்ந்துகொண்டிருந்த தம்பியை நினைக்கும்போது எனக்கு ஆற்றாமை தாங்காது. எல்லாத் துயரத்தையும் உண்டு செரித்துவிட்டு ஒரு ஞானியைப் போல் வாழ்ந்துகொண்டிருப்பது பெரும் தெளிவுடன் இருந்தால் மட்டுமே சாத்தியம். ‘புறம்போக்கு’ முடிந்ததும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாவைக் கூட்டி வந்து படம் பார்க்க வைத்தேன்.

ஆர்யா தூக்கு தண்டனைக்கு உள்ளாவதையும் முன்பே சொல்லி அவர்களை தயார்ப்படுத்தி வைத்திருந்தேன். பேரறிவாளன் தூக்கு தண்டனையிலிருந்து விடுபட்ட பிறகுதான் இந்த முடிவை வைக்கத் துணிந்ததைச் சொன்னேன். அவர்களுக்கு எல்லாம் புரிந்தது. ஈரம் கசிந்த கண்களில் மின்னல் போல் தோன்றி மறைந்த அன்பின் வெளிப்பாடு அது. அவர்தான் பேரறிவாளனிடம் சொல்லியிருக்க வேண்டும். பதிவு செய்யப்படாத எண்ணிலிருந்து திடீரென்று ஒரு அழைப்பு. பேரறிவாளன் என்று சொன்னவுடனே சிலிர்த்துவிட்டது!

‘அண்ணா... உங்களின் ‘புறம்போக்கு’ படத்தை நாலாபுறத்திலிருந்தும் கேள்விப்பட்டேன். தூக்கு தண்டனையை விமர்சித்து ஒரு படம் இப்படியும் எடுக்க முடியுமா? எனச் சொன்னார்கள். எது எப்படியிருந்தாலும், உங்களின் இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டும். உணர்ந்ததைச் சொன்னால்தான் அர்த்தமாகிறது. மரண தண்டனையை ஒழிப்பதற்கான முயற்சிகளில் உங்கள் படம் இன்னும் நெருக்கத்திற்கு வருகிறது. இன்னொருத்தருக்காக நாம் முறையிடுகிற இந்த அன்புக்கு இணையானது எதுவும் இல்லை. மக்களின் ரசனையை ஒட்டிப்போய் நீங்கள் இன்னும் ஆழமாக திரைப்படங்களை எடுத்துக் கொண்டேயிருங்கள். படத்தில் செங்கொடி பற்றிய நினைவூட்டலும் இருக்கிறது என்றார்கள். ஆக, இன்னும் நல்ல விஷயம்தான்!’ - கடும் சூழலில் இருந்தாலும் தெளிந்த குரல், பேரறிவுக்கானது.

பேரறிவு, தான் இருக்கும் சிறையில் நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்து திரையிடும் குழுவில் இருக்கிறார். என்னுடைய ‘பேராண்மை’, ‘ஈ’ படங்களை சிறையில் இரண்டு முறை திரையிட ஏற்பாடு செய்திருக்கிறார். என்னைப் பற்றிய சிறு துணுக்குச் செய்திகளைக் கூட அறிந்து, அதை என்னிடம் விசாரித்தது திகைப்பளித்தது. நெகிழ வைத்து, நேசிக்க வைத்து, கலங்க வைத்த பேரறிவாளன் பேச்சு, சரியாக எட்டு நிமிடத்தில் நின்றுவிட்டது. விசாரித்தால், அவ்வளவுதான் கால அளவாம். 10 நாளைக்கு ஒருமுறை 8 நிமிடம் பேச அனுமதியாம். அந்தச் சிறு பொழுதையும் அம்மாவிடம் பேச மட்டுமே விரும்புகிற பேரறிவு, அப்போது எனக்காக அந்த நேரத்தைக் கொடுத்திருக்கிறார். அந்த அன்புக்கு எனது நன்றி.

இந்தப் படத்தின் நோக்கம் அடியாழம் வரை சென்று அடைந்துவிட்டது என்பதில் எனக்கு நிம்மதி. அதோடு, உடனே எனக்கு வந்த கடிதம் அவரின் மனதைச் சொல்லிவிட்டது. எங்கே எட்டு நிமிடங்களில் சொல்ல வேண்டியது விட்டுப் போயிருக்குேமா எனத் தோன்றிய பதட்டத்தில் கூட எழுதியிருக்கலாம். எதை யாருக்காக சொல்ல முடிந்ததோ, அவர்களே அதைப் புரிந்துகொள்வதும், பகிர்ந்துகொள்வதும்தான் படைத்தவனுக்கு கலை வெற்றி. என்னைப் போலவே விடுதலையும் பேரறிவாளனுக்காக காத்திருக்கிறது!’’