அழியாத கோலங்கள்கே.பாலசந்தரைப் பற்றிய கண்ணீரும் புகழாரமுமான அஞ்சலிகள் நிறைய வந்துவிட்டன. நான் அவரிடம் நிறைகளைவிட என்னைப் பாதிக்கும் ஒரு முக்கியமான குறையைக் காண்கிறேன். இதுவரை யாரும் கண்டுபிடிக்காத என் முட்டாள்தனத்தை 1970 முதலே அவர் கண்டுபிடித்து வைத்திருந்தார்.

‘என்னை அருகில் வைத்துக்கொண்டால்... ஒப்பீட்டளவில் அவருடைய புத்திக்கூர்மை பிரகாசமாக வெளிப்படும்’ என்றுதான் எல்லா ரகசிய வேலைகளுக்கும் என்னைப் பயன்படுத்தியிருப்பாரோ!

நான் சில சமயம் எல்லாம் அறிந்தவன்போல் உளறும்போது அவர் என்னை பார்க்கும் பார்வையிலேயே... ‘முட்டாள்... உளறாதே!’ என்ற அவரது மனக்குரல் கேட்டுவிடும்; பேச்சை நிறுத்திக்கொள்வேன். 30 வருட வக்கீல் தொழிலில், 3000 வழக்காடிகள் என் மடமையைக் கண்டுபிடிக்க முடியாமல், எனக்கு கூலியைக்கூட கேட்காமலேயே கொடுத்திருக்கிறார்கள்.

நூறு நீதிபதிகளுக்கு மேல் இந்த மரமண்டைக்கு சாதகமாக தீர்ப்பு சொல்லியிருக்கிறார்கள். இவர் மட்டும் ஒரு பார்வையிலேயே, என்னுடைய விவாதத் திறமையை ‘வெறும் காலி சட்டிப் பானைகளை உருட்டும்போது வரும் சத்தமாக்கி’ வாயடைக்கச் செய்து விடுகிறாரே என நினைத்ததுண்டு!

அரிமா சங்கம், ரோட்டரி போன்ற இடங்களுக்கு அழைப்பு வரும்போது சாதுரியமாகப் பேசி என்னையும் மேடையில் சேர்த்துக்கொள்ளும் ஒரு உத்தி அவரிடம் உண்டு. அவர் சொல்வார்... ‘‘பத்தாயிரம் பேர்கொண்ட அரசியல் கூட்டத்தையோ, விசிலடிக்கும் ரசிகர்கள் கூட்டத்தையோ வெற்று சொற்களால் சமாளித்துவிட முடியும்.

நம் அளவுக்கு சமபங்குடைய அறிவுஜீவிகளிடம் பேசுவது கடினம். அதற்காகத்தான் உன் மாதிரி ஃபீஸ் கேக்காத வக்கீலை வைத்துப் பேசுகிறேன்!’’ எனக்கு இன்றுதான் தெரிகிறது... ‘உளறு வாயன், சண்டப்பிரசண்டன்’ என்றுதான் என்னை அழைத்துப் போயிருக்கிறார்.

ஒரு முறை ஒரு ரோட்டரி சங்கத்தில் இவரிடம் கேள்விக்கணை தொடுத்து பதில் கேட்டார்கள். அதில் பாலசந்தரை வாழ்த்தும் கட்சியும் இருந்தது... ‘ஒழிக’ எனும் கட்சியும் இருந்தது. அவர் தன் படத்தில் தோன்றிய காட்சிகளுக்கெல்லாம் கருத்து விளக்கம் கூறினார். அதில் ஒரு கேள்வி... ‘‘உங்கள் சீடர்கள் கமல், ரஜினி இருவர் படங்களை நீங்கள் இயக்கும்போது குறைந்த விலைக்கும், அதே ஹீரோக்களை மற்ற இயக்குநர்கள் இயக்கும்போது அதைவிட இரண்டு மடங்கு விலைக்கும் போகிறதே... அது ஏன்?’’ 

ஓரிருவர் ‘சர்வர் சுந்தரம்’ படத்தை சுட்டிக் காட்டி, ‘‘நாங்கள் ஹோட்டல் நடத்தி மேஜை விரிப்பு நாற்காலிகளுக்கிடையே மக்களை உட்கார வைத்து, அவர்கள் கேட்டதைக் கொண்டு வந்து தருகிறோம். ஆனால், நீங்கள் நாகேஷ் பேக் புரொஜெக்ஷனில் குதிரை ஓட்டுவதைக் காட்டியிருக்கிறீர்கள். இது ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களை மாவரைக்கும் இடத்துக்கும் புகை மண்டும் எண்ணெய் வாணலி அருகிலும் அழைத்துப் போவதுபோல் இல்லையா?’’ என்றார்கள்.

‘‘இதற்கு நான் பதில் கூறினால் சரியாக இருக்காது. அதற்காகத்தான் ஒரு வக்கீலை என்னுடன் அழைத்து வந்திருக்கிறேன்... இவரிடமே கேளுங்கள்!’’ என்று என்னைக் கிளப்பி விட்டார் பாலசந்தர்.

கடைசியாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் முதலில் பதில் கூறினேன். ‘‘எல்லாமே வியாபாரம்தான். கொடுக்கல், வாங்கல் இல்லாமல் எல்லாமே தர்ம காரியமாக நடப்பதில்லை. ஆனாலும் கொடுத்த காசுக்கு பிரதியுபகாரம் செய்வதுதான் நல்ல வியாபாரம். ஒரு பாமர ரசிகனுக்குக் கூட எல்லாவற்றையும் புரிய வைப்பது தான் சினிமா வியாபாரம். ஆக, குதிரை ஓடினது உங்களுக்கில்லை பிரதர்!’’ என்றேன். 

இயக்குநர் கே.பியின் படத்தைப் போல் இரண்டு மடங்கு வசூல் செய்யும் படங்களைக் கண்டு பொறாமை தேவையில்லை. உதாரணமாக, இரண்டு இதய அறுவைக்குப் பிறகு, இனிமேல் ரம்பம் போட்டு நெஞ்சைப் பிளந்து உயிர் காக்கும் வாய்ப்பு இல்லை. ஆனாலும், இடது கழுத்திலிருந்து இடது கை மணிக்கட்டு வரை வலி ஓடும்போது தெரிகிறது... ‘என் நெஞ்சு என்னிடம் ஓலமிடுகிறது’ என்று. அப்போதைய தேவைக்குப் பயன்படுத்துவது அரை மத்திரை ‘ஐஸொடிரில்’ அல்லது ‘சார்பிட்ரேட்’.

அதன் விலை வெறும் 25 காசுதான். காரணம், தொழில்நுட்பமுள்ள ஒரு விஞ்ஞான இயந்திரம் இதை சுலபமாகத் தயார் செய்துவிடுகிறது. ஆனால் இங்கிலாந்தின் வடதிசையில் உள்ள ஸ்காட்லாந்து ‘ஸ்காட்ச் விஸ்கி’ என்றொரு பானத்தைத் தயாரிக்கிறது. அதைத் தயார் செய்ய 12 வருடங்கள் தேவையாம். முகப்பில் எழுதியிருக்கிறார்களே... 12 சீணிகிஸி ளிலிஞி என்று. நம்பித்தானே ஆக வேண்டும்? விலை 3000 ரூபாய்! - இது இன்றைய சிந்தனை.

அன்று நான் சொன்னது... ‘‘இவர் எழுதுவது ‘கவிதை’. செலவு ஒரு பேனா - பேப்பர். ஒரு பாலசந்திர மூளை. அவ்வளவுதானே! மற்றவர்கள் விற்பது கமர்ஷியல் படம்... இது கருவாடு போன்றது. அதாவது, பல ஆயிரம் பேரின் பசியைப் போக்குவது. அதற்கு உயிரை வெறுத்து கடலைக் கடந்து செல்ல வேண்டும். பிடித்து வந்த மிச்சத்தை வெயிலில் காய வைத்து... உப்பை உள் செலுத்தி... எத்தனை வேலை! யோசியுங்கள்?’’

கொடுத்த காசுக்கு பிரதியுபகாரம் செய்வதுதான் நல்ல வியாபாரம். ஒரு பாமர ரசிகனுக்குக் கூட எல்லாவற்றையும் புரிய வைப்பதுதான் சினிமா வியாபாரம்.

(நீளும்...)

சாருஹாசன்