கமல் பாடம்!



75 வயதான கமலின் தந்தை, சில்க் ஸ்மிதாவை பேட்டி காணச் செய்த ‘நற்பணி’யை அன்றே ‘குங்குமம்’ செய்திருக்கிறது! அவர் காந்தியையும் சில்க்கையும் ஒப்பிட்டது கலக்கல் காமெடி சென்ஸ்!
- மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை.

‘பாபநாசம்’ படத்துக்காக நெல்லைத் தமிழை பணிவோடு கற்றுக்கொண்ட உலக நாயகன் கமல் வியக்க வைத்தார். நேற்று முளைத்த உள்ளூர் நாயகர்களுக்கு அவரே ஒரு பாடம்!
- ம.மதுவந்திகா, திருவண்ணாமலை.

துறவியாகிவிட்ட பாலிவுட் நடிகை பர்கா மதனின் பேட்டி மனசிற்கு இதம்! பெண்களின் பொதுத் தொண்டு வெறும் பேச்சல்ல என்பதற்கு பர்கா நல்ல எடுத்துக்காட்டு!
- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

‘இப்போது விவசாயிகள் தற்கொலை... அடுத்தது நெசவாளர்களா?’ என்ற கட்டுரை, நிதர்சன உண்மை! 3.9 லட்சம் நெசவாளர்களை வஞ்சிக்கும் இந்த சட்டத் திருத்தம் தேவைதானா?
- எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்.

‘எல்லோரும் நடிகர்கள்தான். அதென்ன ஹீரோ, காமெடியன்?’ எனும் சந்தானத்தின் கருத்து நச். ஹாலிவுட்டில் இருக்கும் இந்த மனநிலை இங்கும் வரவேண்டும்!
- மு.மதிவாணன், அரூர்.

விவசாயிகளை உற்சாகப்படுத்தி முழுமூச்சாக வேளாண்மையில் ஈடுபடச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பருப்பு, உளுந்து என அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வைத் தவிர்க்க முடியாது!
- கோ.சு.சுரேஷ், கோவை.

படிப்பு பத்தாம் கிளாஸ் என்றாலும், 30 வருட உழைப்பின் பலனை அனுபவிக்கும் நடிகர் ‘தளபதி’ தினேஷின் மனசு ரொம்ப விசாலம்!
- ம.கிரிஜா, புதுச்சத்திரம்.

அஜித் புதுப்படம் பற்றிய அனைத்துத் தகவல்களும் அருமை. லட்சுமி மேனனுக்கு அஜித் பரிசு கொடுத்தது ஓகே. அது என்ன பரிசு என்றும் சொல்லியிருக்கலாமே பாஸ்!
- வரதராஜன், அம்பாசமுத்திரம்.

‘மோடி 365 நாட்கள்’ கட்டுரை விருப்பு வெறுப்பின்றி அவரை அலசியது. மோடி எனும் ‘இரும்பு மனிதர்’, ‘கரும்பு மனிதராகவும்’ ஆக வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு!
- சிவமைந்தன், சென்னை.

வெளிநாட்டில் படிப்பதை பெரிய கௌரவமாக நினைக்கும் மக்களுக்கு அதில் உள்ள சிக்கல்களை கோடிட்டுக் காட்டி எச்சரிக்கை செய்திருப்பது காலத்தினால் செய்த உதவி!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.