அழியாத கோலங்கள்



நான் நடக்க முடியாமல் கம்பை  ஊன்றிக்கொண்டு, இரு மருங்கிலும் நண்பர்கள் கைத்தாங்கலாகப் பிடித்தபடி உடன் வர, கண்ணீரோடு பூத உடலைப் பார்க்கப் போன ஒரு சிலரில் உண்மையிலேயே என்னிடம் அன்பு கொண்ட மனிதர் மணிவண்ணன். நடிகர் சத்யராஜிடம் பேசினால் மணிவண்ணனின் திறமை பற்றி கதை கதையாகச் சொல்லுவார்.

மணிவண்ணனிடம் ஒரு தேவையில்லாத நடிப்பு... தானொரு படிக்காத பேட்டை பிஸ்தா போல் நடந்து கொள்வது. தமிழ் சினிமாவில் பிரபலமானவர்களுக்கே உரிய பழக்கம், ஒரே மாதிரி பொய் சொல்வது! தான் எங்கேயோ குப்பை மேட்டிலிருந்து வந்த குண்டுமணி போல் ஆகிவிடுவதற்காக ஒரு பொய் டுமீல் குப்பத்தைப் படைத்து, அங்கு பிறந்து அநாதையாக வெளி வந்து, கிட்டத்தட்ட காலை உணவுக்கு நண்பர்களிடம் பிச்சையெடுத்து, மதிய உணவுக்கு கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் குடித்து... இன்று போயஸ் கார்டனில் பங்களாவும் மஹாபலிபுரத்தில் விருந்தினர் மாளிகையும் இருப்பதை வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்வார்கள்.

 கல்லூரியில் படிக்கும்போது பாரதிராஜாவுக்கு அவர் படங்களை விமர்சித்து மணிவண்ணன் நூறு கடிதங்களோ, அல்லது நூறு பக்கங்கள் கொண்ட கடிதமோ எழுதியதாக பாரதிராஜா சொன்ன ஞாபகம். ‘பதினாறு வயதினிலே’ தொடங்கி பாரதிராஜா தொடர்ந்து ஐந்து சூப்பர் ஹிட்டுகள் கொடுத்தார். அவரின் ‘நிழல்கள்’ படத்தின் ஒரு பகுதி எங்கள் வீட்டில் எடுக்கப்பட்டது. கமல் தனது திருமணத்திற்குப் பின் ஒரு பங்களாவுக்கு மாறியதும், தன் பழைய காலி அறைகளை ‘நிழல்கள்’ படப்பிடிப்புக்குக் கொடுத்தார். அங்குதான் மணிவண்ணன்  முதன்முதலாக எனக்கு அறிமுகம்.

அவர் பேச்சிலும் எழுத்திலும் ஒரு நாடோடியின் நவரசமும் நகைச்சுவையும் கலந்திருக்கும். அன்று நான் கமல் வீட்டில் ஒரு சிறிய, வேலைகள் அதிகமில்லாத வக்கீல் ஆபீஸ் அறையில், கதவை அடைத்துக்கொண்டு தொடர்ந்து புகை பிடித்துக்  கொண்டிருப்பேன். கே.பாலசந்தர் படப்பிடிப்பு எங்கள் வீட்டில் நடக்கும்போது, கே.பி அவர்கள் முன் புகை பிடிக்க பயந்த சூப்பர் ஸ்டாரே ஒளிந்து புகை பிடிப்பது என் வக்கீல் ஆபீஸில்தான். மணிவண்ணன் மட்டும் பின்
புறம் உள்ள குளியலறை சந்தில் நின்று புகை பிடிப்பார்.

நான்கு படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு மணிவண்ணன் முதன்முதலாக இயக்கிய ‘ஜோதி’ என்ற படம் 1982ம் ஆண்டில் முடிந்து வெளியாகாமல் இருந்தது. அச்சமயம் மணிவண்ணன் என் ஆபீஸுக்கு வந்து ஒரு கதை சொன்னார். அவர் சொன்ன விதத்திலேயே என் மனதில் ஒரு வெற்றிப் படத்தின் ஓட்டத்தைக் கண்டேன். அதன் தலைப்பு ‘அருக்காணி’. அவர் வந்தது, சுஹாசினியை அந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுமாறு கேட்பதற்கு! அவர் ஏற்கனவே முடித்த ‘ஜோதி’ படத் தயாரிப்பாளர்  தியாகராஜன் அவர்களையும் அழைத்து, மூலக் கதாசிரியரான தயாரிப்பாளர் கலைமணியுடன் உட்கார்ந்து பேசி, இந்தப் பட வெளியீட்டுக்குப் பிறகு ‘ஜோதி’ படத்தை வியாபாரம் செய்தால் நஷ்டம் வராது என்று பேசி முடித்தோம்.

ஆனால் படத்தின் தலைப்பு ‘அருக்காணி’ என இருந்ததை வினியோகஸ்தர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ என தலைப்பை மாற்றினார்கள். மணிவண்ணன் ஒரு தீவிர படைப்பாளி. ‘அருக்காணி’ என்ற தலைப்பை மாற்றினால் நீதிமன்றத்துக்குச் சென்று போராடுவேன் என்றார். ஒரு நல்ல படம் வெளியாவது கெட்டுவிடும் என்று மணிவண்ணனையும் கலைமணியையும் சமாதானம் செய்து, தலைப்பு மாற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்தேன். அன்று மணிவண்ணன் சொன்னது இன்றும் எனக்கு நினைவிருக்கிறது. ‘‘சாரண்ணே... உங்க மகள் படத்தை கேஸ் போட்டு நிறுத்திட்டேன்னு ஒரு பேரு எனக்கு வரக்கூடாதுன்னுதான் விட்டுக் கொடுக்கிறேன்!”

யோசித்துப் பாருங்களேன்... கோபுரங்கள் கூட சாயலாம்; ‘அருக்காணி’ என்ற பெயர் சாயுமா? அது மணிவண்ணனின் மூளை... அவர் படைப்பு..! அவர் ஒரு சிறந்த நடிகரானது கூட நல்ல படம் கேட்கும் ரசிகர்களின் இழப்பு எனலாம்.பின்னாளில் நான் ‘இ.பி.கோ 215’ என்ற படம் செய்யும்போது அவரை எனக்காக ஒரு நாள் நடிக்கக் கேட்டிருந்தேன். அவர் எனக்குக் கொடுத்த தேதியன்று காலையில் எனக்குத் தகவல் வந்துவிட்டது, மணிவண்ணன் வீட்டில் இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் ரெய்டு நடத்துகிறார்கள் என்று!

 அவரால் இன்று வர முடியாது என்று முடிவு செய்து அசப்பில் மணிவண்ணன் போலவே இருக்கும் டூப்பை வரச்சொல்லி லாங் ஷாட்ஸ் மட்டும் எடுக்க நினைத்தேன். வந்த டூப் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் கேட்டார். ‘‘ஒரிஜினலுக்கே நான் இந்தச் சம்பளம் கொடுக்க மாட்டேன்’’ என்று சொல்லி அனுப்பிவிட்டு, மணிவண்ணன் இல்லாத காட்சிகளை எடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அப்போது  இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் அனுமதியுடன் ஒரிஜினல் மணிவண்ணன் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார். என் தயாரிப்பு நிர்வாகி, ஆட்டோவில் மணிவண்ணன் வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. திருப்பி அனுப்பிய டூப்தான் மறுபடி வந்திருக்கிறார் என்று நினைத்து விரட்டப் போய்விட்டார். இவர்தான் ஒரிஜினல் என சூடம் அணைத்து சத்தியம் செய்துதான் கூப்பிட்டு வர வேண்டி வந்தது.

 அன்றே மணிவண்ணன் இன்னொரு சம்பவத்தையும் சொன்னார்... மணிவண்ணன் பிரபலமான இயக்குநராக செயல்பட்ட காலத்திலும் உடையில் கவனம் செலுத்தாமல், லுங்கி அணிந்து தோளில் புரொடக்‌ஷன் பாய் மாதிரி ஒரு அழுக்கான குட்டி டவல் போட்டிருப்பாராம். அவரது புதுப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு துவங்கிய நாள் அது... ஒரு பிரபல கதாநாயகி - பெயராலும் இயக்கத்தாலும் பிரபலமான மணிவண்ணனை நேரில் சந்திக்காதவர் - தளத்தில் அமர்ந்திருக்கிறார்.  

மணிவண்ணன் படப்பிடிப்புத் தளத்துக்கு வந்ததும் கொஞ்சம் தள்ளி நின்று, கதாநாயகியைப் பார்த்து, தேவைக்கும் அதிகமான மரியாதையுடன் ஒரு வணக்கம் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அந்த அம்மையார் இவரை அழைத்து, ‘‘மிஸ்டர், ஒரு டீ கிடைக்குமா?’’ என்று கேட்டாராம். மணிவண்ணன் சென்று தானே ஒரு டீ கொண்டு வந்து கொடுத்திருக்கிறார்.

படப்பிடிப்பு ஆரம்பித்தபோது விஷயம் புரிந்த கதாநாயகி, அழாத குறைதானாம். இந்தக் கதையைச் சொன்ன மணிவண்ணன், தவறு தன்னுடையதுதான் என்றார். மணிவண்ணனின் மனைவி செங்கமலம், கணவர் மறைந்த இரண்டே மாதங்களில் தானும் உயிரை விட்டுவிட்டார் என்பதில் அவர்களது ஆழ்ந்த அன்பு தெரியும்! யோசித்துப் பாருங்களேன்... கோபுரங்கள் கூட சாயலாம்; ‘அருக்காணி’ என்ற பெயர் சாயுமா? அது மணிவண்ணனின் மூளை... அவர் படைப்பு..!

(நீளும்...)

சாருஹாசன்

ஓவியங்கள்: மனோகர்