மாஷ் என்கிற டப்ஸ்மாஷ்!



நீங்க நடிச்சிட்டீங்களா?

‘‘இந்த பாட்ஷா ஒரு தடவை சொன்னா...’’
‘‘என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா...’’
‘‘கைப்புள்ள... இன்னும் ஏன்டா முழிச்சிட்டிருக்க? கொர்ர்ர்...’’

இப்படி பாப்புலர் டயலாக் பேசி 5 டப்ஸ்மாஷ் வீடியோவாவது வாட்ஸ்அப்பில் வந்து குதிக்காவிட்டால், அந்த நாள் ஒரு நாளல்ல என்றாகிவிட்டது. சிம்பு, பிரேம்ஜி, அனிருத் தொடங்கி லோக்கல் முனுசாமி, குப்புசாமி வரை எட்டிவிட்டது இந்த டப்ஸ்மாஷ் டகால்டி வேலை. ஆதித்யா போன்ற சேனல்களில் இதற்கென்று தனிப் பகுதி ஆரம்பித்து, ‘நீங்களும் டப்ஸ்மாஷ் பண்ணி அனுப்புங்க’ என்கிறார்கள். சரியாக ஒரு ஏழு மாதத்துக்கு முன்னால் டப்ஸ்மாஷ் என ஒன்று கிடையாது. ஸ்மார்ட் போன் உலகில் இத்தனை சீக்கிரம் புகழ் உச்சியைப் பிடித்த வார்த்தை இதுவன்றி வேறில்லை என்கிறார்கள்.

‘அது என்ன டப்ஸ்மாஷ்?’ எனக் கேட்பவர்களுக்காக...இது ஒரு ஸ்மார்ட்போன் ஆப். வீடியோ மெசேஜிங் ஆப் என்ற வகைக்குள் வருகிறது. பாப்புலர் சினிமா வசனமோ, பாட்டு வரியோ... குட்டிக் குட்டியாய் ஆடியோ கிளிப்பிங்குகள் இந்த ஆப்பில் கொட்டிக் கிடக்கும். அதை க்ளிக் செய்தால் அடுத்த விநாடி நம் செல்போனின் கேமரா வீடியோவைப் பதிவு செய்ய ஆரம்பிக்கும்.

அதே சமயம் நாம் தேர்ந்தெடுத்த ஆடியோவும் ஒலிக்கும். அந்த ஆடியோவுக்கு ஏற்ப உதட்டசைவையும் முகத்தில் எக்ஸ்பிரஷனையும் கேமராவுக்கு நாம் கொடுத்தால் போதும். நம்மையும் அந்த ஆடியோவையும் இணைத்து ஒரு வீடியோவைத் தயார் செய்துவிடும் இந்த டப்ஸ்மாஷ். வடிவேலு பேசிய உலகப்புகழ் டயலாக் பேசி நீங்களும் நடிக்கலாம். இப்படித்தான் இணையமெங்கும் ஆயிரக்கணக்கில்... லட்சக்கணக்கில் சுற்றிக் கொண்டிருக்கின்றன டப்ஸ்மாஷ் வீடியோக்கள்!

இந்த ஆப் உள்ளேயே தரப்பட்டிருக்கும் பாப்புலர் ஆடியோக்கள்தான் என்றில்லாமல் நாமும் நமக்குப் பிடித்த சினிமா டயலாக்குகளை வெட்டி எடுத்து டப்ஸ்மாஷ் பண்ணலாம். ஆடியோ பத்து விநாடிகளுக்குள் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நிபந்தனை. ரஜினி, கமல் டயலாக்குகளை... வடிவேலு, சந்தானம் கமென்ட்டுகளை நாம் சொன்னால் எப்படி இருக்கும் என்ற ஆர்வமே இந்த கான்செப்ட்டை எங்கோ கொண்டு சென்றுவிட்டது.

செல்போன் ஆப் மார்க்கெட்டில் கோலோச்ச யார் யாரோ என்னென்னவோ செய்துகொண்டிருக்கிறார்கள். ‘ஹார்ட் அட்டாக்கை கண்டுபிடிக்கிறோம்’... ‘ரத்த அழுத்தத்தை மானிட்டர் பண்ணுகிறோம்’ என மக்களின் பல்ஸைப் பிடிக்க ஆப்பிளும் கூகுளும் வருடக்கணக்காய் குட்டிக்கரணம் அடிக்கிறார்கள். அப்படியெல்லாம் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் இப்படி ஒரு ஆப் மில்லியன் கணக்கில் டவுன்லோடுகளை அள்ளிக்கொண்டு போகும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

‘சீக்கிரமே ஸ்மார்ட் போனில் ட்விட்டர் பயன்படுத்துகிறவர்களை விட டப்ஸ்மாஷ் பயன்படுத்துகிறவர்கள் அதிகரித்துவிடுவார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். உலகின் நம்பர் ஒன் ஆப் என்ற மகுடத்தை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது டப்ஸ்மாஷ். யார்ரா இவன்? என பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இந்த ஆப் உருவாக்கியவர்களைத் தேட ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜெர்மனியைச் சேர்ந்த ஜொனாஸ் ட்ரூபல், ரோலண்ட் கிரென்க், டேனியல் டஸ்சிக் எனும் மூவர் அணிதான் இந்த ஆப்க்கு அப்பா அம்மா. இவர்களோடு இன்னும் ஆறு பேர்... மொத்த டீமே அவ்வளவுதான். ‘ஜெயிக்க பெரிய முதலீடு தேவையில்லை... ஜஸ்ட் ஒரு ஸ்மார்ட் ஐடியா போதும்’ என நிரூபித்திருக்கிறது இந்தக் குழு. கடந்த வருடம் நவம்பர் 19 அன்றுதான் டப்ஸ்மாஷ் வெளியிடப்பட்டது.

ஒரே வாரத்தில் அது ஜெர்மனியின் நம்பர் ஒன் ஆப் ஆனது. அடுத்தடுத்து 29 நாடுகளில் அதே சாதனையை நிகழ்த்தியது. இந்தியாவில் கடந்த ஜனவரி முதலே டப்ஸ்மாஷ் ஜுரம் பற்றி எரிகிறது. பாலிவுட்டில் டப்ஸ்மாஷ் பண்ணாத வி.ஐ.பிகளே இல்லை எனலாம். ‘இவர்கள் எல்லாம் சீரியஸ் ஆட்கள்’ என நாம் வைத்திருக்கும் பிம்பங்கள் அனைத்தையும் அவர்களின் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் உடைக்கின்றன. சமீபத்தில் சத்ருகன் சின்ஹா 80களில் பேசிய டயலாக் ஒன்றை சல்மான் கான் நக்கலாக டப்ஸ்மாஷ் செய்து, அதை சோனாக்‌ஷி சின்ஹாவுக்கு டெடிகேட் செய்தார். அமீர்கான் டயலாக் ஒன்றை பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நெஹ்வால் டப்ஸ்மாஷ் செய்திருப்பது லேட்டஸ்ட் ஹாட்.

தமிழில் டப்ஸ்மாஷைப் பரப்பிய புண்ணியம் பிரேம்ஜி, சிம்பு, அனிருத், ஆதி போன்றவர்களைச் சேரும். ஹர்ஷிதா எனும் குட்டிப் பாப்பா வடிவேலு டயலாக்குகளை அள்ளிவிட்டு ஓவர் நைட்டில் டப்ஸ்மாஷ் வி.ஐ.பி ஆனது. இன்னும் கேஷுவல் இளைஞர்கள், ஹாஸ்டல் தோழிகள் என வெரைட்டியான மக்கள் தினம் தினம் வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் டப்ஸ்மாஷ் வீடியோ கேலரியை.

இத்தனை வேகமாக ஒரு ஆப் வளருகிறது என்றால் சும்மா விடுவார்களா? இதிலும் போலி ஆப் வந்துவிட்டது... Dubsmash 2 என்ற பெயரில்! ‘டப்ஸ்மாஷின் அடுத்த பதிப்புதான் போல’ எனப் பலரும் இதை டவுன்லோடு செய்தார்கள். சற்று நாட்கள் முன்பு வரை இது கூகுள் ப்ளே ஸ்டோரில் கூட இடம்பெற்றிருந்தது. ஆனால் இது ஒரு மால்வேர்... அதாவது கோக்குமாக்கு ஆப் என்பதை இப்போது கண்டுபிடித்துத் தூக்கிவிட்டார்கள். இது அப்படி என்ன கோக்குமாக்கு பண்ணும்? இதை கிளிக் செய்தால், நமது ஒரிஜினல் டப்ஸ்மாஷ் ஆப் திறக்கும். அதில் வழக்கம் போல் நாம் வீடியோ பதிவு செய்யலாம். ஆனால், சற்று நேரத்துக்கெல்லாம் உங்கள் போனில் பலான வலைத்தளங்கள் தாமாக ஓபன் ஆகும். சுருக்கமாகச் சொன்னால், செக்ஸ் தளங்களுக்கு ஆள் பிடிக்கும் மா.... மால்வேர் இது.

‘‘இதுவரை யூ டியூப் தளத்தில் ஏற்றப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான டப்ஸ்மாஷ் வீடியோக்களில் பெரும்பாலானவை 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுடையவை’’ என்கிறது பி.பி.சி தளம். ‘‘இதற்கு முன்பு டப்ஸ்மாஷ் போலவே இரண்டு ஆப்களை நாங்கள் உருவாக்கினோம். அவை பெறாத வெற்றியை இது பெற்றதற்குக் காரணம் எளிமை. ஒரு குழந்தை கூட எங்கள் ஆப்பை பயன்படுத்தும்!’’ எனப் பெருமை கொள்கிறார்கள் டப்ஸ்மாஷின் பிரம்மாக்கள். அப்படிப்பட்ட குழந்தைகளைக் குறி வைத்து விஷம் எய்யும் முயற்சிகளும் டப்ஸ்மாஷ் மூலம் நடக்கின்றன. ஸோ, டப்ஸ்மாஷ் வீடியோ பார்த்து கலகலவெனச் சிரிப்பது மட்டுமல்லாமல், இனி கொஞ்சம் கவனமாகவும் இருக்க வேண்டும்!

- நவநீதன்