அனுபவத்துக்கு கொடுத்த விலை அதிகம்!விஷால் விறுவிறு

ஏ.வி.எம் டப்பிங் தியேட்டர். ஜிலுஜிலுவெனக் குளிரடிக்கிறது. ‘‘தம்பி வந்தாச்சா?’’ - கேட்டுக்கொண்டு பிரபு காத்திருக்கிறார். அடுத்தடுத்து படங்கள், தயாரிப்புகள் என செம பரபரப்பில் இருக்கிறார் விஷால்.

வெற்றிகள் வந்துவிட்டாலும் அதே நிதானம். அலைபேசியில் விரல்கள் அலை பாய, கண்கள் சிரிக்கின்றன சிநேகமாக!‘‘ ‘ஆம்பள’ எனக்கு சுந்தர்.சியோட ரெண்டாவது படம். ‘மதகஜராஜா’வே சும்மா ‘கலகல’ன்னு போகும். ஒரு ‘சகலகலா வல்லவன்’, ‘ராஜாதி ராஜா’ மாதிரி செய்து பார்த்த படம் அது. அது திரைக்கு காலா காலத்துல வந்திருந்தால் அருமையா இருந்திருக்கும்.

சரி, அதற்கென்ன இப்ப? ‘ஆம்பள’ அந்த இடத்தை நிரப்பிக் கொடுக்க வந்திருக்கு. எனக்கே ரொம்ப நிறைவா இருக்கு. ஃபெஸ்டிவல் சீஸனுக்கு நம்ம மக்களுக்கு என்டர்டெயின்மென்ட் வேணும்... குதூகலம் தரணும்... ஒரு இடத்திலும் சோர்ந்து போயிடாம இருக்கணும். ‘பைசா வசூல்’னு சொல்லுவாங்க.

கொடுத்த காசுக்கு வஞ்சகம் இல்லாம மக்களை சந்தோஷப்படுத்தணும். அப்படியான படம், ‘ஆம்பள’. ஒவ்வொரு டைரக்டருக்கும் என்ன மைண்ட்செட்னு, பார்க்கிற ரசிகனுக்கு நல்லா தெரியும். சுந்தர்.சி படங்களில் இருக்கிற பொழுதுபோக்கு, இதில் 100% கேரன்டி. படம் பார்த்துட்டு ஒரு அந்நியனாவே நின்னு சொல்ற கமென்ட் இது!’’

‘‘உங்க ரோல் இதில் என்ன?’’

‘‘ஊட்டியில்தான் கதை நடக்குது. அரசியல் கூட்டங்களுக்கு வேணும்கிற அளவுக்கு ஆள் பிடிச்சுக் கொடுக்கணும்... ஷூட்டிங் நடந்தா துணை நடிகர்கள் ஏற்பாடு செய்து தரணும்... சும்மா பரபரன்னு திரிகிற ஆள். இந்தப் படத்தில் எனக்கே பிடிச்ச விஷயம், என்னோட தோற்றம். இவ்வளவு ஸ்டைலா எந்தப் படத்திலும் நான் வந்தது கிடையாது. இப்போ நடிச்ச ‘பாண்டிய நாடு’ வரைக்கும் அதற்கான வாய்ப்புகள் இல்லை.

ஆறு பாடல்கள்... கலர்ஃபுல்லா நானும் ஹன்சிகாவும் செம ஆட்டம் போட்டிருக்கோம். ஹிப்ஹாப் தமிழா ‘பளிச்’னு புதுசா தர்ற பாடல்களுக்கு அப்படி நான் மாறித்தான் ஆகணும். உச்சபட்சமா காமெடி பண்ற படங்களுக்கு நம்ம மக்கள்கிட்ட ஒரு நிரந்தரமான இடம் இருக்கும். பொதுவா ஜோடிப் பொருத்தம்னு சொல்றது சீன்களை விட, பாடல்களில்தான் ‘சட்’னு கண்ணில் படும். அப்படிப் பார்த்தால், இது ரொம்ப அழகுன்னு யூனிட்டே சொல்றாங்க. ஆறு பாடல்களிலும் எங்க தோற்றமும், ஸ்டைலும் பின்னும். ‘நீ லண்டன் லட்டு, நான் மதுரை புட்டு’ன்னு இதில் ஒரு பாட்டே வருது. பாருங்க!’’

‘‘ஹன்சிகாவோட முதல் தடவையாக ஜோடி!’’‘‘மதுரைப் பையனும், மும்பை பொண்ணும் காதலிச்சா எப்படி இருக்கும்னு ஒரு யோசனைதான். சுந்தர் சார் ‘இந்த தடவை நீங்க ஹன்சியோட ஜோடி போட்டா புதுசா இருக்கும்’னார்.

நான் இதுவரைக்கும் செய்த படங்களில், ஒரு ஹீரோயினோடு நடிச்சு நானே ரசிக்கிற படம் இதுதான். அப்பப்பா, ‘லைட்டை இந்தப் பக்கம் போடுங்க சாமி’ன்னு கேமராமேன்கிட்ட சொல்லிடுவேன். ஏன்னா அந்தப் பொண்ணு இருட்டுல நின்னா கூட வெளிச்சமா தெரியும். சும்மா சொல்லக் கூடாது, இவ்வளவு சின்ஸியர் பொண்ணையும் நான் பார்த்ததில்லை. ஓமன் போயிருந்தோம். குறைஞ்சபட்சமா 22 பேர்தான் டீம்ல.

ஆனா, அவங்க பழகின விதமும், எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி பண்போட நடந்துக்கிட்டதும், சௌகரியம் இல்லாட்டி கூட அதை முகத்தில் காட்டிக்காம இருக்கிறதும் அழகு. ஒரு துளி ஆர்ப்பாட்டம், செருக்கு இருக்கணுமே... ரொம்ப ஆச்சரியமான பொண்ணு. பொதுவா மும்பை ஹீரோயின்னா இங்கே ஏதோ ஒட்டாம இருக்கிற மாதிரியே இருக்கும். ஆனா, எங்க யூனிட்டுக்கே அவங்க செல்லப்பிள்ளை. உடனே இந்த வார்த்தையை வச்சுக்கிட்டு ‘உங்களுக்கு’ன்னு தனியா பிரிச்சு கேட்கக் கூடாது!’’‘‘தடதடனு புதுசா ஹிப்ஹாப் தமிழாவை மியூசிக் டைரக்டரா களம் இறக்குறீங்க..?’’

‘‘அருமையான பசங்க. ஆதியும், ஜீவாவும் அவ்வளவு கலகலப்பு; ஜாலி. அதே நேரத்தில் ரொம்ப உஷார். எனக்கு கல்யாணம் ஆகி முதல் குழந்தை பிறக்கிற பரவச நேரம் இருக்கு பாருங்க, அப்படி அவங்களை எதிர்பார்க்கிறேன். பின்னி எடுக்கிறாங்க. பாட்டு இப்படித்தான் இருக்கணும்னு எந்த ரூல் இருந்தாலும் அதை ப்ரேக் பண்றதுதான் அவங்க வேலை. அதை சர்வ சாதாரணமா செய்றாங்க. பாடல்களை ஆதியே எழுதிடுறார்.

நாம சாதாரணமா பேசிப் புழங்குற வார்த்தைகள்தான். இலக்கிய வரிகள் கிடையாது. ஆனால், வந்து விழுகிற வேகத்தில் அந்த வார்த்தைகளுக்கு பயமும், வேகமும் அருமையா இருக்கு. நான் அவங்களை இதற்கடுத்து ரொம்ப எதிர்பார்க்கிறேன். அவங்க கன்ஃபார்ம் ஹிட்டுன்னு நான் வெள்ளை பேப்பரில் எழுதி கையெழுத்தே போட்டுத் தர்றேன்!’’
‘‘இப்பல்லாம் ரொம்ப சமர்த்தா ஆயிட்டீங்க!’’

‘‘எல்லாம் அனுபவம் தர்ற பாடம். பொறக்கும்போதே வந்ததில்லை. நிறைய சோதனைகள் வந்தது. தோல்விகள் என்னை பதம் பார்த்து புடம் போட்டது. அதுக்கு நான் கொடுத்த விலையும் அதிகம். அறிஞ்சு, தெரிஞ்சு, புரிஞ்சு, அடிபட்டு, புரிபட்டுத்தான் இந்த இடத்திற்கு வந்திருக்கேன். ‘திமிரு’ படத்தில் நிறைய காட்சிகளை இயக்கியிருக்கேன். இப்ப ஒருநாள் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட டைரக்டர் உட்கார வேண்டியிருந்தது.

அன்னைக்கே எங்களுக்கு ஹீரோ ஓபனிங் சீனை படமாக்க வேண்டியதாகிடுச்சு. ‘சார்... நீங்களே ஷூட் பண்ணிடுங்க’னு சுந்தர்.சி ஈஸியா சொல்லிட்டு போயிட்டார். அவருக்கு ஒவ்வொருத்தரின் ஆர்வமும் தெரியும். இன்னும் 10 வருஷம் கழிச்சு, நான் செஞ்ச படங்களின் பட்டியலைப் பார்க்கும்போது, அவர் கூட செய்த படங்கள் அதிகமா இருக்கணும். அதுதான் என் விருப்பம். ரிலீசுக்கு முன்னாடி லாபத்தை இதில் நான் அடைஞ்சதிலும் சுந்தர் சாருக்கு பெரிய இடமிருக்கு!’’

‘‘ ‘ஐ’, ‘என்னை அறிந்தால்’ வருமே... பயம்..?’’‘‘இனிமே தனியா எந்தப் படமும் வர முடியாது. நமக்கு மட்டுமேதான் இனி இடம்னு யாரும் நினைக்கவே முடியாது. அப்படி சலுகைகளையும் இனி எதிர்பார்க்கக் கூடாது. யார் முந்திக்கிறாங்க என்பது படத்தோட ரிசல்ட்டை வச்சுத்தான். வேற வழியில்ல. இனிமே போட்டி தான். ‘சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’னு சொல்வாங்களே. இனிமேல் படங்களும் அந்த வரிசையில் சேர்ந்துடும்!’’

-நா.கதிர்வேலன்