‘‘போன வருஷம் ஹிட்டான படங்கள், செட் ஆன ஹீரோ, கட்டான லவ்வுன்னு வழக்கமான டாப் 10 பார்த்து போரடிக்குது பாஸ்... 2014ல வாய்க்கு ருசியா எங்கெங்க சாப்பிட்டீங்கனு ஒரு லிஸ்ட் கொடுத்தா உதவியா இருக்கும்ல!’’ - பேச்சுவாக்கில் பேச்சிலர்ஸ் சிலர் கோரிக்கை வைத்தார்கள். கூடவே ரூல்ஸ் வேறு... ‘‘பெரிய ஹோட்டல்ல டேஸ்ட் நல்லாதான் இருக்கும்... இருக்கணும். கையேந்தி பவன்ல எது கலக்கல்னு கண்டுபிடிக்கிறது தான் கலை!’’
வலைப்பதிவர் கம் சினிமா இயக்குனர் கேபிள் சங்கர் நிஜமாகவே இந்தக் கலையில் வல்லுநர். சென்னை நடைபாதை உணவுக் கடைகள் அனைத்தையும் அலசி, ‘சாப்பாட்டுக் கடை’ எனப் புத்தகமாகவே கொண்டு வந்தவர் அவர். அவரிடமே இந்த அசைன்மென்ட்டைக் கொடுத்தோம்...
‘‘சென்னையில இப்ப கையேந்தி பவன்களையே காணலை சார். நிலையா இருந்த பல கடைகள் போயிருச்சு. காலம் காலமா ஏழை பாழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் நல்ல சாப்பாட்டைக் கொடுத்துக்கிட்டிருந்த அந்தக் கடைகளை உபத்திரவம்னு சொல்லித் தூக்கியடிச்சிட்டோம். அதில் பொழைச்சவங்க சின்னதா கடை வச்சிட்டு உக்கார்ந்துட்டாங்க. மத்தவங்க தெருவுக்கே வந்துட்டாங்க. ஸோ, டாப் 5 தர்றதே கஷ்டம்!’’ என்றார் கேபிள் சங்கர். ‘உட்கார இடமில்லாத சின்ன கடை’ என்ற ரேஞ்சில் கடைகளைக் கணக்கில் கொண்டு அவர் தந்த
டாப் 5 இதோ...
சேட் சப்பாத்திக் கடை‘வெல்கம் ஓட்டல்’னு இதுல பேர் வச்சிருப்பாங்க. அதைப் பத்தி யாருக்கும் கவலை இல்ல. ‘சேட் சப்பாத்திக்கடை’ன்னுதான் இது பிரபலம். சைதாப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவோட தொடக்கத்துலயே இருக்கு. காலை 11 மணியில இருந்தே வெஜ் ரைஸ், தக்காளி சாதம்னு கடை பிஸியாகிடும். சாயந்திரம் சோலாபூரி, இட்லி, தோசை, ராகி தோசை, ரவாதோசைன்னு டேஸ்ட்டி மெனு. எல்லாத்துக்கும் மேல இங்க ஸ்பெஷல், சப்பாத்திதான். அதுதான் இந்தப் பேரைத் தக்க வச்சிருக்கு!
பாரதி மெஸ்மெஸ் என்றதுமே அட்ரஸ் தெரிஞ்சிருக்குமே... ரைட், திருவல்லிக்கேணிதான். ரத்னா கபேல இருந்து பீச் போற ரோட்ல இடது பக்கம் தெரியும் போர்டு. இன்னிக்கும் 50 ரூபாய்ல ஒரு குவாலிட்டியான டிபன் திருப்தியா சாப்பிட்டுட்டு வர முடியுது இங்க. நின்னுட்டுதான் சாப்பிடணும்... ஆனா, க்ளீனா வச்சிருப்பாங்க. பெண்கள் சமையல்... அப்படியே வீட்டு ஃபீல்!
சீனா பாய் கடை
இது பாரீஸ் பூக்கடை கிட்ட இருக்கு. மின்ட் தெருவும் என்.எஸ்.சி போஸ் ரோடும் கட்டாகுற இடத்துல பட்டுன்னு நெய் வாசம் வீசுனா அதுதான் இந்த ஸ்பாட். இட்லியும் ஊத்தப்ப வெரைட்டியும் இங்க ஸ்பெஷல். செட் ஊத்தப்பம் 40 ரூபாய்க்கு வித்தாலும் அதை சுத்தமான நெய்யில செய்ய முடியும்னு நிரூபிக்கிற கடை. 12 குட்டி இட்லியில் சாம்பாரும் நெய்யும் விட்டு பொடி தூவிக் கொடுப்பாங்க பாருங்க... சான்ஸே இல்ல!
சூப்பர் பிரியாணிஇன்னிக்கு நேத்தில்ல... 25 வருஷமா நிலைச்சிருக்குற பிரியாணி கடை இது. சைதாப்பேட்டை டு வெஸ்ட் மாம்பலம் ரோட்ல காந்திமதி கல்யாண மண்டபம் தாண்டினீங்கன்னா இதோட மணமே இழுக்கும். பிரியாணியில சேர்க்குற மணம் எல்லாமே மருந்து. கடைசி வாய் சாப்பிடும்போதே மொத வாய் ஜீரணம் ஆகியிருக்கணும். அதுதான் நல்ல பிரியாணி. அந்த இலக்கணத்தை இங்க மீட் பண்ணுவீங்க!
லட்சுமி பாஸ்ட் ஃபுட்ஆழ்வார்பேட்டை டி.டி.கே ரோடு பிரிட்ஜ் ஏறி இறங்கினா இந்தக் கடை. இது மத்தியான கூத்து. சிட்டில எத்தனை ஆட்டோக்காரங்க இருக்காங்கன்னு இங்க வந்து தெரிஞ்சிக்கலாம். மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, மீன் குழம்போட திருப்தியான சீப் சாப்பாடு இங்க ரெடி. உக்கார இடமில்லாத இந்தக் கடையில இப்ப ஐ.டி மக்களும் வந்து நின்னு அதகளம் பண்றாங்க.
நவநீதன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்