கிண்டல்



தன் மகன் ரவியின் முகத்தைப் பார்த்த அகிலா திக்கென அதிர்ந்தாள்.
‘‘ஏய் ரவி... என்ன ஆச்சி... ஏன் உன் கண் கலங்கியிருக்கு... எதுக்கு அழறே?’
‘‘அது வந்தும்மா... வந்து...’’

‘‘சொல்லுடா...’’‘‘என்கூட  படிக்கிற பசங்க என்னை ரௌடி மகன், குடிகாரன் மகன்னு தொடர்ந்து கிண்டல்  பண்றாங்கம்மா... எனக்கு அசிங்கமா இருக்கு...’’ என்று சொல்லிவிட்டு  தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான் ரவி.அகிலாவின் முகம் கோபத்தில் சிவந்தது.

‘‘ரவி...  அழாதேடா. கண்ணைத் துடைச்சிக்கோ..! உனக்கும் சரி எனக்கும் சரி தினம் இதே அவமானம்தான். இன்னைக்கு உன் அப்பா வீட்டுக்கு வரட்டும்.  இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்!’’ - உறுதியான குரலில் சொன்னாள் அகிலா.இரவு...

‘‘இதப்  பாருங்க... இனிமேலாச்சும் கொஞ்சம் மாறுங்க. டாக்டர், போலீஸ்காரர் இப்படியெல்லாம் உங்களைப் பார்த்தா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா? அதை விட்டுட்டு, எப்பவும் சினிமாவுல ரௌடி, குடிகாரன் கேரக்டர்லயே நடிக்கிறீங்க. இதனால குடிகாரன் மகன், வில்லன் பொண்டாட்டினு எங்க ரெண்டு பேரையும் எவ்வளவு கிண்டல்  பண்றாங்க தெரியுமா? இனிமேலாச்சும் எல்லா கேரக்டரையும் ஏத்துக்கிட்டு நடிங்க! நான் சொல்றது
புரியுதா?’’‘‘புரியுது...’’ என்றான் மதன்!

இரா.வசந்தராசன்