மன்னிப்பு



பத்து நாட்களில் சுந்தரம் பாதியாய் இளைத்திருந்தார்.அவர் மகள் காதலனுடன் ஓடிப்போன அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை.விட்டத்தை வெறித்து, வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தார்.

அவரைப் பார்த்து அவர் மனைவியும் அழுதுகொண்டேயிருந்தாள்.இதற்கிடையில் ஓடிப் போன மகள் தன் காதலனைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டு பக்கத்து ஊரில் வசிப்பதாக தகவல் வந்தது.

யோசனையுடன் சாய்வு நாற்காலியில் முடங்கியிருந்த சுந்தரம் திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர் போல் எழுந்து மனைவியை அழைத்தார்.
‘‘கிளம்பு! உங்க அம்மா, அப்பா வீட்டுக்குப் போயிட்டு வரலாம்...’’ என்றார்.அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.‘‘திடீர்னு அங்க எதுக்கு...’’ என்று இழுத்தாள்.
‘‘ஆசையா,  பாசமா வளர்த்த பொண்ணு ஓடிப் போனா பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்னு இப்பதான்  எனக்குப் புரியுது...

இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் உன்னை இந்த  மாதிரி இழுத்துட்டு ஓடிப்போய்த்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்ப உன்னைப்  பெத்தவங்களும் நம்மளை மாதிரிதானே துடிச்சிருப்பாங்க. போகப் போக அவங்க  நம்மளோட சமாதானமாகிட்டாலும் நான் செய்த தப்புக்கு இதுவரைக்கும் அவங்ககிட்ட  மன்னிப்பு கேட்கலை... அதான் இப்ப கேட்கப் போறேன்!’’ என்றார் சுந்தரம்.

சுபாகர்