வைரவிழா கொண்டாடிய தியேட்டர்களின் சூப்பர்ஸ்டார்!



மதுரை மேல கோபுர வாசல். சுற்றிலும் கடைகள் சூழந்திருக்க, ஒரு குறுகிய சந்தின் உள்ளே பிரமாண்டாய் எழுந்திருக்கிறது அந்தத் தியேட்டர். வாசலின் இருபுறமும் எம்.ஜி.ஆர்-சிவாஜி படங்களின் போஸ்டர்கள் மினுமினுக்க, நடுவே வள்ளுவர் சிலை நம்மை வரவேற்கிறது.

அழிந்து வரும் பழமையான தியேட்டர்களுக்கு மத்தியில், 75 வருடங்களைக் கடந்து இன்றும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது இந்த ‘சென்ட்ரல்’ தியேட்டர். இதை, ‘தியேட்டர்களின் சூப்பர்ஸ்டார்’ என்கிறார்கள் உள்ளூர்வாசிகள். இப்போது இருக்கை எண்ணிக்கையில் ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கம் இதுதானாம்!

‘‘1939ம் வருஷம்... அப்போ, எனக்கு பத்து வயசு இருக்கும். கல்கத்தாவுல ‘மெட்ரோ’னு ஒரு தியேட்டரை மாதிரி வடிவமா கொண்டு எங்க தாத்தாவும் அவரோட நண்பர்களும் சேர்ந்து கட்டின தியேட்டர் இது. மதுரையோட மையப் பகுதியில கட்டினதால இதுக்கு ‘சென்ட்ரல்’னு பெயர் வச்சாங்க’’ என நினைவுகளைத் தட்டி எழுப்புகிறார் தியேட்டர் உரிமையாளர்களில் ஒருவரான சுந்தரம். ‘‘என் அம்மா வழி தாத்தா பேரு சந்தானகிருஷ்ணன்.

‘சந்தானகிருஷ்ண சபா’னு அவர் நடத்தின நாடகக் குழுவுல கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் எல்லாம் நடிச்சிருக்காங்க. அப்புறம், புனே போய் ‘பாதுகா பட்டாபிஷேகம்’னு ஒரு படம் எடுத்தார். அடுத்துதான் அவரோட நண்பர்களோட சேர்ந்து இந்த தியேட்டரைக் கட்டினார். எனக்கு தாத்தாதான் தியேட்டர் தொழில் கத்துக் கொடுத்தது. ஆனா, எங்கப்பா தர்மலிங்கம் சினிமா வாசனை அறியாதவர். சப்-ரிஜிஸ்டிரரா இருந்து ரிட்டயர் ஆனவர். ‘பராசக்தி’ படம் ரிலீஸ் ஆன அன்னிக்குத்தான் நான் தியேட்டரை கவனிக்க வந்தேன். அப்புறம், வாழ்க்கை முழுக்க இதுதான்.

அப்போ நியூ சினிமா, இம்பீரியல்னு 15 தியேட்டர்கள்தான் மதுரையில இருந்துச்சு. அப்புறமாதான் நிறைய தியேட்டர்கள் வந்தன. இன்னிக்கு தாக்குப் பிடிக்க முடியாம குறையவும் ஆரம்பிச்சிருச்சு. முதல்ல, ஆறு பார்ட்னர்கள் சேர்ந்துதான் இந்தத் தியேட்டர் ஆரம்பிச்சாங்க. அப்புறம், ரெண்டு பேர் பிரிஞ்சு போயிட்டாங்க. அதுல பிச்சமுத்துன்னு ஒருத்தர்தான் தங்கம் தியேட்டர் ஆரம்பிச்சார். ஆசியாவுலயே பெரிய தியேட்டர் அது. அதுக்கு அடுத்து பெருசு எங்க தியேட்டர்தான். 1762 பேர் எங்க தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கலாம். இப்போ, தங்கம் தியேட்டரை இடிச்சிட்டதால எங்க தியேட்டர் பெருசுனு சொல்லலாம்.

எங்க தியேட்டர்ல 1945ல வெளிவந்த ‘ஸ்ரீவள்ளி’ படம், ஒரு வருஷம் மூணு மாசம் ஓடிச்சு. அப்புறம், எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் நிறைய நாட்கள் போச்சு. அந்தக் காலத்துல வருஷம் இரண்டு படங்கள்தான் எடுப்போம். மூணு காட்சிதான் ஓட்டுவோம். அப்போ, ‘எம்.ஜி.ஆர் படம் அதிக நாட்கள் ஓடுதா? இல்லை, சிவாஜி படம் அதிக நாட்கள் ஓடுதா?’ன்னு ரசிகர்களுக்குள் போட்டி இருக்கும். எங்க தியேட்டர்ல சிவாஜி படம் ஓடும். இன்னொரு தியேட்டர்ல எம்.ஜி.ஆர் படம் ஓடும்.

அங்க ஹவுஸ்ஃபுல்னு தகவல் வந்துட்டா இங்கேயும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டாம விட மாட்டாங்க’’ என கறுப்பு வெள்ளை நினைவுகளை நெகிழ்ச்சியாகப் பேசுகிறார் சுந்தரம்.
‘‘அப்போ, தியேட்டர் உரிமையாளர்கள் எல்லாம் நடிகர்கள், தயாரிப்பாளர்களோடு நெருக்கமா இருப்போம். எல்லாருமே ஒருத்தரை ஒருத்தர் மதிப்பாங்க. எம்.ஜி.ஆர் என் மேல ரொம்ப பிரியமா இருப்பார். என் மகள் கல்யாணம் அவர் தலைமையில தான் நடந்துச்சு.

முதலமைச்சரா அவர் இருந்தப்போ என்கிட்ட ‘அரசியலுக்கு வாங்க’ன்னு சொன்னார். நான் வரலைன்னு ஒதுங்கிட்டேன். அப்புறம், ஏதாவது தொழில் பண்ணுங்கன்னு நிறைய ஐடியா சொன்னார். நான், ‘எதுவும் வேண்டாம்.

உங்க அன்பும், சினிமா தொழிலும் மட்டும் எனக்குப் போதும்’னு இருந்துட்டேன். என் நண்பரும் பார்ட்னருமான கண்ணாயிரம், சிவாஜியோட நெருங்கிய நண்பர். அவர் பைப் சிகரெட் பிடிப்பார். அவரை மாடலா வச்சுதான் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் சிவாஜி அந்தக் கேரக்டரை செய்தார்!’’ என்கிறவரைத் தொடர்கிறார் கண்ணா யிரத்தின் வளர்ப்பு மகனான கணேசன்.

‘‘முதன்முதலா அப்பாதான் மதுரையில, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. எங்க தியேட்டரைப் பொறுத்தவரை நாங்க அதிக விலைக்கு டிக்கெட் விற்கறதில்லை. அரசு சொல்ற விலைக்குத்தான் டிக்கெட் கொடுக்குறோம். இன்னிக்கும் தமிழ்நாட்டில் பெண்கள் டிக்கெட் 7 ரூபாய்க்கு கொடுக்கிற ஒரே தியேட்டர் எங்களுடையது. ஆண்களுக்கான டிக்கெட் ரேட் 20, 25, 30 ரூபாய்தான். சிவாஜியோட ‘பாவமன்னிப்பு’, ‘பட்டிக்காடா பட்டணமா’, ‘தங்கப்பதக்கம்’, எம்.ஜி.ஆரோட ‘மதுரை வீரன்’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படங்களெல்லாம் 175 நாட்கள் ஓடுச்சு. அப்புறம், ரஜினி, கமல் படங்கள் 175 நாட்கள் ஓடியிருக்கு.

ஜெமினி கணேசன் நடிச்ச, ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’னு ஒரு படம். அதுல ஒரு சீன்ல வள்ளுவர் படம் வரும். இதனால, அந்தப் படம் போட்டப்போ, வள்ளுவர் சிலையை வச்சு ஊர்வலமா வந்தாங்க. பிறகு அதை தியேட்டர் நடுவுலேயே வச்சிட்டாங்க. கடந்த காலப் பெருமை இவ்வளவு இருந்தாலும் 2000ம் ஆண்டிற்குப் பிறகுதான் நாங்க புதுப் படங்கள் எடுக்கிறதை விட்டுவிட்டோம். ஏன்னா, போட்ட பணத்தை எடுக்க முடியலை.

முன்னாடி, எங்க தியேட்டர்ல படம் போட்டா, சுத்தியிருக்கிற நாலு மாவட்டங்கள்ல போட மாட்டாங்க. அப்படி இருந்துச்சு. இப்ப ஒரே படம் ஒரே தெருவுல இரண்டு தியேட்டர்கள்ல போடுறாங்க. அடுத்து, டி.வியிலும் போட்டுடுறாங்க. இதனால, கட்டுப்படியாகலை’’ என்கிறார் அவர் வருத்தங்களை மறைத்தபடி. ‘‘என்னோட கனவெல்லாம் இந்தத் தியேட்டர் இப்ப மாதிரியே தொடர்ந்து எப்பவும் இயங்கணும். அவ்வளவுதான்’’ என்கிறார் சுந்தரம் நிறைவாக! 

எங்க தியேட்டர்ல சிவாஜி படம் ஓடும். இன்னொரு தியேட்டர்ல எம்.ஜி.ஆர் படம் ஓடும். அங்க ஹவுஸ்ஃபுல்னு தகவல் வந்துட்டா இங்கேயும் ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டாம ரசிகர்கள் விட மாட்டாங்க!

பேராச்சி கண்ணன்
படங்கள்: ஜி.டி.மணிகண்டன்