இது பொம்மையில்ல... உண்மை!



விநோத ரஸ மஞ்சரி

‘எழுத்தெல்லாம் எதுக்குங்க? இன்னொரு போட்டோ வைங்க!’ எனும் உங்கள் ஆதங்கம் புரிகிறது. இருந்தாலும் இந்த ‘பொம்மை பெண்மை’ பற்றி கொஞ்சம் தகவலும் சொல்லணுமே. ‘வாழும் பார்பி பொம்மை’ என அன்போடு அழைக்கப்படும் இந்த ரஷ்யப் பெண்ணின் பெயர் ஏஞ்சலிகா கெனோவா.

பார்பி பொம்மைகள் மீது பைத்தியமாகத் திரியும் இந்த உலகம், இதுவரை இப்படிப் பல வாழும் பார்பிக்களை பார்த்திருக்கிறது. அவர்களில் பலரும் பார்பி போன்ற முகவெட்டுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணியிருப்பார்கள். அல்லது கொழுப்பைக் குறைக்கும் ட்ரீட்மென்ட்டாவது எடுத்திருப்பார்கள். ஆனால் இப்படி எதுவும் செய்யாத இயற்கையான லேட்டஸ்ட் பார்பிதான் இந்த கெனோவா.

‘‘எனக்கு 26 வயது. பட், இன்னும் என் அப்பா - அம்மாவின் கடுமையான கண்டிப்பின் கீழ்தான் வளர்க்கப்படுகிறேன். என் டயட்டிலும் உடற்பயிற்சியிலும் அவர்கள் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அந்தக் கச்சிதம்தான் இப்படி ஒரு தோற்றத்துக்குக் காரணம். இன்னமும் எனக்கான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது கூட என் அம்மா தான். இந்தக் கட்டுப்பாடுதான் என் ஜீரோ சைஸ் அழகின் ரகசியம்!’’ என்கிறார் கெனோவா.எந்த அளவுக்குக் கண்டிப்பென்றால், கெனோவாவை நீங்கள் டேட்டிங் கூட்டிப் போனால், பாதுகாப்புக்கு அவர் அம்மாவும் கூடவே வருவாராம்..!

- ரெமோ