கைம்மண் அளவு



‘நேரம் பொன் போன்றது’ என்பார்கள் பெரியோர். Time is money என்பார்கள் ஆங்கிலத்தில். அதாவது, காலம் என்பது செல்வம் எனும் பொருளில். காலத்தைச் சேமித்தல் என்பது செல்வம் சேர்த்தல். பொன்னும் பணமும் போனால் தேடிக்கொள்ளலாம். ஆனால் தொலைந்த காலத்தைத் தேடிக் கண்டடைய இயலாது. அது போனால் போனது தான். அது கடந்த காலம்; இறந்து போன காலம்.

‘ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தில்’ என்பது மானுடர்க்கு மட்டும் இல்லை. காலத்துக்கும் சேர்த்துத்தான். போனால் வராது. தொலைந்தால் தேட இயலாது. காலம் என்பது சக்கரம் போலச் சுழல்வது. மேலே இருப்பதைக் கீழே கொண்டு வந்துவிடும். கீழே இருப்பதை மேலே கொண்டு போய்ச் சேர்த்துவிடும்.

எனவே வம்புக்கு, வீணாகக் காலத்தை விரயம் செய்வது வாழ்க்கையின் பகுதியைக் காணாமற் போக்குவதற்கு ஒப்பானது. பொழுதுபோக்கு என்பது அலுக்க வேலை செய்தபின் கொள்ளும் ஓய்வு. பொழுது போக்குவதையே வேலையாகக் கொள்ள இயலுமா? காலம் பூரா தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னால் காத்துக் கிடப்பதை நாம் என்னவென்று சொல்ல? காலைப் பொழுதில் திரையரங்கு வாசல்களில் காத்துக் கிடக்கும் பெருங்கூட்டத்தை, நாம் இந்தியா தவிர வேறு எந்த தேசத்திலும் பார்க்க வாய்க்காது. கடையில் பொருள் வாங்கும் போது நூறு ரூபாய் கொடுத்துவிட்டு மிச்சம் வாங்க மறந்து வந்துவிட்டால் வீட்டுக்கு வந்து மனம் குமைகிறோம். ஆனால், இரண்டரை மணிநேரம் ஒரு குப்பைப் படத்துக்காகத் திரையரங்கில் தொலைத்துவிட்டு வருவதில் நமக்கு எந்த ஆயாசமும் இல்லை. காசை விடப் பல்லாயிரம் மடங்கு விலைமதிப்புள்ள காலத்துக்கு நாம் செய்யும் மரியாதை இது!

அண்மையில் ஒரு திருமண வரவேற்புக்குப் போயிருந்தேன். இளைய வாசக நண்பர் ஒருவரின் திருமணம். அழைப்பிதழில் மாலை ஆறு முதல் எட்டு வரை என்று போட்டிருந்தார்கள். அன்று மாலை நான்கு மணி வரை எனக்கு நகரில் வேலை இருந்தது. வேலை முடிந்து, பன்னிரண்டு கல் அகல இருக்கும் என் வீட்டுக்குப் போய், குளித்து விட்டு உடை மாற்றித் திரும்பவும் வரலாம் அல்லது அருகில் இருந்த மலையாள நாளிதழின் அலுவலக மேலாளராக இருந்த எனது நண்பர் விஜயகுமார் குன்னிசேரி யுடன் சற்று நேரம் உரையாடி விட்டு வரவேற்புக்குப் போகலாம். அவர் மலையாளக் கவிஞர், விகடகவி, தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்பவர். ஆறரைக்குள் வரவேற்பில் கலந்துகொண்டால், ஏழரைக்குள் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்தேன்.

குன்னிசேரியிடம் விடைபெற்று ஆறேகாலுக்கு அரங்கினுள் நுழைந்தேன். மணமேடை வெறுமையாகக் கிடந்தது. சின்னத் தோதிலான வரவேற்பு. எனக்கு முன்பே ஐம்பது பேர் வந்திருந்தனர். மேலும் வந்து கொண்டும் இருந்தனர். பங்குனி போய்ச் சித்திரையும் வந்தது போல், ஆறரையாயிற்று, ஏழாயிற்று, ஏழேகால் கடந்தது. மணமக்கள் வரவில்லை. என் பக்கத்தில் இருந்தவரிடம் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். மணமகள் ஒப்பனைக்குப் போனவர் இன்னும் வரவில்லை என்று. யாரோ இளக்காரமாகச் சொன்னார்கள், ‘‘பொண்ணு அலங்காரம் ரெண்டு மணி நேரம் எடுக்குமுங்க!’’ அடுத்திருந்தவர் சொன்னார், ‘‘அது மொதல்லேயே தெரியும்ல? ரெண்டு மணி நேரம் முன்னக் கூட்டியே மேக்கப்புக்குப் போயிருக்கணும்ல?’’

ஆமாம்! அதுதானே நியாயம்? ஓடுகிற நாய்க்கு ஒரு முழம் கூட்டித்தானே எறிவார்கள்? அரங்கில் கூட்டம் நிறையவும், மேலும் வந்தவர்களுக்கு இருக்க இடமில்லாமற் போயிற்று. எவரோ, பிரதானி போலத் தெரிந்தவர், உரத்த குரலில் அறிக்கை செய்தார், ‘‘சாப்பிடப் போலாம்ங்க... பொண்ணு மாப்பிளை இப்ப வந்திருவாங்க...’’ என்று. மனதின்றி யும், ஒரு வேலை முடியட்டும் என்று கருதியும் கூட்டத்தில் ஒரு பங்கு உணவுக்கூடம் நோக்கிப் போனது.

பெரும்பாலும் மணமக்களுக்குப் பரிசாக, எனது புத்தகம் ஒன்றோ இரண்டோ கையெழுத்திட்டுக் கொடுப்பது எனக்கு வழக்கம். நமது சக்திக்கு இயைந்த சிறு தொகை கொடுக்கலாம். நமது தலைகுனிவுக்கும் பெறுபவர் துச்சத்துக்குமே வினையாகும். ஆனால், புத்தகங்கள் விலை மதிப்பற்றவை. மணமக்கள் வாசிப்பார்களா என்று உமக்குத் தோன்றலாம். குடும்பத்தில் எவரோ படிப்பார்தானே! ஒருவேளை எடைக்குப் போடப்பட்டாலும் எவரேனும் பழைய புத்தகக் கடையில் வாங்கி வாசிப்பார்தானே! என்ன, அதில் நம் கையெழுத்து, பரிதாபமாக இளித்துக் காட்சி தரும். கையில் புத்தகப் பொதியுடன் காத்திருந்தேன். ஏழே முக்காலுக்கு மணமக்கள் வந்தனர். ஏதோ ராஜஸ்தான் அரச குடும்பத்து வாரிசுகள் போன்ற ஆடைத் தோற்றப் பொலிவுடன்.

அவர்கள் சர்வ அலங்காரப் பூஷிதராகப் பொலிவதில் நமக்கு ஒன்றும் வழக்கில்லை. அதற்காக முந்நூறு பேரின் இரண்டு மணி நேரத்தைக் களவாடுவது என்ன நியாயம்? அதாவது அறுநூறு மனித மணி நேரம். அந்த நேரத்தை வேறு என்ன செய்திருப்பார்கள் என்றொரு துணைக் கேள்வியும் பிறக்கும்! அது அவரவர் சுதந்திரம். என்றாலும் எனது இரண்டு மணி நேரத்தை அபகரித்துக் கொள்ளும் பொறுப்பின்மை மீது எமக்கு எதிர்ப்பு உண்டு.

கடுப்பாக இருந்தது. விருந்தை அவதி அவதியாகத் தின்று, புத்தகங்களைத் திணித்து, புன்முறுவலுடன் வாழ்த்தி, வீடியோவுக்குச் சிரித்து, விரைந்து நடந்தேன் நகரப் பேருந்து பிடிக்க. எனது வாழ்வின் அந்த இரண்டு மணி நேரம் பாழாகப் போயிற்று. திரும்பி வரப் போவதில்லை எக்காலத்தும்! இப்படி அடுத்தவர் பொறுப்பின்மையால் நமது காலம் கணிசமாகக் கரைகிறது.

இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், நிகழ்ச்சி மாலை 6-05 மணிக்குத் துவங்கும் எனப் போட்டிருப்பார்கள். அதென்ன 6-05 என்று கேட்பீர்கள். ஞாயிறு களில் 4-30 முதல் 6-00 வரை ராகு காலமாம். இத்தனைதுல்லியமாக நேரம் குறிப்பிட்டு அழைப்பிதழ் அடிப்பார்கள். நிகழ்ச்சி துவங்குவது ஆறே முக்காலுக்கோ, ஏழே காலுக்கோ... ஒன்றில் கூட்டம் சேர்ந்திருக்காது, அன்றேல் சிறப்பு விருந்தினர் கழிப்பறையில் முக்கிக்கொண்டு உட்கார்ந்திருப்பார். ஏன் கூட்டம் சேர்ந்திருக்காது என்று கேட்டால், ‘‘ஆறு மணிக்குண்ணு போடுவானுகப்பா... ஆறே முக்காலுக்குத்தான் ஆரம்பிப்பானுக...’’ என்பார்கள்.

ேகாவையில்,  கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் துவங்கப் பெறும் என்பதால் மக்கள் சரியான நேரத்துக்கு வருகிறார்கள் என்பது ஒரு உபரித் தகவல். முதலமைச்சரோ, ஆளுநரோ கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அரைமணி நேரம் முன்பாக இருக்கையில் அமர வேண்டும் என்றால் அனுசரிக்கத்தானே செய்கிறார்கள்?

தாங்கொணாத் தாமதம் என்றால் எழுந்து வீட்டுக்குப் போகப் பழக வேண்டும் நாம். சிறப்பு விருந்தினரோ, பார்வையாளரோ, சினிமா பார்க்கப் போனால், ரயில் பிடிக்கப் போனால், விமானத்துக்குப் போனால், மருத்துவரிடம் நேரம் கேட்டு வாங்கி இருந்தால், அரைமணி நேரம் தாமதமாகப் போவார்களா? பெரும்பாலும் குறித்த சமயத்துக்கு முன்பே சென்று சேர்வார்கள். பிறகேன் அடுத்தவர் நேரம் என்றால் அத்தனை அலட்சியம்? நம் வீட்டுக் கழிப்பறைக்குப் போய் வந்தால் உடனே விளக்கணைப்போம், அடுத்தவர் வீடு என்றால் அணைக்க மறந்துவிடலாமா?

‘ஐயா! நானுங்கள் வாசகன், மடத்துக்குளத்தில் இருந்து பேசுகிறேன். மாலை நான்கு மணிக்குச் சந்திக்க வரலாமா?’ என்பார்கள் அலைபேசியில். நான் நகருக்குப் போய்விட்டு, பிற்பகல் மூன்று மணிக்கு உணவருந்தி, அதன்பின் கிடந்தபடியே கொஞ்ச நேரம் வாசித்து, அப்படியே அரைமணி நேரம் உறங்கி, கிடக்கப் படுத்தும் கிடந்து ஒழியாமல், உறங்கி உணர்ந்தபின் மேலும் அரைமணி நேரம் வாசித்து, பின்பு முகம் கழுவி, காப்பிக்குத் தயாராகிறவன்.

மாலை நான்கு மணிக்கு வருவார் என்பதால் உறங்கப் போக இயலாது. காத்திருக்கும் போது, ஐந்தரை மணிக்கு ஒரு அழைப்பு வரும், ‘ஐயா, உக்கடம் வந்து விட்டேன்’ என்று. அங்கிருந்து வேறு பேருந்து பிடித்து வீட்டுக்கு வர ஆறரை மணி ஆகிவிடும். எதிர்பார்த்திருப்பதை விடுத்து நமக்கு வேறு மார்க்கம் என்ன? மாற்றாக, ஆறரை மணிக்கு வருவேன் என்று சொல்லியிருந்தால் நம் அலுவல்களுக்குப் பங்கம் இருக்காதல்லவா? எப்போதாவது யாவர்க்கும் நேரலாம் இது சரியான காரணங்களுக்காக. ஆனால் திட்டமிடலோ அலட்சியமோ, அடுத்தவர் நேரம் பகடைக்காய் ஆகலாகாது!

சிலர் காலை பத்தரை மணிக்கு வருவேன் எனச் சொல்லி, மதியம் வரை நாம் காத்திருந்தபின், ‘‘சார்... இன்னைக்கு வர முடியல்லே... இன்னொரு நாள் ஃபோன் பண்ணீட்டு வாறேன்’’ என்பார்கள், ஏதோ நாம் விரும்பி அழைத்ததைப் போன்று.முன்பெல்லாம் நாம் எவரையேனும் தேடிப்போனால் கையில் முகவரி எழுதிய தாள்
துண்டு இருக்கும். விசாரித்துப் போய்ச் சேர்ந்து விடுவோம். இன்று எல்லோரும் அலைபேசி எண் மட்டும் வைத்துக்கொள்கிறார்கள்.

நம் வீடு கண்டுபிடித்து வந்து சேர்வதற்குள் ஆறேழு அழைப்புகள் வந்துவிடும். சில சமயம் அவர் நிற்கும் இடத்துக்கு நடந்து போய்க் கூட்டி வர வேண்டும். சுண்டக்காமுத்தூர் தாண்டி, ஆஸ்ரம் ஸ்கூல் தாண்டி, வ.உ.சி. நகர் நிறுத்தத்தில் இறங்குங்கள் என்றால், அவர் மறுபடியும் அலைபேசியில் அழைப்பார், ‘‘அண்ணா, அண்ணா நகர் ஸ்டாப்பில் எறங்கீட்டேன்’’ என்று சொல்ல. நமக்குக் குழப்பமாகி விடும், எந்த அண்ணா நகர் என்று. ஏனெனில் இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் இங்கே இரண்டு அண்ணா நகர்கள் உண்டு.

மாவட்டத் தலைநகர் கடலூரில் இரண்டு அண்ணா நகர்கள். பெரியண்ணா நகர், சின்னண்ணா நகர் என்றால் கூட நமக்கு விளக்கமாகும்!காலம்... அதாவது நேரம் யாவர்க்கும் இன்றியமையாதது. அது எவர் நேரம் ஆனால் என்ன? ‘காலமறிதல்’ என்று திருக்குறளில் ஒரு அதிகாரம். அதில் ஒரு குறள் சொல்கிறது :‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதி இடத்தால் செயின்’உலகம் எல்லாம் பெறுவதற்கு நினைத்தாலும் பெறலாம். ஆனால் காலம் குறித்து, இடம் அறிந்து செயலாற்ற வேண்டும்.

மணமக்கள் சர்வ அலங்காரப் பூஷிதராகப் பொலிவதில் நமக்கு ஒன்றும் வழக்கில்லை. அதற்காக முந்நூறு பேரின் இரண்டு மணி நேரத்தைக் களவாடுவது என்ன நியாயம்?

இலக்கிய நிகழ்ச்சி மாலை 6-05 மணிக்குத் துவங்கும் எனப் போட்டிருப்பார்கள். அதென்ன 6-05 என்று கேட்பீர்கள். ஞாயிறுகளில் 4-30 முதல் 6-00 வரை ராகு காலமாம்.

முன்பெல்லாம் எவரையேனும் தேடிப்போனால் கையில் முகவரி எழுதிய தாள் துண்டு இருக்கும். இன்று அலைபேசி எண் மட்டுமே வைத்துக்கொள்கிறார்கள்.

- கற்போம்...

நாஞ்சில் நாடன்

ஓவியம்: மருது