பேசும் சித்திரங்கள்



தமிழ் ஸ்டுடியோ 40 அருண்

தொன்மையின் அவசியம்...
‘‘நியோ ரியலிசம் - எங்கள் கண்களை நாங்கள்
நேராகப் பார்த்து, சுய பரிசோதனை மூலம் எங்களை அறிந்து,
விமோசனத்தைப் பெறு வதற்கான முயற்சி’’
- டிசிகா

‘சர்ரியலிச இயக்கம்’ போல் தலைமையுடன் கூடிய அமைப்பாகவோ, கோட்பாடுகளுடனோ, நியோ ரியலிசம் அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த கால மிகையுணர்ச்சி கலந்த கற்பனைக் கதைகளைப் புறம் தள்ளிவிட்டு, கண்முன்னே நிகழ்காலத்தில் நடக்கும் கதைகளைச் சொல்வதும்,

செயற்கையான ஸ்டுடியோ அரங்குகள் தவிர்க்கப்பட்டு இயற்கையாக, கதை நடப்பதான இடங்களில் நடிகர்கள் அல்லாதோரை கதாபாத்திரங்களாக நடிக்க வைத்துத் திரைப்படங்களை உருவாக்குவதும்தான் நியோ ரியலிச பாணியின் அடிப்படை அம்சங்கள். இதன் மூலம், கதையின் யதார்த்த உணர்வையும், அதன் உண்மைத் தன்மையையும் அதிகரிக்கச் செய்ய முடியும். வாழ்க்கைக்கும் கலைக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவும் முடியும்.

தமிழில் வெகுஜனத் திரைப்படங்களை விடவும், குறும்படங்கள் நிறைய பரீட்சார்த்த முயற்சி களைச் செய்து பார்ப்பதற்கான களமாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த வகையான வணிக சமரசமில்லாத செயல்பாட்டுத் தன்மைதான் கலையை, அதன் இன்னொரு பரிமாணத்தை பார்வையாளனுக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் எவ்வித வணிக நோக்கமும் இன்றி, புதிய நடிகர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் குறும்படம்தான் ‘ரெட்டைத் தெரு’.

எழுத்தாளர் இரா.முருகனின் நாவலான ‘ரெட்டைத் தெரு’வின் கடைசி ஒரு அத்தியாயத்தை மட்டும் குறும்படமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். மாத இதழின் பொங்கல் மலருக்காக, பொங்கல் பண்டிகை பற்றி ஒரு கட்டுரை எழுதித் தரச் சொல்லி எழுத்தாளர் ஒருவரைக் கேட்டுக்கொள்கிறார்கள், மாத இதழின் நிர்வாகிகள். பொங்கல் பண்டிகை கிராமங்களில் எவ்வாறு ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது என்பதை விவரிக்கத் தொடங்குகிறது எழுத்தாளரின் பேனா. அது அப்படியே கேமராவினால் படம் பிடிக்கப்படுகிறது.

தன்னுடைய சிறு வயதில், பொங்கல் பண்டிகையின்போது கிராமம் எப்படி களை கட்டும் என்று விவரிக்கத் தொடங்குகிறார் எழுத்தாளர். சிறுவயதில் அவரது நண்பர்களுடன் பொங்கல் பண்டிகையின்போது விளையாடிய நினைவுகள், பொங்கலுக்கு முன்பான போகிப் பண்டிகை, பொங்கலுக்கு பள்ளிக்கூடத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்களுக்கு ஏற்படும் கொண்டாட்டம், பொங்கலுக்கான பொருட்களை வாங்க உருவாகும் சந்தை என கிராமமே பொங்கல் பண்டிகையைக் கொண்டாட ஆயத்தமாகிறது.

பொங்கல் நாளன்று ஊரே கூடி பொங்கல் வைத்து, ‘பொங்கலோ பொங்கல்’ என்று உரக்கக் கூறி, பொங்கலை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்கிறார்கள். மாடுகளுக்கான மாட்டுப்பொங்கல், மாடுகளைப் போற்றும் சடங்குகள், பொங்கல் பண்டிகைக்கான பாடல் என கிராமமே கூடி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடித் தீர்க்கிறது.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்ததும், பொங்கல் பண்டிகைக்காக வாங்கும் கரும்பைக் கூட துண்டு துண்டாக அறுத்து பையில் போட்டு வருவதும், மின்சார அடுப்பில் கொஞ்சமாக பொங்கல் வைத்து வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடுவதுமாக ஒரு கொண்டாட்டம் சுருங்கி விடுகிறது. கிராமத்தில் இருந்து நகரத்திற்குக் குடிபெயரும் மனிதர்களின் மனநிலையை மட்டும் இந்தக் குறும்படம் பிரதிபலிக்கவில்லை. மாறாக, வளர்ந்துவரும் நாடுகள் மீது வல்லரசுகள் தொடுக்கும் பண்பாட்டுப் போருக்கு எதிரான கலகக் குரலாகவும் வெடிக்கிறது.

1920களில் ஐரோப்பிய நாடுகளில் - குறிப்பாக ஜெர்மனியில் - பிரபலமாகியிருந்த எக்ஸ்பிரஷனிச ஓவியப் பாணியின் தாக்கம், அந்நாட்டுத் திரைப்படங்களிலும் பிரதிபலித்தது. முதல் உலகப்போரில் ஜெர்மனியின் படுதோல்விக்குப் பிறகு அங்கு நிலவிய வறுமை, பாதுகாப்பின்மை, விலைவாசி ஏற்றம் போன்றவை மக்களின் மனநிலையை வெகுவாகப் பாதித்திருந்த நேரம். இந்த கறுப்புப் பக்கங்களை அப்படியே எக்ஸ்பிரஷனிச பாணியில் திரைப்படமாகப் பதிவு செய்திருப்பார்கள்.

இதே பாணியைத்தான் தமிழில் ‘ரெட்டைத் தெரு’ போன்ற குறும்படங்களும் பின்பற்றி வருகின்றன. உலகமயமாக்கல், மூன்றாம் உலக நாடுகள் மீது தொடுக்கப்படும் கலாசாரப் பண்பாட்டுப் போர் போன்றவற்றால் இங்கே நிகழும் கலாசார வெறுமையை இதுபோன்ற குறும்படங்கள் உடைத்தெறிகின்றன.

பிரான்சில் உருவான ‘தி டிரெயின்’ திரைப்படம் போல இந்தக் குறும்படமும் தன்னுடைய பாரம்பரியத்தை மீட்டெடுக்க, அல்லது பாதுகாக்க விழைகிறது. கிராமங்கள், வளர்ந்து வரும் நாடுகளாகவும்... நகரங்கள், வல்லரசுகளின் கனவுகளை நிறைவேற்றும் கிராமங்களின் கல்லறையாகவுமே இந்தக் குறும்படத்தில் உருவகப்படுத்தப்படுகின்றன.

குறும்படத்தில் இதுபோன்ற உருவகமும் உள்ளடக்கமும் சிறப்பாக இருந்தாலும், எடுக்கப்பட்ட விதத்தில் சில தொழில்நுட்பக் குறைகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக படம் முழுக்க இசை இரைச்சலாக இரைந்துகொண்டே இருக்கிறது. சிறுவர்கள் கூடி, கும்மாளமாக போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அங்கே பறை போன்ற ஒரு இசைக்கருவியையும், உடுக்கையையும் இசைப்பதே மரபு. ஆனால் இந்தக் குறும்படத்தில் அந்த இடத்திலும் மேற்கத்திய இசை இரைந்து கொண்டே இருக்கிறது.

‘குண்டாக இருப்பதே பெரும்பாவம்’ என்பதைத்தான் இந்த நாடும், நாட்டின் எல்லா ஊடகங்களும் தொடர்ச்சியாக உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதிலும் சிறுவர்களில் கூட குண்டாக இருப்பவன் நகைச்சுவைக்காரனாகவும், ஒல்லியாக இருக்கும் சிறுவன் கதாநாயகன் போலவும் சித்தரிக்கப்படுவது கற்பிதங்களின் கொடுமைதான்.

சீட்டுக் கிழிக்கும் இடத்தில் நடக்கும் சம்பவங்கள், பொங்கல் வாழ்த்து அட்டையைத் திருடுவது போன்றவற்றை குண்டாக இருப்பவன்தான் செய்ய வேண்டும் என்கிற தமிழ் சினிமாவின் அத்தனை விதிகளையும் இந்தக் குறும்படமும் கடைப்பிடித்திருக்கிறது.

‘குண்டாக இருப்பது ஒரு சாபக்கேடு’ என்பது மாதிரியான எண்ணங்களை இதுபோன்ற குறும்பட இயக்குனர்களே உடைத்தெறிய வேண்டும். குறும்படத்தின் இறுதியில் கிராமத்திற்குச் செல்லும் எழுத்தாளருக்கு சிறுவர்கள் ‘ஹேப்பி பொங்கல்’ என்று சொல்கிறார்கள். மிக அழகான இந்த முரணில் குறும்படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர்.

படம்: ரெட்டைத் தெரு இயக்கம்: கே.சரவணக்குமார் நேரம்: 19.55 நிமிடங்கள் ஒளிப்பதிவு: வி.பி.சிவானந்தம் இசை: இரா.ப்ரபாகர் படத்தொகுப்பு: காரல் மார்க்ஸ் கதை: இரா.முருகன்

பொங்கல் பண்டிகைக்காக வாங்கும் கரும்பைக் கூட துண்டு துண்டாக அறுத்து பையில் போட்டு வருவதும், மின்சார அடுப்பில் கொஞ்சமாக பொங்கல் வைத்து வீட்டில் இருப்பவர்கள் மட்டும் சாப்பிடுவதுமாக ஒரு கொண்டாட்டம் சுருங்கி விடுகிறது.

மதுரை மாவட்டம் பரவை கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமாரின் தந்தை தீவிர சிவாஜியின் ரசிகராக இருந்திருக்கிறார். ‘‘அப்பாவின் இந்த சினிமா ஆர்வமே தன்னையும் சினிமா பக்கம் இழுத்து வந்தது’’ என்கிறார். தீவிர இலக்கிய வாசிப்பு ஆர்வம் உடைய சரவணக்குமார், தான் வாசித்த இரா.முருகன் நாவலின் இறுதி அத்தியாயத்தை குறும்படமாக எடுக்க நினைத்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகையின் கொண்டாட்டங்களை தத்ரூபமாகக் கொண்டு வர, கிட்டத்தட்ட நான்கு மாவட்டங்களில் இந்தக் குறும்படத்தைப் படமாக்கியிருக்கிறார். இவருடைய நல விரும்பிகளில் ஒருவரான மருத்துவர் ஹேமமாலினி, ‘ரெட்டைத் தெரு’ குறும்படத்தை தயாரித்திருக்கிறார். நெய்வேலி உள்ளிட்ட பல்வேறு குறும்பட விழாக்களில் விருதுகளைப் பெற்றிருக்கிறது இந்தக் குறும்படம். தற்போது இயக்குனர் ஜனநாதனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிகிறார் சரவணக்குமார்.

(நிறைந்தது)
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி