குட்டிச்சுவர் சிந்தனைகள்



வயது அதிகமாகுதேன்னு கவலைப்பட்டுக்கிட்டு கிடக்கீங்களா, அடுத்த வேலைய பார்க்கிறதில்ல? வயிறு உப்புதுன்னு கவலைப்பட்டுக்கிட்டு கிடக்கீங்களா, புடிச்சத சாப்பிடுறது இல்லையா? வீட்டுப்பாடம் அதிகமாகுதுன்னு கவலைப்பட்டுக்கிட்டுக் கிடக்காங்களா குழந்தைகள், மறுநாளும் ஸ்கூலுக்கு போறாங்கதானே? பசங்க கண்டுக்கறதில்லைன்னு கவலையில கிடக்கறாங்களா பெரியவங்க, அவங்க தேவைகளை பார்க்கிறதில்லை?

வோட்டு போடாதவங்க எண்ணிக்கை அதிகமாகிட்டே வருதுன்னு தேர்தல் ஆணையம் தேர்தல்கள நடத்தாம போயிடுதா என்ன? முதல் இன்னிங்ஸ்ல எதிரணி அதிக ரன் அடிச்சுடுச்சுன்னு செகண்ட் ஆஃப் நடத்தாமலா போயிடுறாங்க? இப்படி ஒவ்வொரு விஷயத்திலும்  சகிப்புத்தன்மை நம்மகிட்ட இருக்கிறதுனாலதான் அரசாங்கம் முதல் அண்ணாச்சி வரை, பெட்ரோல் முதல் பேரீச்சம்பழம் விலை வரை அதிகமாக்கிக்கிட்டே போறாங்க.

* ஒரு கோடில படமெடுத்தாலும், நூறு கோடில படமெடுத்தாலும்... திருட்டு டி.வி.டி விலை முப்பது ரூபாதான். இதான் வாழ்க்கை!
* குழந்தைங்க விரும்பிச் சாப்பிடுற நூடுல்ஸ்ல உப்பு அதிகமா இருக்குனு அதைத் தடை பண்றாங்க. ஆனா, அதுவே உப்பு போட்டிருக்கிற பேஸ்ட்டை நம்பி பல்லு விளக்குறாங்க. இதான் வாழ்க்கை!

* எல்லா படத்துலயும் தன் சொத்தை வித்து,  நிலத்தை வித்து மக்களுக்கு பணம் கொடுப்பாரு சூப்பர்ஸ்டார். ஆனா, கடைசி ரெண்டு தடவையா அவரு படத்தையே பார்க்காம, வசூல் தராம விட்டுட்டாங்க மக்கள். இதான் வாழ்க்கை!
*பாடல் வெளியிடுறதுக்கு ஹாலிவுட்ல இருந்து அர்னால்டு எல்லாம் வந்தாங்க. ஆனா, படம் வெளிவந்தவுடனே கோர்ட்டுல இருந்து அமீனா தான் வந்தாங்க. இதுவும் வாழ்க்கைதான்!
* லேண்ட்லைன்ல இருந்து செல்போனுக்கு மிஸ்டு கால் கொடுத்தா அது எந்த நம்பர்ல இருந்து வந்துச்சுன்னு தெரியும். அதுவே செல்போன்ல இருந்து லேண்ட் லைனுக்கு மிஸ்டு கால் கொடுத்தா தெரியுமா? இப்படித்தான் இருக்கு வாழ்க்கை!
* பன்னிரெண்டு ராசியிலயும் கன்னிப் பெண்கள் இருக்கலாம். கன்னி ராசியில கல்யாணமான பெண்கள் கூட இருக்கலாம். இதான் வாழ்க்கை!
இப்படி மொக்கை ஒன்லைனரெல்லாம் படிச்சுட்டு ஓவரா யோசிக்காதீங்க! ஏன்னா, நமக்கு லீவுன்னா சரக்கை அன்னைக்கே வாங்கணும்... டாஸ்மாக் லீவுன்னா சரக்கை அதுக்கு முந்துன நாளே வாங்கணும்... இம்புட்டு சிம்பிளானதுதான் வாழ்க்கை!

சில நாட்களுக்கு முன் ஒரு கொரிய மொழி கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. அதன் தமிழாக்கம் இதோ... (கொரிய மொழி எனக்குத் தெரியுமான்னு கேட்காதீங்க. கொரிய மொழி உங்களுக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும்... ஆங்!)அன்புள்ள பிரதான எதிர்க்கட்சிகளே மற்றும் பிரபலமில்லாத உதிரிக்கட்சிகளே! உங்கள் அனைவருக்கும் வணக்கம் கூறி இந்தக் கடிதத்தை ஆரம்பிப்பது உங்கள் ஒரு ஓட்டு.

அய்யா, தாங்கள் அனைவரும் இடைத்தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை ஒருசேர எடுத்துள்ளீர்கள் என்ற செய்தியைக் கேட்டு, ஏற்கனவே அடி வாங்கிக் கிடந்த சொம்பு மேல இடி வந்து விழுந்த மாதிரி துடிதுடித்துப் போனேன். ஏற்கனவே கடந்த பத்து மாதங்களாக எங்கள் தொகுதியில் ஒரு வேலையும் நடக்காமல், பூக்கடையாக இருந்த தொகுதி சாக்கடையாக நாறத் தொடங்கிவிட்டது. கிட்டத்தட்ட மொத்த மாநிலமும் முடக்குவாதம் வந்து முடங்கிக் கிடந்தாலும், நமக்கு வாய்த்த குச்சியப் புடிச்சுக்கிட்டாவது நடக்கத் தொடங்கினால் பரவாயில்லை என்றுதான் எல்லா தொகுதிக்காரர்களும் நினைப்போம்.

இப்படிப்பட்ட நிலையில், எங்கள் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலை நீங்கள் எல்லாம் புறக்கணிக்கப் போகிறீர்கள் என்ற செய்தி பால் மணம் மறக்கா எங்கள் பூ மனங்களில் வேல் போல வந்து பாய்ந்தது. அய்யா, கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க! இத்தனை மாசமாவது பால் குடம் எடுக்க, பன்னீர் காவடி எடுக்க, அங்கப்பிரதட்சணம் உருள, மண் சோறு தின்னு மிரள எங்களுக்கும் காசு கைல புரண்டுச்சு. இப்ப அந்த வருமானம் நின்னுடுச்சு. இந்த நேரத்துல வாங்குன கைமாத்தையும் கடனையும் அடைக்க பை-எலெக்‌ஷனப்ப வர்ற பைசாதானே பயன்படும்! சரியான போட்டி இருந்தாத்தானே எங்களுக்கு டிலே இல்லாம காரியம் நடக்கும்?

நம்ம மூணாவது தெரு முனுசாமி இந்த இடைத்தேர்தலை நம்பித்தான் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கிற கனவை நனவாக்கப் போறாரு. நம்ம தெற்குத் தெரு தண்டபாணி, இப்ப இலவசமா வரப்போற மிக்ஸி கிரைண்டரதான், தன் பொண்ணு கல்யாணத்துக்கு சீதனமா தரப் போறாரு. அட, நம்ம மருதமுத்து மவன் முருகேசன், இந்த இடைத்தேர்தலப்ப கிடைக்கிற புது வேட்டி சட்டைய நம்பித்தான், பொறந்த நாளுக்கு துணி வாங்காம இருக்கான். இவ்வளவு ஏன், இந்த இடைத்தேர்தலுக்கு வீடு தேடி வரும் காசை நம்பித்தான் மளிகைக் கடை மன்னார் அண்ணாச்சி என்கிட்ட பாக்கி கேட்காம இருக்காரு.

பல போர்களைப் பார்த்திருக்கும் எங்க ரோடுகள் இந்த இடைத்தேர்தலை சாக்கா வச்சுத்தான் பல வருஷங்களுக்குப் பிறகு தார் பார்க்கணும். பிடியே இல்லாத பல அடி பம்புகள் இந்த பை-எலெக்‌ஷனை வச்சுத்தான் ரெடியாகணும். குப்பைத் தொட்டி வச்சேன்னு கணக்கு காட்டிய தொப்பைத் தொட்டி கவுன்சிலர்கள் எல்லாம் கையப் புடிப்பாங்க, காலைப் புடிப்பாங்க. இப்படி காஞ்சி கிடக்கிற எங்க விவசாய நிலத்துல காசு என்னும் காவிரித் தண்ணியப் பாய்ச்ச வர்றப்ப, எங்களை சாய்ச்சுட்டு போறீங்களே... நீங்க நழுவிப் போயிட்டா, சாயம் போன சேலையாட்டம் நாங்க மதிப்பிழந்து போயிடுவோமே!

காசு இருக்கிறவன் எதுக்கு களவு பண்றான்? சரியான போட்டி இல்லாட்டி, தேர்தல்ல நிக்கிறவன் எதுக்கு செலவு பண்றான்? அட, பணம் கூட கிடக்கட்டும்! நீங்களும் இல்லாட்டி எங்களை மதிச்சு யாரு ஒரு பத்து பதினஞ்சு நாளைக்கு அம்மா, தாயே, தாய்க்குலமே, தந்தைக் குலமே, தெப்பக்குளமேன்னு மரியாதையோட பேசுவா? என்னம்மா இப்படிப் பண்றீங்களேம்மா?

ஆல்தோட்ட பூபதி