ஐந்தும் மூன்றும் ஒன்பது...



மர்மத் தொடர் 22

‘‘நான் நம்பியது வீண் போகவில்லை. அந்த வெள்ளித்தட்டில் நான் சாப்பிட்ட நேரம், எனக்கு மைய அரசின் பத்ம விருது கிடைத்தது. இது எனக்குப் பெரிதும் ஊக்க
மளித்தது. இந்த விருதின் நிமித்தம் என்னை பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டனர். அவர்களில் சிலர் நல்ல கேள்விகளையும் கேட்டனர்.

அதில் ஒருவர், ‘அகழ்வாராய்ச்சி செய்வதால் நாட்டில் பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது?  இதனால் நெல்தான் கூடுதலாய் விளைந்துவிடப் போகிறதா? இல்லை, நம் அன்றாட வாழ்க்கைக்கு இதனால் என்ன பயன்?’ என்று கேட்டார்.

அனேகம் பேர் மிக மெட்டீரியலாகவே - அதாவது பொருள் சார்ந்தே - யோசிக்கிறார்கள் என்பதை இதன்மூலம் நான் தெரிந்து கொண்டேன். ‘அகழ்வாராய்ச்சியில் புதையல் கிடைத்தது. அதன் மதிப்பு பல கோடிகள்’ என்றால் ஒருவேளை இவர்கள் திருப்தி அடைந்திருப்பார்கள். அப்படியும் நடந்திருக்கிறது. எனவே, கேள்வி கேட்ட நபருக்கு நான் விளக்கமளிக்கத் தயாரானேன்.

‘எங்கள் இலாகாவால் உடனடியாகவோ, நேர்முகமாகவோ ஒரு பயனும் இல்லை. ஆனால் ஒரு சரியான வரலாறு உருவாக நாங்கள் மிகவே பயன்படுகிறோம். ஒரு நாட்டுக்கு அதன் வரலாறு மிக முக்கியமானது’ என்று கூறிய நான், ஒரு தகவலையும் கூறினேன். ‘தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் கஞ்சமலை என்று ஒரு மலை இருக்கிறது. இந்த மலை இரும்புத் தாதுவை நிரம்பக் கொண்டுள்ளது.

உடம்பைக் கட்டுக்கோப்பாய் வைத்திருக்கும் யோகிகளுக்கு இந்த மலை மிகப் பிடித்தமான இடம். இங்கே ஒருமுறை வந்தால் அவர்களுக்குத் திரும்பிச் செல்லவே தோன்றுவதில்லை; அவ்வளவாக பசியும் எடுப்பதில்லை; உடம்பில் உற்சாகமும் துளிகூட குறைவதே இல்லை. பிறகே தெரிந்தது... அந்த மலை இரும்புத்தன்மையோடு இருப்பதால், அது காந்தக் கதிர்வீச்சு உள்ளவர்களை தன்வசம் ஈர்க்கிறது என்று! இங்கே நிறைய சித்தர்கள் நடமாட்டமும் இருக்கிறது. இங்கு ஊற்றெடுக்கும் நீரில் குளித்தால் தோல் நோய்கள் மறைகின்றன.

கனிமவள ஆய்வாளர்கள் ‘இந்த மலைக்கற்களில் இரும்பு எவ்வளவு உள்ளது, துத்தநாகம் எவ்வளவு உள்ளது, ஜிப்சம் எவ்வளவு உள்ளது’ என்றே கணக்கெடுப்பார்கள். இதைக் கடந்து இங்கே ஆய்வு நிகழ்த்த ஏதாவது உள்ளதா என்று நான் ஊடுருவியபோது எனக்கு அரிய தகவல்கள் கிடைத்தன.அந்த நாளில் இந்த கனிமவளத்தைப் பயன்படுத்தி இரும்புத்தாது வைத் தனியாகப் பிரித்து எடுத்து, அதை உருக்கி தூண் வடிவில் செய்து, அதன்மீது ஆமணக்கு எண்ணெய் பூசி, பிறகு சிறு பாய்மரக் கப்பல்களில் ஏற்றி பூம்புகார் துறைமுகம்  வரை கொண்டு சேர்த்திருக்கிறார்கள்.

கஞ்சமலைக்கு சமீபத்தில் இருக்கும் பூலாம்பட்டி வழியாகப் பாய்ந்திடும் காவிரி ஆறு இந்த நீர்வழிப் பயணத்திற்கு பயன்பட்டுள்ளது. அப்படி ஏற்றுமதி செய்யப்பட்ட இரும்புத் தூண்கள், கப்பலில் ரோம் நகருக்குக்கூட  சென்றுள்ளன!

இதற்கு ஆதாரமாய் பூலாம்பட்டியை ஒட்டி நாங்கள் ஆய்வு செய்தபோது இரும்பை உருக்கிய அடுப்புகள், வினோதமான அகப்பைகள், வார்ப்புப் பெட்டிகள் என்று நிறையவே கிடைத்தன.  அந்த நாள் தமிழன் பூலாம்பட்டியில் இருந்து கொண்டு நீர்வழியாக ரோம் வரை ஏற்றுமதியே செய்திருக்கிறான் என்கிற விஷயம் அதிலிருந்து தெரிய வந்தபோது ஒரு ஆச்சரியப் பெருமிதம் தோன்றியது.’’- கணபதி சுப்ரமணியனின் ஆய்வுக் கட்டுரையிலிருந்து...

பத்மாசினி போனை மிகச் சோர்வாகக் கீழே வைத்தாள். முத்தழகு இறந்து விட்டாள் என்ற சோகத்தோடு, ‘புதிதாக ஒரு நல்ல வேலைக்காரி இனி கிடைக்க வேண்டுமே’ என்கிற கவலையும் சேர்ந்து கொண்டது. முத்தழகு விஷயம் போலீஸ் கேஸாகி என்னவெல்லாம் செய்யுமோ என்கிற பயமும் மனம் முழுக்கப் பரவியது. குழப்பம், ஏமாற்றம், பயம் என்கிற மூன்றுமே பாம்பின் விஷம், தேளின் விஷம், பல்லி விஷம் போல மூன்று விதமானவை. இம்மூன்றும் ஒரே தருணத்தில் துளிர்க்கும்போது மிகக் கொடூரமாக இருக்கும் அதன் உணர்வு.

பத்மாசினிக்கும் அப்படித்தான் இருந்தது.அறையிலிருந்த கணபதி சுப்ரமணியனின் காதுக்கும் விஷயம் சென்று சேர்ந்தது. அவரின் நெடிய வாழ்வில் நல்லதும் கெட்டதுமாய் எவ்வளவோ தருணங்கள். ஆனாலும் அப்போதைய தருணம் அவரை நிறையவே தவிக்க வைத்தது.வாழ்க்கை என்பது நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது.  அவற்றில் சில மாற்றங்களை முன்னதாக உணர முடிகிறது.

 பல மாற்றங்கள் நடந்து முடிந்த பிறகே தெரிய வருகின்றன. அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியும் உள்ளது. இதுபோன்ற தருணங்கள்தான் வாழ்வை ஒரு மலை போல பாரமாக்கிக் காட்டுகின்றன. மல்லாக்கப் படுத்திருக்கும்போது யாரோ ஒரு மலையைத் தூக்கி மார்பின்மேல் வைத்துவிட்டுப் போய் விட... சுமக்க முடியாமல் மூச்சுத்திணறலோடு படுத்திருப்பதுபோல் ஒரு அல்லாடல்!

‘இந்த நான்கைந்து நாட்களில்தான் எத்தனை எத்தனை சம்பவங்கள்!  எலும்பும் தோலுமாய் ஒரு மனிதர்... அவர் பேசினாலே பிரமிப்பு தட்டியது. ஒரு பழைய தகரப் பெட்டி... ‘நான்தான் கால ரகசியப்பேழை’ என்பது போன்ற அதன் தோற்றம்... நினைத்துக்கூட பார்த்திராத அனந்தகிருஷ்ணனின் நண்பன் மரணம்! அதே போன்றதுதான் முத்தழகுவின் மரணமும்...

இந்த வாழ்வை எப்படி எடுத்துக்கொள்வது? எப்போது எது நடக்கும் என்பது தெரியாத புதிரான நிலையில் போகிற போக்கில் போய்க்கொண்டே இருப்பதற்குப் பெயர்தான் வாழ்வா?’- கணபதி சுப்ரமணியன் பலவிதமான சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்க, அனந்த கிருஷ்ணன் அழைத்தார்.
‘‘அப்பா...’’
‘‘சொல்லுப்பா!’’

‘‘முத்தழகு போய்ட்டாப்பா!’’
‘‘தெரியும்...’’
‘‘போஸ்ட் மார்ட்டம் பண்ணி நாளைக்குத்தான் உடம்பைத் தருவாங்களாம்...’’‘‘அதுதானே எப்பவும் வழக்கம்?’’‘‘ஆனா முத்தழகு குடும்பத்தைச் சேர்ந்த சிலர், அந்த எலெக்ட்ரீஷியன்தான் தப்பு பண்ணிட்டான்னு அவனை அடிச்சு நொறுக்கிட்டாங்க...’’‘‘விஷயம் தப்புத்தப்பா போய் சிக்கல் அதிகமாகிடக் கூடாது. சப் இன்ஸ்பெக்டர் மூலமா கன்ட்ரோல் பண்ணு!’’ ‘‘எல்லாம் பண்ணிட்டேன். சப் இன்ஸ்பெக்டரும் அவங்ககிட்ட பேசினார். ‘போன உயிர் திரும்ப வரப்போகுதா? அமைதியா இருந்து சார் கொடுக்கற பணத்தை வாங்கிக்கிட்டுப் போங்க’ன்னு சொல்லி தற்காலிகமா 50 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார். சொன்னதைத் தந்து அடக்கி வெச்சிருக்கேன்.’’
‘‘குட்...’’

‘‘என்ன குட்டோ... ஆமா, அந்தப் பொட்டியைத் தூக்கிக் கொடுத்துட்டீங்களாமே..?’’
‘‘ஆமா...’’‘‘ரியலி?’’‘‘சந்தேகமா இருந்தா உன் பொண்ணுகிட்டே கேள்!’’
‘‘போதும்பா... இனி இந்த ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம். உங்க அனுபவங்களை எல்லாம் வச்சு புத்தகம் எழுதுங்க. அது போதும்!’’
‘‘பாக்கலாம்...’’

‘‘பாக்கலாமா... நீங்க எழுதறீங்க! அதை இங்க இருந்துதான் எழுதணும்னும் இல்லை.’’‘‘அப்ப என்ன வெளிய எங்கயாவது போகச் சொல்றியா?’’‘‘கொடைக்கானலுக்குப் போங்கப்பா. அங்கதான் நமக்கொரு பண்ணை வீடு இருக்குல்ல...’’‘‘யோசிக்கறேன்...’’ - என்றவராக போனை கட் செய்தார். எதிரில் அவரது கிட்பேக். டேபிள் மேல் சார்ஜர், செல்போன், கெய்ரோ போனபோது வாங்கிய நவீன டூல் பாக்ஸ், மினி டிரான்சிஸ்டர், அன்டார்க்டிகாவில் பறவை வேட்டைக்கு பயன்படும் சப்தத்தை வெளிப்படுத்தாத ஒரு அடி நீள துப்பாக்கி என பல அயிட்டங்கள்.

வெற்று மனதோடு அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது பத்மாசினி வந்தாள். ‘‘சப் இன்ஸ்பெக்டர் ஒருத்தர் வந்திருக்கார்’’ என்றாள் சுரத்தில்லாத குரலில்.
கணபதி சுப்ரமணியனும் அவரை எதிர்கொள்ளத் தயாரானார். அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு கீழே இறங்கிச் சென்றார். ஹாலில் சோபாவில் காக்கிச்சட்டை முதுகு தெரிய எஸ்.ஐ. அமர்ந்திருந்தார்.
‘‘வாங்க எஸ்.ஐ. சார்...’’
‘‘ஹலோ சார்!’’

‘‘எங்க இருந்து வர்றீங்க?’’
‘‘ஜி.ஹெச்ல இருந்து வர்றேன். எஃப்.ஐ.ஆர். போட்டு பேப்பரை மூவ் பண்ணணும். அதான் ஆக்சிடென்ட் எப்படி நடந்ததுன்னு விசாரிக்க வந்தேன்!’’
‘‘நீங்க மட்டுமா?’’
‘‘கமிஷனர் என்னைத்தான் போகச் சொன்னார்...’’
‘‘நல்லது! வாங்க... வந்து பாருங்க!’’
‘‘எப்படி இப்படி ஆச்சு?’’

‘‘பாருங்க... பாத்தாலே தெரிஞ்சுடப் போகுது. முப்பது வருஷத்து வீடு. அந்த நாளைய வயர் கனெக்‌ஷன். அப்ப வாங்கின சாமானுக்கெல்லாம் இவ்வளவுதான் ட்யூரபிலிடி.’’எஸ்.ஐ. எழுந்து சென்று கிச்சனைப் பார்த்தார். எலெக்ட்ரீஷியன் வயரை இழுத்து பிளாஸ்திரி போட்டு அப்படியே விட்டிருந்தான். சுவற்றில் கரி அடித்த தடயம் வேறு. அவர் தன் செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.‘‘எலெக்ட்ரீஷியனை விசாரிச்சுட்டு கொஞ்சம் வேகமாக அனுப்பி வையுங்க. சிங்கிள் ஃபேஸ்ல ஏ.சி. எல்லாம் போட்டுக்காம பாத்துப் பாத்து யூஸ் பண்ணிக்கிட்டிருக்கோம்!’’

‘‘நான் போய் அனுப்பி வைக்கறேன் சார்! நீங்க டென்ஷன் ஆக வேண்டாம். அரசியல்வாதிகிட்ட இருந்து ஒரு போன் வந்தா, கொலையையே தற்கொலைன்னு மாத்திட்றோம். இது உண்மையா நடந்த விபத்து. இதைக் காம்ப்ளிகேட் ஆக விடுவோமா?’’ - எஸ்.ஐ. இதமாக பேசினார்.‘‘நான் இந்த மாதிரி மதிப்பைத்தான் சம்பாதிச்சு வெச்சிருக்கேன். கமிஷனருக்கும் ஹாஸ்பிட்டல்ல டாக்டர்சுக்கும் என் நன்றியைச் சொல்லுங்க’’ - என்ற கணபதி சுப்ரமணியனை புன்னகையோடு பார்த்தபடியே புறப்பட்டுப் போனார் அவர்.பத்மாசினி ‘அப்பாடா’ என்று மார்பு தழைய பெருமூச்சு விட்டாள்!கடலோரம்!

முன்பு போல காதல் ஜோடிகள் பெரிய அளவில் இல்லை. டாய்லெட் போகும் சமயத்தைக்கூட விடாமல் பயன்படுத்தி செல்போன் வழியே பேசிக்கொண்டு விடுவதால், கடற்கரை தேவை அவர்கள் வரையில் குறைந்து விட்டது. மாறாக கிரிக்கெட் விளையாடுவோர்க்கு கடற்கரை இப்போது மிகவே பயன்படத் தொடங்கி விட்டது.

அலை அடிக்கும் இடத்தில் கோணலாய் நின்றபடி இருக்கும் கட்டுமரங்கள் கூட குறைந்து விட்டன. மீனவர்கள் நவீன நார்வே படகுகளுக்கு மாறி விட்டார்கள்.
இந்த சுண்டல் வடை சிறுவர்கள் மட்டும், ‘மனிதன் தீனி விஷயத்தில் திருந்தவே மாட்டான்’ என்பது போல ஆங்காங்கே திரிந்து கொண்டிருக்க... ஓரிடத்தில் வர்ஷன் தன் தங்கை அனுஷாவிடம் நடந்ததை எல்லாம் கூறி முடித்திருந்தான்.அவள் அலமலந்து போய் அமர்ந்திருந்தாள்.

ப்ரியா மணலில் கிடந்த கிளிஞ்சல்களைக் கொண்டு ஒரு மணல் கோபுரம் கட்டி அதன் மேல் கிளிஞ்சல்களை மூடி ஒரு கலையழகை உருவாக்கிக் கொண்டிருந்தாள். அவளிடம் ஏனோ பேச்சே இல்லை. அனுஷா அவளை அடிக்கடி பார்த்தாள். வர்ஷனும் ப்ரியாவைப் பார்த்தவனாக, ‘‘நீ கோபுரம் கட்டினது போதும் ப்ரியா... நானே பேசிகிட்டிருக்கேன். அனுகிட்ட நீயும் பேசு’’ என்றான்.‘‘என்ன பேச... அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே?’’
‘‘எங்க முடிஞ்சது. அவங்க பணம் என் அக்கவுண்ட்ல இருக்கு. அதனாலயே எது வேணும்னாலும் நடக்கலாம்...’’
‘‘ஓ... உனக்கு அவ்வளவு க்ளாரிட்டி இருக்கா?’’

‘‘ப்ரியா... நான் பணத்தை எடுத்து போலீஸ் கமிஷனரைப் பார்த்து, அவர்கிட்ட கொடுத்து, நடந்ததை எல்லாம் சொல்லிடலாமான்னு பாக்கறேன்!’’
‘‘அவங்க சொன்னதை மறந்துட்டியா? ‘இந்த விஷயம் பத்தி யார்கிட்டயும் மூச்சு விடக்கூடாது. அதுக்குத்தான் இவ்வளவு பணம்’னு சொன்னாங்களே!’’
‘‘அப்ப நாமளும் மறந்துட்டு நம்ம வேலையைப் பாக்கலாம்ங்கிறியா?’’
‘‘இருட்டப் போகுது... புறப்படுவோமா?’’
‘‘எனக்கு என்ன பதில்?’’
‘‘நாளைக்கு சொல்றேன்!’’

‘‘ஏன்... யோசிக்க டைம் தேவைப்படுதா?’’
‘‘அதுக்கு மட்டும் இல்ல...’’
‘‘வேற எதுக்கு?’’
‘‘அனேகமா என் தாத்தா இப்ப வீட்ல இருக்க மாட்டார்... அவர் இருந்தா, நீ எல்லாத்தையும் மறந்துட்டு உன் வேலையைப் பார். இல்லேன்னு வை... இனிதான் நமக்கு வேலையே!’’

‘‘நீ பேசறதே புரியலியே ப்ரியா?’’‘‘புரியும்படியாவே சொல்றேன். அனுஷா உனக்குப் பதற்றமா இருந்தா நீ வேணா கிளம்பு!’’
‘‘இல்ல ப்ரியா... எனக்கு நீங்க பெட்டிய ஒப்படைச்சதுல உடன்பாடே இல்லை. காலப் பலகணி விஷயத்தை நான் நூறு சதவீதம் நம்பறேன். எனக்கு மிஸ்ட்ரி எக்ஸ்பீரியன்ஸ் நிறையவே உண்டு. நான் பாண்டிச்சேரி அரவிந்த அன்னையோட பக்தை. அவங்களால எனக்கு நேரிட்ட அனுபவங்கள சொன்னா உங்களால நம்பவே முடியாது. ஆனா அது எதுவும் பொய்யும் கிடையாது. இருந்தாலும் லாஜிக்கே அதுல இருக்காது. அதனால நான் யார்கிட்டயும் என் எக்ஸ்பீரியன்ஸ் பத்தி பேசினதில்ல.’’

‘‘இப்ப அதைப் பத்தி எல்லாம் எதுக்கு சொல்றே?’’
‘‘நமக்கு ஒரு விஷயம் நம்ப முடியாததா இருக்கறதாலயே அது பொய் கிடையாது. அதுக்காக சொன்னேன்!’’
‘‘காலப் பலகணி ஒரு பொய்னு யாரும் சொல்லலையே...’’

‘‘அப்புறம் எதுக்காக அதை நீங்களே தேடாம ஒரு கிட்நாப் கோஷ்டிகிட்ட கொடுத்தீங்க?’’- அனுஷாவின் கேள்விக்கு மர்மமாக சிரித்த ப்ரியா, ‘‘என் தாத்தாவைப் பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆனா எனக்குத் தெரியும். அவர் அப்படி எல்லாம் தூக்கிக் கொடுக்கறவர் இல்லை’’ - என்றாள்.உச்சந்தலையில் கழுகு கொத்தியது போல விடைத்தான் வர்ஷன்.‘‘புறப்படுங்க. என் வீட்டுக்கு போனா தெரிஞ்சிடும்’’ என்றவளை விடைப்பு குறையாமல் பார்த்தான்.

‘‘என்ன பாக்கறே... தாத்தா இந்நேரம் புறப்பட்டிருப்பார். பெட்டியில வெச்சு நாம கொடுத்ததுல நிச்சயம் முக்கியமான தகவல் இருக்க வாய்ப்பே இல்லை. அந்த கிட்நாப் கோஷ்டியும் டெல்லிக்கார சதுர்வேதியும் ஏமாறப் போறாங்க. ஆனா தாத்தா விடமாட்டார். ஏன்னா, அவர் ஜஸ்ட் கொஞ்சம் வயசான ஜேம்ஸ் பாண்ட்!’’
- ப்ரியா கண்களைச் சிமிட்டியபடி சொன்னாள். வர்ஷனுக்கு ஒருபுறம் ‘அப்பாடா’ என்றிருந்தது. மறுபுறம் டெல்லி கோஷ்டி தன்னை எப்படியெல்லாம் துரத்துவார்களோ என்று பயமாகவும் இருந்தது!நமக்கு ஒரு விஷயம் நம்ப முடியாததா இருக்கறதாலயே அது பொய் கிடையாது. அதுக்காக சொன்னேன்!

ஜோக்ஸ்

‘‘மன்னா! இது கொஞ்சம் கூட நியாயம் இல்லை...’’
‘‘எது புலவரே?’’
‘‘பாடலுக்காகக் கொடுக்கும் சன்மானத்தில் வரி
பிடித்துக்கொள்வதுதான்!’’

‘‘நான் தொகுதிப் பக்கம் வராததைப் பத்தி மக்கள்
என்னய்யா பேசிக்கறாங்க..?’’
‘‘எந்த பயமும் இல்லாம நிம்மதியா இருக்கோம்னு சொல்றாங்க தலைவரே..!’’

‘‘சம்பந்தி... இப்படிப் பொய் சொல்லி எங்களை ஏமாத்திட்
டீங்களே!’’
‘‘நாங்க என்ன ஏமாத்தினோம்?’’
‘‘மாப்பிள்ளைக்கு சுத்தமா சமைக்கத் தெரியாதாமே!?’’

(தொடரும்)

இந்திரா சௌந்தர்ராஜன்

ஓவியம்: ஸ்யாம்