கடவுளின் கெஸ்ட் ஹவுஸ் !



மலேசியா

பரபரப்பான வாழ்க்கை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை நம்மைப் பிறாண்டும் வேலைகள். டெட்லைன்கள், டார்கெட்கள் என ஓயாத உழைப்பு. விடுமுறை நாட்களிலும் துரத்தும் டென்ஷன். சற்றே ரிலாக்ஸ் செய்ய ஏது வழி? சுற்றுலாதான்! புதிய பயணம், இடம், சூழல், அனுபவம் எல்லோர் இதயத்தையும் திறக்கும்.

ஜன்னலுக்கு வெளியே தொடு வானத்தில் ஒரே ஒரு மேகம் கறுப்புத் தீற்றலாகத் தெரிந்தது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் நோக்கிய பயணம் அது. மலேசிய சுற்றுலாத் துறையினர் கச்சிதமான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். அடுத்த 15 நிமிடத்தில் உச்சபட்ச உயரத்திற்கு அலுமினியப் பறவை சிறகு விரித்தபோது, நீல வர்ணப் பரப்பு துல்லியமாகத் தெரிந்தது.

உடம்பை வலிக்கச் செய்கிற பயணமில்லை. உண்மையில் யாருக்கும் எளிமையாக அடைய முடிகிற விஷயம்தான். சொந்த வீட்டைப் போல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பதும் நடுத்தர மக்கள் பலரின் கனவு. இப்போது அதெல்லாம் பெரிய விஷயமேயில்லை! குறிப்பாக மலேசியாவிற்கான பயணம் அருமையானது. ரொம்ப சுலபமும்கூட!சுவர்ண தீபம், யௌவன தீபம், காளகம், கடாரம், மலாயா எனப் பெயர்கள் வந்து உருமாறி இப்போது மலேசியாவாக உயர்ந்து நிற்கிறது. உலக வரைபடத்தில் சிறு புள்ளியாக இருந்தாலும் ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் வசீகரம் ஓரிரு நாடுகளுக்கு மட்டுமே உண்டு.

அப்படித்தான் ‘ஆசியாவின் சொர்க்கம்’ என மலேசியா கவனிக்கப்படுகிறது. ஒரு நல்ல சுற்றுலா நம் வாழ்வின் பாதையைத் தெளிவாக்குகிறது. பல நாட்களுக்கு நம்மை வழிநடத்துகிறது. இயற்கைக்கு நாம் எப்போதும் சிறுபிள்ளைகள்தான். பயணத்தின்போது, விமானத்தின் ஜன்னல் வழி பார்க்கும்போதோ, பேருந்தின் ஜன்னலோரம் உட்காரும்போதோ, ரயில் வண்டியின் லயத்தோடு சாய்ந்திருக்கும்போதோ மனதிற்கு ஒரு பெரிய சிறகு முளைப்பதை நீங்கள் உணர்ந்திருக்க முடியும். அது அங்கிருந்து நம்மைத் தூக்கிச் சென்று நாம் விரும்பும் அழகிய இடத்தில் விட்டு விடுகிறது. வாழ்க்கையைக் கூட வாழ்க்கைப் பயணம் என சொல்வதுதான் நம் மரபு!

வருகிற சுற்றுலாப் பயணிக்கு தாங்கள் அந்நிய மண்ணில் இருப்பதைப் போன்ற உணர்வே தோன்றாமல் பார்த்துக்கொள்வதுதான் சிறந்த சுற்றுலாச் சூழல். தாயின் கருப்பைக்குள் இருப்பதைப் போன்ற கதகதப்பை ஏற்படுத்துவதுதான் தலைசிறந்த சுற்றுலாப் பண்பாடு. சுற்றுலா என்பது செலவு அல்ல... முதலீடு! பொழுதுபோக்கல்ல... பொழுதாக்கம்! வேடிக்கை பார்ப்பதற்காக மட்டும் நாம் சுற்றுலா செல்வதில்லை. அங்கிருக்கும் மனிதர்களின் உணவு, உடை, கலை, வாழ்க்கை முறை, விருந்தோம்பல், திருவிழாக்கள் ஆகியவையும் முக்கியம். இடம் என்பது மூளையைப் போல, பண்பாடு என்பது இதயத்தைப் போல. இரண்டும் இணைகிறபோதுதான் உயிர்த்துடிப்பு உண்டாகிறது.

கோலாலம்பூர் பற்றியே ஆச்சரியப்படவும் தெரிந்துகொள்ளவும் சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு. விமான நிலையத்திலிருந்து 20 நிமிடப் பயணத்தில் நீங்கள் கோலாலம்பூரைத் தொட முடியும். மூன்று கோடிக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட இந்த நாட்டில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் வியக்க வைக்கின்றன. ஆட்சியாளர்களின் திட்டமிடும் திறனும், செயல்படுத்தும் வேகமும், நாட்டை வேகமாக முன்னேற வைத்திருக்கிறது. உலகத்தை சுற்றிப் பார்ப்பதையும், மலேசியாவைச் சுற்றிப் பார்ப்பதையும் சமமாகக் கருதுவதாக ஒரு பேச்சு இருக்கிறது.

நுழைந்ததும் ‘பெட்ரோனாஸ் டவர்’ எனும் கோலாலம்பூரின் இரட்டை கோபுரம் மறக்கவே முடியாதது. இதுவே பிரமாண்டம் என்றால், இந்த இரண்டு கோபுரங்களையும் இணைக்கும் பாலம் 48வது மாடியில் இருக்கிறது. என்னதான் நவீனம் என்றாலும் இரண்டு கோபுரங்களுக்கும் மத்தியில் நின்று வேலை பார்த்திருக்கும் இந்தியத் தொழிலாளர்களைக் கண நேரமாவது நினைக்காமல் இருக்க முடியவில்லை. 88 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடம் மலேசியாவின் மிகப் பெரிய அடையாளம். தினமும் 1700 பேருக்கு (அது என்ன கணக்கு?) இந்த கோபுரத்திற்குள் சென்று வர அனுமதி உண்டு.

இந்த இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகம் இருக்கிறது. எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத ஒரு ஸ்பாட். அங்கே இருக்கிற 300 வகையான உயிரினங்கள் கண்டு மீள கண்களுக்கு எண்ணம் இருக்காது. 90 மீட்டர் தூரத்திற்குநீருக்கடியில் நீளும் குகை அமைப்பில் நின்றால் போதும், கீழே உள்ள நகரும் அமைப்பு உங்களுக்குமுழுவதுமாகச் சுற்றிக் காண்பித்துவிடும். இது கனவா... நிஜமா... மாயமா... என்று பரவசம் அடையலாம். உங்களை அருகில் வந்து ரசிக்கும், மிரட்டும், செல்லம் கொஞ்சும் மீன் வகைகளை, கடல் உயிரினங்களை ரசிக்கவும் உங்களுக்கு அவசியம் இரட்டை மனநிலை தேவைப்படும்.

இறங்கி வந்துவிட்டால் மலாக்கா செல்லும் நேர்த்தியான சாலையில் மணிக்கு 100 கி.மீ வேகத்திற்கு பறக்க முடியும். குறுக்கீடுகள், கையை திடீரென்று தூக்கிக் காட்டி சாலையைக் கடக்கும் பகீர் மேஜிக்... எதுவுமே இங்கே கிடையாது. நம் உள்ளூர் நெடுஞ்சாலைகளும் இப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வந்து செல்லாமல் இல்லை.

அடுத்ததாக எங்களின் பயணம் ஈபோவை அடைவதாக இருந்தது. மலேசியாவின் மிகவும் சுத்தமான நகரம். சில்லிடுகிற அமைதியில் இருக்கிறது. பணக்காரர்களின் சொர்க்க பூமியாம். விலை குறைவான பொருட்களை விற்கும் சந்தை இடமாகவும் இருக்கிறது. மலேசியாவின் நான்காவது பெரிய நகரம். கோலாலம்பூரில் இருந்து விரையும் சாலைப் பயணத்தில் இரண்டு மணி நேரமே போதுமானது. பல நூற்றாண்டு பெருமையும், வரலாறும் பேசும் இடம்.

இங்குள்ள லெங்கோங் மியூசியத்தில்தான் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் எலும்புக்கூடு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. ஈபோ ரயில் நிலையம் பிரிட்டிஷ்காரர்களால் வடிவமைக்கப்பட்டது. ரயில் ஏறிவிட முடியாதபடிக்கு ரயில் நிலையமே வசீகரத்தில் இழுக்கிறது. ஈபோவின் கட்டிடங்கள் பாரம்பரியத்துடன் உயர்ந்து நிற்பவை. காரைக்குடி நாட்டுக்கோட்டை செட்டியார்களால் உருவாக்கப்பட்டு, இன்று அவை சீனர்களுக்கு சொந்தமாகி, வாழும் அடையாளமாகி நிற்கின்றன. உணவைப் பொறுத்தமட்டில் நூறாண்டு கால பெருமை கொண்டது ‘நாசிகண்டார்’! அதாவது, மீன் குழம்பு கலந்த சோற்றில், அவித்த வெண்டைக்காய், பொரித்த பாகற்காய், பொரித்த கோழி...

கூடவே அவரவர்க்குப் பிடித்த ஆட்டுக்கறிக் குழம்பு போன்ற மற்ற குழம்புகளையும் சேர்த்து சாப்பிடும் உணவு வகை! மிளகாய் சாந்துடன் வெங்காயம், அன்னாசிப்பூ ஆகியவற்றை உள்ளடக்கிய மீன் குழம்பின் சுவை நெஞ்சை அள்ளும். ஈபோவின் சுவர் ஓவியங்கள் வீதிகளில் இயல்பாக மனதைத் தொடுபவை. அவற்றின் அருமை அறிந்து மக்களே அவற்றைப் பாதுகாக்கிறார்கள். ஈபோ ஒயிட் காபி, உலகப் புகழ் பெற்றது.

குடித்துவிட்டால் தமிழகம் திரும்பும் வரை சுவை நாக்கின் நுனியில் சப்புக்கொட்டும். பனை எண்ணெயில் வறுத்தெடுக்கப்பட்ட காபி கொட்டைகள் அரைக்கப்பட்டு, அவை உறைநிலைக்கு உட்படுத்தப்பட்ட பாலோடு காய்ச்சப்பட்டு பரிமாறப்படுகிறது. என் சிறு வயது மகள் ‘மறுபடியும் மலேசியா போய் ஒயிட் காபி வாங்கி வா’ என்கிறாள். இன்னும் எனக்கு அந்த காபியின் சுவையை நம்ப முடியவில்லை.

 என் அனுபவத்தில் எனக்கான பெரும் சுவை ஈபோ ஒயிட் காபிதான்.அடுத்த ஸ்பாட்... கேமரூன் மலை வாசஸ்தலம். நம் ஊட்டியின் பன்மடங்கு விரிவு. ஊசியால் குத்தும் குளிர் அல்ல... தாலாட்டி தடவும் குளிர். மலேசியாவின் பசும்புதையல் கேமரூன் மலைப்பகுதி. பரப்பளவில் சிங்கப்பூருக்கு இணையானது.மலேசியா கடவுளின் தேசம் என்றால் கேமரூன்தான் அவரது கெஸ்ட் ஹவுஸ்!               

நா.கதிர்வேலன்