இடம்!



அந்த ஏரியா பெட்டிக்கடைக்காரர் பெண்ணுக்கு திருமணம். கல்யாண வீட்டில் லட்சுமி அக்காவைப் பார்த்து வியந்தாள் பார்வதி.சாதாரண காட்டன் புடவை... கழுத்தில் தாலி தவிர வேறில்லை.சென்ற வாரம் இதே லட்சுமி அக்காவை ஒரு ஜவுளிக்கடை ஓனர் வீட்டுத் திருமணத்தில் பார்த்திருந்தாள் பார்வதி.

அப்போது லட்சுமி கழுத்து நிறைய நகை, காஸ்ட்லி பட்டுப்புடவை என படு ரிச்சாக வந்திருந்தாள்.‘இப்ப ஏன் இப்படி?’ - பார்வதிக்கு புரியவில்லை.அருகில் யாரும் இல்லாத சமயமாய்ப் பார்த்து லட்சுமியை நெருங்கினாள் பார்வதி. ‘‘ஏங்க்கா, போன வாரம் போட்டிருந்தீங்களே... அவ்வளவு நகையும் என்னாச்சு?’’ நினைத்ததைக் கேட்டுவிட்டாள்.

‘‘எல்லாம் இருக்கு பார்வதி. வசதியானவங்க வீட்டுக் கல்யாணம்ன்னா வர்றவங்க எல்லாருமே ஆடம்பரமா வருவாங்க. நாமும் அது மாதிரி நகைநட்டு போட்டுக்கிட்டுப் போனாதான் மதிப்பாயிருக்கும்.

இது மாதிரி வாயைக் கட்டி வயித்தைக்கட்டி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு கல்யாணம் பண்ணுறவங்க முன்னாடி நம்ம ஆடம்பரத்தைக் காட்டினா அவங்க மனசு கஷ்டப்படுமே. அதனாலதான் இடத்துக்குத் தகுந்த மாதிரி நாம் நடந்துக்க வேண்டியிருக்கு!’’ என்றாள் லட்சுமி கருத்தாக.பார்வதிக்கும் அது சரியாகத்தான் பட்டது.           

ஏ.எஸ்.நடராஜன்