சமந்தா இட்லி!



புராண காலம் தொடங்கி இன்றுவரை பெண்கள் காலம் காலமாகப் பட்டு வருகிற அவதிகளை எழுத ஆரம்பித்துள்ள எழுத்தாளர் பூமணிக்கு சாகித்ய அகாடமி செங்கோல் அல்ல... தூண்டுகோலே!
- எஸ்.சுந்தரி, சேலம்.

ஒரு டி.வி தொகுப்பாளினியின் அழகில் மயங்கி செர்பிய கால்பந்து வீரர்களே மைதானத்தில் மட்டையான சம்பவம், செம கலகல. அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருப்பது நிஜம்தான் போல!
- ஜெ.வி.டேனியல், நாகை.

அறிவுமதியின் ‘மழைத்தும்பிகள்’ மனதை வசப்படுத்தியது என்றால் அதற்கான வண்ணப்படம் எங்களது கண்களை வசப்படுத்தியது!
- கவிஞர்.‘வானவில்’ மூர்த்தி, சென்னை-44.

‘வயாகரா’ வகையறா மாத்திரைகளுக்குப் பதிலாக, தாம்பத்யம் நீடிக்க தனக்குத்தானே செய்து கொள்ளும் உளவியல் ட்ரீட்மென்ட் அருமை! இது தெரியாமதானா கண்டபடி செலவு செய்யுது உலகம்?
- செ.வி.கலையரசன், தர்மபுரி.

நமக்கு சமந்தாவைப் பார்த்தால் ஆவல். அவருக்கு இட்லி, தோசையைப் பார்த்தால் ஆசையா? அப்போ இனி குஷ்பு இட்லியை சமந்தா இட்லி ஆக்குங்கப்பா!
- தனராஜ், சென்னை-5.

சினிமா குரூப் டான்ஸர்கள் அனைவரின் துயரத்தையும் நிதர்சன நிலையையும் ஒரு சோற்றுப் பதமாக விளக்கியது விக்னேஷின் கதை. புன்னகை மாறாமல் 80 முறை
ஆடி நம்மை மகிழ்விக்கும் அவர்களுக்கு சல்யூட்!
- நெ.கோபாலன், கடலூர்.

2020ம் ஆண்டு நம்ம நாடு எங்கேயோ போய்விடும், ஆகா ஓகோ என்றார்கள். ஆனால், எல்லாத் துறைகளிலும் பின்தங்கியிருக்கும் நம் உண்மை நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டன உங்கள் கட்டுரைகள். நன்றி!
- டி.கே.கோமதி விநாயகம், புதுச்சேரி.

வரும் புத்தாண்டில் நம் வி.ஐ.பிகள் எப்படியெல்லாம் உறுதிமொழி எடுப்பார்கள் என்ற கற்பனை பேஷ் பேஷ். 2015ம் ஆண்டில் அண்ணன் ஆல்தோட்ட பூபதிக்கு குசும்பு அதிக
மாகும் என்பது தெரிகிறது!
- ஆர்.சந்தீப், கோவை.

பாபனாசம் அசோக்ரமணியின் ‘சீஸன் சாரல்’, வருடம் தவறாமல் வந்து டிசம்பர் இசை மழை பொழிகிறது. சென்னையின் எல்லா சபாவுக்கும் நம்மை பல ‘தபா’ அழைத்துப் போய்விடுகிறார் மனிதர்!
- ஆர்.ருக்மணி, கும்பகோணம்.