அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்!



அருண்விஜய் ஆச்சரியம்

சைனீஷ் ஹேர் ஸ்டைல்... கூர் தீட்டும் பார்வை.. முறுக்கேறிய கைகள், சிக்ஸ்பேக் என மிரட்டுகிறார் புதிய அருண்விஜய். ‘‘எனக்கு இந்த 2015 ரொம்ப ஸ்பெஷல். தல அஜித்தோட பல மாதங்கள்  பழகி ‘என்னை அறிந்தால்’ படத்துல மெயின் கேரக்டர் பண்ணியிருக்கேன்’’ - நம்பிக்கையும் பிரமிப்புமாகப் புன்னகைக்கிறார் அருண்.

‘‘அஜித் படத்துல நீங்க எப்படி..?’’

‘‘ரொம்ப நாள் கனவு... இப்போதான் நிறைவேறியிருக்கு! இதுக்கு தயாரிப்பாளர் ரத்னம் சாருக்கும் கௌதம்மேனன் சாருக்கும்தான் தேங்க்ஸ் சொல்லணும். நான் ஹீரோவா நடிக்கிற, ‘வா டீல்’ படம் ஷூட்டிங் நடந்துட்டு இருந்த சமயம்... கௌதம்மேனனை மீட் பண்ணினேன். ‘அஜித் சார் படத்துல ஒரு சேலஞ்சிங்கான ரோல் இருக்கு...

பண்றீங்களா?’னு கேட்டார். உடனே ஓகே சொல்லிட்டேன். ‘கேரக்டர் என்ன, ஸ்டோரி என்னன்னு எதையும் கேக்கலையே’ன்னு அவருக்கு ஆச்சரியம். ‘நான் உங்க ஃபேன். நீங்க ஒரு கேரக்டரை எப்படி ப்ரசன்ட் பண்ணுவீங்கனு தெரியும்’னு சொன்னேன். ‘காக்க காக்க’ கௌதம்மேனனை இந்தப் படத்தில் நீங்க பார்க்க முடியும்! இதில் என்னோட பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி எல்லாம் எனக்கே புதுசு!’’

‘‘என்ன சொல்றார் தல?’’

‘‘நான் சினிமாவுக்கு வந்து 18 வருஷம் ஆச்சு. அஜித் சாரைப் பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நெருங்கிப் பழகினதில்லை. அவர் ‘டவுன் டு எர்த் பர்சன்’னு பழக ஆரம்பிச்ச அரை மணி நேரத்துலயே புரிஞ்சுக்கிட்டேன்.

சீன்ல நல்லா பண்ணினா, உடனே பாராட்டுவார். யூனிட்ல இருக்கிற ஒவ்வொருத்தரோட சின்னச் சின்ன விஷயங்கள்லயும் அக்கறை எடுத்துப்பார். நடிக்க வர்றதுக்கு முன்னாடி இருந்தே நான் பிட்னஸுக்காக ஜிம் வொர்க் அவுட் பண்ணிட்டிருக்கேன். அதைப் பத்தி ஆச்சரியமா கேட்டார். பிட்னஸ்ல தலயும் இப்போ கவனம் எடுத்துக்கறார். கேரவன்லயே அதுக்காக மினி எக்யூப்மென்ட்ஸ் வச்சிருக்கார்.

ஒரு ரெக்கார்டிங் தியேட்டர்ல அஜித் சார் படத்துக்கும் என் படத்துக்கும் ஒரே சமயத்துல வொர்க் போயிட்டிருந்தது. அப்போ சந்திச்சுப் பேசியிருக்கோம். பல வருஷங்களுக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. ஆனா, என்ன பேசினோம்... எவ்வளவு நேரம் பேசினோம்னு கூட கரெக்டா ஞாபகம் வச்சு சொன்னார்.

ப்ப்பா.. என்னா மெமரி பவர்! தீபாவளிக்கு எங்க வீட்ல இருந்து ஹோம் மேட் ஸ்வீட்ஸ் செஞ்சு, ஒரு பானையில அழகா பேக் பண்ணி அவருக்கு அனுப்பி விஷ் பண்ணியிருந்தேன். உடனே, அழகான மணி ப்ளான்ட் ஒண்ணைக்  கொடுத்து அனுப்பியிருந்தார். தல எல்லா விஷயத்திலும் கிரேட்!’’

‘‘அஜித் சாருக்கே நீங்க சமைச்சுக் கொடுத்து அசத்திட்டீங்களாமே?’’

‘‘யூனிட்ல ரெண்டு தடவை பிரியாணி பண்ணிக் குடுத்தார் தல. ரெண்டு தடவையும் நான் மிஸ் பண்ணிட்டேன். திடீர்னு ஒருநாள் எனக்கு மட்டும் ஸ்பெஷலா பிரியாணி பண்ணிக் கொடுத்தார். செம டேஸ்ட்! எனக்கும் குக்கிங்ல ஆர்வம் அதிகம். பார்பிக்யூ குக்கிங் (‘கிரில்’ போல நெருப்பில் நேரடியாக வேக வைக்கும் ஒருவகை சமையல்) நல்லா பண்ண வரும். ஸோ, அஜித் சாருக்கு சர்ப்ரைஸா ஒருநாள் பனீர் பார்பிக்யூ பண்ணிக்கொடுத்தேன். ‘அட, கலக்கிட்டீங்க போங்க’னு ஆச்சரியமானார். த்ரிஷா அதை அப்படியே ட்விட்டர்ல போட்டு, எனக்கு தல ரசிகர்கள்கிட்ட இருந்து பாராட்டு வாங்கிக் கொடுத்தாங்க!’’

‘‘ ‘வா டீல்’ படம் ஆரம்பிச்சு ரெண்டு வருஷம் ஆச்சு... இன்னும் ஏன் தாமதம்?’’

‘‘படம் நல்லா வந்திருங்குங்க. காமெடி, லவ், ரேஸிங்னு செம என்டர்டெயினர். ‘தடையற தாக்க’ படம் ஆக்ஷன், த்ரில்லர்னு இருந்துச்சு. அதோட, குழந்தைகளுக்குப் பிடிக்கிற மாதிரியான அம்சத்தையும் சேர்த்ததுதான் ‘வா டீல்’. படத்தோட லோகோவைக் கூட கார் பந்தயம் நடக்கும் இருங்காட்டுக் கோட்டையிலதான் வெளியிட்டோம். டைரக்டர் சிவஞானம், தமன் மியூசிக்னு நல்ல டீம் அமைஞ்சிருக்கு. இடையில அஜித் படம் கமிட் ஆனதால, அவர் படம் வந்த பிறகு கொண்டு வரலாம்னு இருக்கோம்!’’

‘‘கார்த்திகா...’’‘‘ப்ச்... செம தைரியமான பொண்ணு. படத்துல சேஸிங் சீன் ஒண்ணு. கார்த்திகாதான் காரை ட்ரைவ் பண்ணனும். ‘உங்களுக்கு டிரைவிங் தெரியுமா?’னு கேட்டதும். ‘சூப்பரா தெரியும்’னு சொன்னாங்க. பென்ஸ் காரை ஓட்டச் சொல்லிட்டு பக்கத்துல உக்கார்ந்திருக்கேன். நல்ல வேகம் போகும்போது திடீர்னு, ‘இந்த கார்ல கியர் எங்க இருக்கு’ன்னு கேட்டாங்க பாருங்க. தூக்கி வாரிப் போட்டுச்சு. எப்படியோ அதிலிருந்து கிரேட் எஸ்கேப் ஆனேன். அவங்க நடிப்பு ‘வா டீல்’ல பெருசா பேசப்படும்!’’

‘‘அஜித் படத்துல என்ன கேரக்டர்னு கூட சொல்ல மாட்டேங்கறீங்க. ஆனா, படத்தோட கதையே நெட்ல வந்திடுச்சே?’’

‘‘நான் கூட பார்த்தேன் சார். ஃபேஸ்புக்ல ஒரு கதை ஓடுது. வாட்ஸ் அப்ல எனக்கே ஒரு கதை வந்துச்சு. கௌதம்மேனன், அஜித்னு இருக்கறதால, இந்த மாதிரி கதைகள் உலாவுறது சகஜம்தான். ஆனா அது எதுவும் உண்மைல்லை என்பதுதான் உண்மை!’’

- மை.பாரதிராஜா