இனி தொட்டதற்கெல்லாம் கட்டணம்!பயமுறுத்தும் செல்போன்

கூட்டமான பஸ்... யாரோ நம் பர்ஸ் மீது கை வைக்கிறார்கள்... ‘‘யார்ரா அது?’’ என்கிறோம் டெர்ரராக! ‘‘சாரி பாஸ்... தெரியாம கை பட்டுருச்சு’’ எனப் பின்வாங்கி விடுகிறது கை. மறுபடி அது எப்போது திரும்புமோ என்ற பதைபதைப்போடு பர்ஸ் மேல் கை வைத்தபடியே பயணிப்பது எத்தனை கொடுமையானது.

அப்படியொரு நிலையில்தான் நாம் எல்லோருமே இருக்கிறோம். எப்படி என்கிறீர்களா? நீங்கள் செல்போன் பயன்படுத்துகிறீர்கள்தானே? அப்படியானால் நீங்களும் இதில் சேர்த்திதான். சும்மா உள்ளே வாங்க பாஸ்!

செல்போன் என்றாலே இப்போது ஸ்மார்ட்போன்தான் என்றாகிவிட்டது. அதில் வாட்ஸ்அப் பயன்படுத்தினால் எஸ்.எம்.எஸ். செலவில்லை. வைபர், ஸ்கைப் போன்றவை இருந்தால் போன் செலவே இல்லை என்பதற்காகவே பலரும் அரக்கப் பரக்க ஆண்ட்ராய்டுக்கு வருகிறார்கள். அதெப்படி, செலவில்லாமல் பேச முடியும்?

‘வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் ப்ரோட்டோகால்’ என்பார்கள் இதை. சுருக்கமாக க்ஷிஷீமிறி . இணைய வழியிலேயே உலகின் எந்த மூலையில் இருப்பவரிடமும் பேசிவிட வழி வகை செய்கின்றன இந்த வகையறாக்கள். ஒரே ஒரு இன்டர்நெட் பேக்கேஜை மட்டும் நம் கணக்கில் ரீசார்ஜ் செய்தால் போதும். பேசுவதற்குக் கட்டணம் இல்லை; பேலன்ஸே இல்லாமல் பேய்த்தனமாகப் பேசலாம்.

இந்த ஆப்ஷனுக்குத்தான் சமீபத்தில் ஆப்பு வைத்தது செல்போன் நிறுவனம் ஒன்று. ‘இனி இதெல்லாம் இன்டர்நெட் இணைப்பில் சேராது. இவற்றுக்கென தனியே ஒரு ஸ்பெஷல் ரீசார்ஜ் செய்ய வேண்டும்’ என அந்த நிறுவனம் குண்டைத் தூக்கிப் போட, கடந்த கிறிஸ்துமஸ் தினமே கலையிழந்து போனது.

இதைச் சும்மா விட முடியுமா? எங்கிருந்தோ கிளர்ந்து எழுந்தது இளைஞர் கூட்டம் ஒன்று. ‘இது அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் செயல்’ என இணையமெங்கும் குரல்கள் எதிரொலித்தன. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் சிம் கார்டுகளை ஒப்படைத்து விட்டு, வேறு நெட்வொர்க்குக்கு மாறுகிற அளவுக்கு இந்தப் போராட்டம் முற்றிய நேரம்... ‘சும்மா பேசிக்கிட்டிருந்தேன் மாமா’ என்ற ரேஞ்சுக்கு பம்மிவிட்டது அந்த நிறுவனம். உடனடியாக தங்கள் அறிவிப்பையும் திரும்பப் பெற்றுக்கொண்டது.

ஆனால், ‘அப்பாடா’ என நாம் அசர முடியாது. இனி ஒவ்வொரு நிறுவனமாக இதே கட்டணத்தைக் கையில் எடுக்கலாம். இப்போதும் நிரந்தரமாக இந்தத் திட்டம் கைவிடப்படவில்லை. மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ அமைப்பின் முடிவுக்காகக் காத்திருப்பதாகத்தான் சொல்லியிருக்கிறது அந்த நிறுவனம். ஆக, அடித்து சாய்க்கப்பட்ட வில்லன் எப்போதும் எழுந்து முதுகில் குத்த வரலாம்!

இதென்ன அவ்வளவு பயப்பட வேண்டிய விஷயமா?

‘‘ஆம்’’ என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். ‘இந்தக் கட்டண முறை நெட் நியூட்ரலிட்டிக்கு எதிரானது’ என்பதுதான் இங்கே முன்வைக்கப்பட்ட முக்கிய கோஷம். அதென்ன நெட் நியூட்ரலிட்டி? அடிப்படை மனித உரிமை போல, இதுவும் உலக அளவில் வலியுறுத்தப்பட்டு வரும் நவீன உரிமை. அதாவது, இணைய இணைப்புக்காக மட்டுமே ஒருவர் பணம் கட்ட வேண்டும். அந்த இணைப்பைப் பயன்படுத்தி இணையத்தின் அனைத்து வசதி களையும் அவர் பெற வேண்டும்.

அவர் எந்த வெப்சைட்டைப் பயன்படுத்தினாலும் அதற்கு ஒரே மாதிரிதான் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்... இதெல்லாம்தான் நெட் நியூட்ரலிட்டி உரிமை. ‘‘இதற்கு எதிராக இன்று வாட்ஸ்அப்புக்கு தனி கட்டணம் விதிக்க அனுமதித்தால், நாளை நெட்டில் படம் பார்த்ததற்கு தனி பில், மியூசிக் கேட்டதற்கு தனி பில், ரயில் டிக்கெட் எடுத்ததற்கு தனி பில் எனத் தீட்டுவார்கள்’’ என்று எச்சரிக்கிறது www.netneutrality.in எனும் இணைய தளம்.

‘‘இந்தக் கட்டணம் திரும்ப வரவே கூடாது பாஸ்... எப்ப வந்தாலும் போராட்டத்தைத் துவங்குங்க...’’ என குண்டடிபட்ட கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் மாதிரி டயலாக் பேசுகிறார்கள் இவர்கள். ஆனால், ‘‘செல்போன் கம்பெனிகள் நினைத்துவிட்டால் எப்படியும் இந்தக் கட்டண முறையை செயல்படுத்தியே தீருவார்கள்’’ என்றே ஆரூடம் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ‘‘வாட்ஸ்அப், வீ சாட் போன்ற ஆப்களால் ஏற்கனவே எஸ்.எம்.எஸ் பயன்பாடு குறைந்துவிட்டது.

வைபர், ஸ்கைப் போன்றவற்றால் சாதாரண செல்லுலார் அழைப்புகள்கூடக் குறைந்துவிட்டன. 60 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ்அப், வெகு விரைவில் குரல் அழைப்பு வசதியையும் கொண்டு வரவிருக்கிறது. அது வந்துவிட்டால் செல்போன் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு இன்னும் அதிகமாகும்.

 அதையெல்லாம் சரிக்கட்டத் தான் அவை இப்படிப்பட்ட கட்டணங்களைக் ‘கண்டுபிடித்து’ செயல்படுத்துகின்றன. அமெரிக்காவில் இன்னும் செல்போன் இன்கம்மிங் காலுக்கே கட்டணம் உண்டு. அப்படியொரு நிலைமை இங்கேயும் வரலாம்!’’ என்கிறார்கள் அவர்கள்.

ஆனால், செல்போன் நிறுவனங்களுக்கு எஸ்.எம்.எஸ். மற்றும் கால் வருவாய் குறைந்திருந்தாலும் செல்போன் வழியே இணைய சேவை பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதற்கான கட்டணமும் அதிகரித் திருக்கிறது.

2 ஆண்டுகளுக்கு முன்பு வரை அன்லிமிடெட் 2ஜி டேட்டாவுக்கு 99 ரூபாய் வசூல் செய்த நிறுவனங்கள், தற்போது 249 ரூபாய் கட்டணம் வாங்குகின்றன. இதனால் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனாலும் ஆசை யாரை விட்டது? இந்த VoIP கட்டணம் இன்றில்லை என்றாலும் ஒருநாள் நம்மைத் தாக்கத்தான் போகிறது! எல்லாரும் ஒரு சோக ஸ்மைலியை வாட்ஸ்அப்ல ஷேர் பண்ணிக்கங்கப்பா... இப்பவே!

வந்தால் என்ன ஆகும்?


‘‘நம் மக்களும் லேசுப்பட்டவர்கள் இல்லை. ஒருவேளை இந்த க்ஷிஷீமிறி கட்டணம் வந்துவிட்டாலும் இருக்கவே இருக்கிறது வீட்டில் வாங்கியிருக்கும் பிராட்பேண்ட். இப்போதே பலரும் அதிக ஃபைல் சைஸில் இருக்கும் வீடியோக்களை வீட்டுக்குப் போய், வைஃபி மூலம்தான் பதிவிறக்குகிறார்கள். எல்லோரும் பிராட்பேண்ட் மூலமே க்ஷிஷீமிறி சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அதிலும் க்ஷிஷீமிறி கட்டணத்தை அறிமுகப்படுத்துவார்கள்.

அதன் பிறகு, நாம் ஜி மெயிலில் செய்யும் வாய்ஸ் சாட், வீடியோ சாட் போன்றவற்றுக்குக் கூட தனியே பில் வரும். பிராட்பேண்டில் அன்லிமிடெட் ப்ளான் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். இதனால் ஒரே ‘நன்மை’ என்னவென்றால், ஆன்லைனில் புத்தம் புது படங்களைப் பார்த்துவிடுகிற அட்ராசிட்டி குறைந்து, மீண்டும் பர்மா பஜாரில் டி.வி.டி விற்பனை சூடு பிடிக்கும்!’’ - இதுதான் நம்மூர் இளைஞர்கள் கணித்துச் சொல்லும் வருங்காலம்!

- நவநீதன்