மாசு



ஹீரோ சூர்யா... ஸோ, மாஸ் படம் பண்ண வேண்டும். இப்போது மார்க்கெட் பேய்களுக்குத்தான்... ஸோ, ஹாரரையும் ஜூஸாக்கிக் கலக்க வேண்டும். இடையிடையே வெங்கட் பிரபு டச் கிச்சுகிச்சு தூவி ஒரு படம்... அதுதான் ‘மாசு என்கிற மாசிலாமணி’!சின்னச்சின்ன திருட்டுகள் செய்து திரிகிற பாரம்பரிய கோலிவுட் ஹீரோ சூர்யா. கூடவே சுற்றும் செவத்த செவ்வாழையாக பிரேம்ஜி.

விபத்தில் சூர்யாவுக்கு பலத்த அடிபட, அதன்பின் அவர் கண்களுக்கு ஆவிகளும் தெரிய ஆரம்பிக்கின்றன. தங்கள் கடைசி ஆசையை நிறைவேற்ற ஆவிகள் சூர்யாவிடம் உதவி கேட்டு நிற்க, அவற்றை மூலதனமாக்கி சம்பாதிக்கத் துவங்குகிறார் சூர்யா. திடீரென இந்தப் பேய்க்கூட்டத்தில் புதிய அட்மிஷன்... இன்னொரு சூர்யாவேதான். இதனால் வரும் குழப்பங்கள்... ஆவி சூர்யாவின் ஃப்ளாஷ்பேக்... எனத் தொடர்ந்து, வில்லன்களை வதம் செய்யும் க்ளைமேக்ஸில் போய் முடிகிறது ‘மாசு’!

சூர்யா செம அழகு. நண்பன் ப்ரேம்ஜி, சித்தப்பா போலத் தெரியும் அளவுக்கு இளமை. சிங்கம் கெட்டப்பில் ஓபனிங் கொடுத்துவிட்டு, ஒட்டு மீசையைப் பிய்த்தபடி, ‘‘இதெல்லாம் ஒட்டிக்கிட்டு எப்பிடிடா நடிக்கிறாங்க?’’ எனத் தன்னைத் தானே கலாய்ப்பது சூர்யாவுக்குப் புதுசு.

வொயிட் காலர் ஜாப் மாதிரி நயன்தாராவுக்கு இதில் வொயிட் டிரஸ் ஜாப். நர்ஸ் கேரக்டர் என்பதால் மட்டுமல்ல... வேலையும் ரொம்பக் கம்மி. ஒரு டூயட் கூட இல்லை அவருக்கு. ஃப்ளாஷ்பேக்கில் வரும் ப்ரணிதாவோ, ஒரே ஒரு டூயட் பாடிவிட்டுக் கொடூரமாக செத்துப் போகிறார். கொஞ்சமே வந்தாலும் பார்த்திபன் குசும்பு அருமை. சமுத்திரக்கனி மாதிரி ஒரு வில்லனை இவ்வளவு டம்மியாகவா பயன்படுத்துவீர்கள்? போங்க பாஸ்!

ப்ரேம்ஜி, அண்ணன் படத்தில் மட்டும்தான் ஜொலிப்பார் போலிருக்கிறது. அவர் முகம் செய்யும் மாயம்... ‘அப்போ நான் செத்துட்டேனா? நான் ஒரு பேயா?’ எனும்போது கூட சிரிப்புதான் வருகிறது. இந்த முறை பிரேம்ஜிக்கு பெண்களிடம் வழியும் கேரக்டர் இல்லை. வேண்டு மென்றே தவிர்த்திருக்கலாம். கல்யாணத் திட்டம் காரணமோ!

பேய்ப்படம் என்றாலும் உடல் சில்லிட வைக்கும் பகீர் திகில் ஃபார்முலா இல்லை. பேய்களை அப்பாவிகளாக்கி காமெடிக்கு முயன்றிருப்பதால், பழைய ‘பட்டணத்தில் பூதம்’ எஃபெக்ட்டைத் தவிர்க்க முடியவில்லை.

படத்தில் கதை, லாஜிக்... மூச்! கேட்கக் கூடாது. திரைக்கதையின் காமெடி ட்ரீட்மென்ட் மாத்திரமே உதவுகிறது. இடைவேளை வரை பரவாயில்லாமல் பயணித்து, திடுக் ட்விஸ்ட் வைப்பவர்கள், அதற்குப் பிறகு எதைப் பற்றியும் கவலை கொள்ளவில்லை போல. ‘‘போப்பா... இன்ட்ரவலுக்கு அப்புறம் நீ ஸ்லோவாயிட்டே!’’ என ஓரிடத்தில் பிரேம்ஜியே அதைச் சொல்லிவிடுகிறார். டபுள் ஆக்‌ஷனாக சூர்யாக்கள் வந்து நின்றவுடன், ‘‘என்னப்பா, அண்ணன் தம்பி ஃப்ளாஷ்பேக்கா?’’ என ஸ்கிரிப்ட்டிலேயே கலாய்க்கிறார்கள். ஆனால், க்ளைமேக்ஸில் சொல்லப்படும் ஃப்ளாஷ்பேக் அதைவிடவும் சுமார் ரகம்! பேய்கள் துரத்தும் கிராஃபிக்ஸ் காட்சி எவ்வளவு மிரட்டியிருக்க வேண்டும்... ம்ஹும்!

பின்னணியில் யுவன் கலக்கிவிட்டார். ‘பூச்சு பூச்சு பூச்சாண்டி’ பாடல் ஓகே. ஆர்.டி.ராஜசேகர் கேமராவும் பிரவீன் எடிட்டிங்கும் படத்துக்கு ரிச் டச்.
பெயர் மாறிய ‘மாஸ்’ - நோ பாலில் மூச்சிரைக்க ஐந்து ரன் ஓடி சிக்ஸர் எடுக்கும் முயற்சி!

- குங்குமம் விமர்சனக் குழு