விஜய் அனுப்பிய SMS!



ஹேப்பி  டி.எஸ்.பி

களம் இறங்கிவிட்டது விஜய்யின் ‘புலி’. விஜய் பிறந்த நாளன்று ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகிறது. இதன் முன்னோட்டமாக தேவி பிரசாத் இசையில் விஜய் ஒரு பாட்டு பாடியிருக்கிறார் என்ற தகவலைத் தூவி விட்டிருக்கிறார் இயக்குனர் சிம்புதேவன். ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் அமைதி காத்திருந்த டி.எஸ்.பியைக் கிளறினோம்...‘‘நான் விஜய் சாரோட வொர்க் பண்ற மூணாவது படம் இது.

 நிறைய பேட்டிகள்ல விஜய் சாரே அவருக்குப் பிடிச்ச மெலடியா, ‘சச்சின்’ல வர்ற ‘கண்மூடித் திறக்கும்போது...’ பாடலைத்தான் இப்பவும் ரசிச்சு சொல்றார். ‘வில்லு’வில் 6 பாடல்களுமே ஹிட். அமெரிக்காவில் நாங்க ஷோ பண்ணப் போனப்போ, ‘வில்லு’ பாடல்களைத்தான் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்டாங்க. இப்போ, ‘புலி’. அந்த வெயிட்டைத் தரணும் இல்லையா?

‘புலி’ எது மாதிரியும் இல்லாத புது மாதிரிப் படம். விஜய் சாரோட கேரியர்ல மட்டுமில்ல... என்னோட கேரியர்ல கூட இப்படி ஒரு படம் பண்ணினதில்லை. சிம்புதேவன் சார் இந்தப் படத்தோட கதையைச் சொன்னப்பவே அவ்வளவு பிரமிப்பாச்சு. விஜய் சாருக்கு எல்லா தரப்பிலும் ரசிகர்கள் இருக்காங்க.

சின்னக் குழந்தைகள், ஃபேமிலி, யூத்னு வெரைட்டியான ரசிகர்கள். அதையெல்லாம் கவனத்துல வச்சு பாடல்களைக் கொடுத்திருக்கேன். ஏற்கனவே ரெண்டு டூயட்கள் ரெக்கார்டிங் முடிஞ்சதும், விஜய் சாருக்கு அனுப்பியிருந்தேன். கேட்டுட்டு, ‘சூப்பர்ப்... கலக்கிட்டீங்க... நன்றி நண்பா’ன்னு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார்.

 இப்போ ரெக்கார்டிங் வந்திருக்கும்போது பார்த்தேன். செம ஹேண்ட்சம்மா, அழகாயிட்டே போறார்... அதே சிம்பிள்மேனா இருக்கார். அவர்  இப்போ பாடியிருக்கற பாடலை வைரமுத்து சார் எழுதியிருக்கார். அடடா... என்ன வரிகள்! ‘அந்த வரிகள் என்ன? விஜய் சார் மட்டும் பாடுறாரா? இல்லை... கூட ஸ்ருதி ஹாசனோ, ஹன்சிகாவோ சேர்ந்து பாடுறாங்களா?’ இப்படி எதுக்குமே இப்ப பதில் இல்லை.

விஜய் சார் பர்த்டே அன்னிக்கு எல்லாத்தையும் சொல்றதா ப்ளான். இது ஃபேன்டஸி படம். அதனால வித்தியாசமான இசைக்காக சில இசைக் கருவிகளை பயன்படுத்தி யிருக்கேன். அதையெல்லாம் காட்டினா, ‘அட! இதுவும் ஒரு இசைக் கருவியா?’ன்னு ஆச்சரியப்படுவீங்க. படம் ரிலீஸ் டைம்ல அதைப்பத்தி பேசுறேன். சிம்புதேவன் சாரோட விஷுவல் ட்ரீட் எப்படி கேரன்டியா இருக்குமோ... அதே மாதிரி மியூசிக் ட்ரீட்டும் கேரன்டி!’’ என மகிழ்ந்து நெகிழ்கிறார் மனிதர்.

- மை.பாரதிராஜா