அப்பாவிகளைக் கொன்னு இவங்க எதை சாதிக்கப் போறாங்க..?



கிழக்கே போனவன் வருவான்... மேற்கே போனவன் வருவான்... தெற்கே போனவன் வருவான்... வடக்கே போனவன் வரமாட்டான்... கும்பிடுற குடும்பத்தைக் கும்பிட்டுக்கோ... சொம்புத் தண்ணியைக் காலால தட்டிவிட்டு உள்ளே போ...’’

- தன் அன்னையின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு வீட்டு வாசலில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டுள்ள சொம்பைத் தொட்டபடி, பெரியவர்கள் சொல்கிற வார்த்தைகளை சொல்லிக்கொண்டே அழுகிற 15 வயது பரத் நாராயணனை தேற்ற முடியாமல் கலங்கி நிற்கிறார்கள் உறவினர்கள்.

‘‘அம்மா... எங்கேம்மா போயிட்டே! வாம்மா... வந்து சாதம் பிசைஞ்சு தாம்மா...’’ என்று தன் தாயின் புகைப்படத்தைத் தட்டி எழுப்புகிற 11 வயது லட்சுமியைப் பார்க்கும்போது இதயம் கரைகிறது. தன் மனைவியின் உடல் இருந்த இடத்தில் அமர்ந்தபடி வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிற பாலனின் விழிகள் நீர்த்துக் கொட்டுகின்றன. யார், யாருக்கு ஆறுதல் சொல்வது எனத் தெரியாமல் ராயப்பேட்டை, ஜெனரல் பேட்டர்ஸ் சாலை, பூபேகம் செகண்ட் லைனில் இருக்கும் அந்த வீட்டை மீளாத் துயரம் சூழ்ந்திருக்கிறது.

பவானி, சிறு எறும்புக்குக் கூட தீங்கிழைத்துப் பழகாத வெகுளி. கனிவும், கருணையுமாக பழகக்கூடியவர். அருகாமை குடித்தனக்காரர்கள் அழுகிற அழுகையே அதற்கு சான்றாக இருக்கிறது. பெங்களூருவில் தீவிரவாதிகள் வைத்த குண்டு, இந்த அப்பாவி குடும்பத் தலைவியைத்தான் குறி வைத்திருக்கிறது. கொண்டாட்டமும், குதூகலமுமாக இருந்த குடும்பம் நிலைகுலைந்து நிற்கிறது. ‘‘என்ன நடந்ததுன்னு யோசிக்கிறதுக்குள்ளயே எல்லாம் முடிஞ்சு போச்சு...

இந்தப் பச்சைப் புள்ளைகளை என்ன சொல்லித் தேத்துறதுன்னு தெரியலையே...’’ என்று கலங்குகிற பவானியின் பெரியப்பா மோகன்ராஜைத் தேற்றுவதும் சிரமமாக இருக்கிறது. ‘‘தங்கமான பொண்ணுய்யா... பவானியைக் காட்டித்தான் சின்னப் பொண்ணுங்களுக்கு நாங்க புத்திமதி சொல்லுவோம். எங்க குடும்பத்துக்கெல்லாம் ஒளி விளக்கா இருந்த பொண்ணு வலியைச் சுமந்துக்கிட்டுப் போய்ச் சேந்திடுச்சு...’’ - உதட்டைக் கடித்தபடி ஆழ்ந்து மௌனமாகிறார் மோகன்ராஜ்.

பவானி பிளஸ் 2 படித்தவர். கணவர் பாலன், ராயப்பேட்டையில் டயர் கடை வைத்திருக்கிறார். பரத் டி.ஏ.வி. பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறான். லட்சுமி 6ம் வகுப்பு. அரையாண்டுத் தேர்வு விடுமுறையும், மருமகனின் பிறந்தநாளும் சேர்ந்து வந்ததால், குடும்பத்தோடு பெங்களூரு சென்றிருக்கிறார் பவானி. கணவர் பாலனின் சகோதரர் வீட்டில் தங்கியிருந்தவர்கள், டிசம்பர் 28ம் தேதி ஊர் திரும்ப திட்டமிட்டிருந்தனர்.

ரயிலில் டிக்கெட் உறுதியாகாததால், மறுநாள் செல்ல டிக்கெட் வாங்கினர். மேலும் ஒருநாள் தங்க நேர்ந்ததால், உறவினர்களோடு சிவாஜி நகர் வந்து சுற்றிப் பார்த்து விட்டு, பர்ச்சேஸ் முடித்துவிட்டு, ஹோட்டலில் சாப்பிட்டார்கள். திரும்ப வெளியில் வரும்போதுதான் அந்தக் கொடூரம்! ‘‘ராத்திரி எட்டரை மணி இருக்கும். சாப்பிட்டு முடிச்சு ஹோட்டலுக்கு வெளியில இருந்த பார்க் பகுதிக்கு நடந்து வந்துக்கிட்டிருந்தாங்க. நல்லவேளை... பரத்தும் லட்சுமியும் முன்னாடியே அங்கே போய் விளையாடிக்கிட்டு இருந்திருக்காங்க.

ஹோட்டல் வாசல்ல இருந்த பூந்தொட்டிக்குள்ள இருந்துதான் குண்டு வெடிச்சிருக்கு. வெடிச்ச வேகத்துல பவானியோட தலையில அடிபட்டு தூக்கி வீசிருச்சு. கார்த்திக்குக்கு முதுகுல ஒரு அங்குலத்துக்கு இரும்புத்துகள்கள் உள்ளே போயிடுச்சு. அக்கம் பக்கத்துல இருந்தவங்க தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடியிருக்காங்க. ஆனா பவானியைக் காப்பாத்த முடியலே. எல்லாரையும் தவிக்க விட்டுட்டுப் போயிட்டா...

நாங்கள்லாம் அப்பாவிங்க சார்... எங்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் என்ன பிரச்னை? அப்பாவிகளைக் கொன்னு இவனுங்க எதை சாதிக்கப் போறாங்க? இதோ இந்த ரெண்டு பிள்ளைகளுக்கும் அம்மாவை விட்டா வேறெதுவும் தெரியாது... அதுகளைத் தவிக்கவிட்டு அநியாயமா தாயோட உயிரைப் பறிச்சுட்டாங்களே... அவங்களை எல்லாம் சாமி கேட்காதா?’’ - ஆவேசமும் ஆதங்கமுமாகக் கதறுகிறார் மோகன்ராஜ்.

படு காயமடைந்த பவானியின் உறவுக்காரர் கார்த்திக், பெங்களூரு தயானந்த சாகர் கல்லூரி யில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். இவர் தவிர, சாஃப்ட்வேர் எஞ்சினியர் சந்தீப், ஐ.பி.எம். ஊழியர் வினய் ஆகியோரும் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பெங்களூருவில் தீவிரவாதிகள் நாசவேலையில் ஈடுபடும் ஆபத்து உள்ளது என்று ஏற்கனவே உளவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. பரபரப்பான ஒரு தெருவில், ஒரு பெரிய ஹோட்டலின் வளாகத்துக்கு வந்து தீவிரவாதிகள் குண்டு வைத்துச் செல்லும் அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஓட்டை இருந்திருக்கிறது.

வெடித்திருப்பது சக்திவாய்ந்த டைமர் குண்டு என்கிறார்கள். மூன்று நபர்கள் அந்த குண்டை பூந்தொட்டியில் பொருத்தும் காட்சி ஹோட்டலின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இந்த நாசவேலையில் ஈடுபட்டது ‘சிமி’ அமைப்பாக இருக்கலாம் என்கிறார்கள் புலனாய்வு அமைப்பினர்.

அப்பாவி குடும்பத் தலைவியையும், மாணவர்களையும் கொல்வதால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்? மனித அழிவையே வேட்கையாகக் கொண்டு வேட்டையாடும் இந்தக் கயவர்களுக்கு எதுதான் இலக்கு? ஒன்று மட்டும் நிச்சயம்... நிகழ்ந்த விபரீதத்தை உள்வாங்கும் அளவுக்குக் கூட விபரமில்லாத இரண்டு அப்பாவிக் குழந்தைகளின் கண்ணீரும், கதறலுமே சாபமாகப் பெருகி அவர்களைப் பழி தீர்க்கும்.

-வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்