மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

அன்பாக இருப்பது என்பதும் அன்பாக இருக்கிறேன் என்பதும் வெறும் வார்த்தைகளால் சாத்தியமில்லை. அன்பாக இருப்பது போன்று நீண்ட நாட்கள் நடிக்கக்கூட முடியாது. உண்மையில் அன்பாக இருப்பது என்பதே தவம்தான். அதில் நிறைய சிரமங்களும் இருக்கவே செய்கின்றன. அன்பாக இருத்தலை வாழ்க்கையாக்கிக் கொண்டால் மனிதன் மட்டுமல்ல; மிருகங்கள் கூட விளையாட்டுத் தோழனாகிவிடும்!

அந்த சிங்கம் கடுங்கோபத்தில் இருந்தது. அதன் அடர்ந்த பிடரி ரோமங்களின் சிலிர்ப்பு... அது எத்தனை கோபமாய் இருக்கிறது என்பதைப் பறைசாற்றியது. அதன் காதுகள் விடைத்திருந்தன. கண்கள் நெருப்புத்துண்டுகளாய் மின்ன, அதனால் ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை. முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்தது. ‘இது என் இடம் இல்லை’ என்பது போன்ற அவஸ்தை அதன் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.

‘நான் சில நாட்களுக்கு முன்பு அந்த அடர்ந்த காட்டின் மலை முகட்டில் நின்று கொண்டிருந்தேன். பரந்து விரிந்த அந்த வனத்தின் அரசன் நான். என் நான்கு கால்களையும் முன்னும் பின்னுமாய் வைத்து வானத்தைப் பார்த்து கர்ஜனை செய்து முடித்தவுடன் அந்த வனத்தில் ஒரு வண்டுகூட எதிர்க் குரல் எழுப்ப அஞ்சும்.

என் கர்ஜனை எட்டுத்திக்கிலும் பட்டு எதிரொலித்து அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். அந்த மிகப்பெரிய காட்டின் விஸ்தீரணமே எனக்காக எல்லையாக நீண்டு விரிந்து கிடந்தது. விதி... இன்று இந்தச் சின்னக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிறேன்’ என்பதான கோபம் நிறைந்த சோக உணர்வு அந்தப் பூங்காவெங்கும் அலை அலையாய் பரவிக் கிடந்தது. 

பாரிஸ் நகரின் மிக முக்கிய பகுதியில் இருந்த அந்த பூங்காவிற்குள் நுழைந்த மிராவை அந்தச் சோக உணர்வு தாக்கியது. யாருடைய வேதனை இது எனக் கூர்ந்து கவனித்தாள். பூங்காவில் இருந்த ஏராளமான பறவைகள் நிசப்தத்தை விழுங்கிக் கொண்டிருந்தன.

மிரா தன் கவனத்தைக் கூர்மையாக்கி கவனிக்க, அது சிங்கத்தின் வருத்தம் எனப் புரிந்தது.மிரா அந்த சிங்கம் அடைபட்டுக் கிடந்த கூண்டின் அருகே சென்றாள். சிங்கம் தன் தலையைத் திருப்பி மிராவைப் பார்த்தது. ‘என் தனிமையை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என்பதாய் கவனித்துவிட்டு அலட்சியமாக ஒதுங்கி நின்றுகொண்டது.

உலகில் ஒடுக்கப்பட்டது அனைத்தும் இப்படித்தான். ஒன்று இயலாமையால் சினம் கொண்டு பொங்கி எழும். ‘என் உரிமையை... என் சுதந்திரத்தை எனக்குத் திருப்பிக் கொடு... இல்லை, எடுத்துக் கொள்ள எதுவும் செய்வேன்’ என்று வெடிக்கும். அதற்கு இப்போது வாய்ப்பே இல்லை என அறிந்தால் கிளர்ந்து வரும் கோபத்தை எல்லாம் அடக்கிக்கொண்டு ஓரமாய் போய்
நின்றுவிடும்.

‘எனக்கான தருணம் வரு’மென காத்துக் கிடக்கும். யாருடனும் முகம் கொடுத்துப் பேச விரும்பாது புறக்கணிக்கும். கூண்டில் அடைபட்டுக் கிடக்கும் சிங்கத்தின் நினைவுகளில் எல்லாம், அது விட்டுப் பிரிந்த காட்டின் நினைவு நின்று வதைக்கும் என்பதை மிரா உணர்ந்தே இருந்தாள்.

மிரா, சிங்கத்துடன் பேசத் தொடங்கினாள்... ‘‘ஓ சிங்கமே! நீ எத்தனை கம்பீரமாய் இருக்கிறாய். உன் கம்பீரம்தானே அழகு! அதுதானே மனிதர்களை எல்லாம் உன் மீது ஆர்வம் கொள்ள வைத்திருக்கிறது. உன் கம்பீரம்தானே வலிமை. அதுதானே உன்னை காட்டின் அரசனாய் பிரகடனப்படுத்தி இருக்கிறது. நீ காட்டின் அரசன்தான்.

ஆனால், இன்று உன்னால் இந்தச் சமூகம் விலங்குகளைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறது. இந்தப் பூங்காவுக்கு வரும் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் உன் ஆகிருதி கண்டு சிலிர்க்கப் போகிறார்கள். உன்னைக் காட்டில் சந்திப்பது சாத்தியமே இல்லாத ஒன்று. உன்னை அருகில் இருந்து ரசிக்கவே நாங்கள் எல்லாம் இங்கு வந்திருக்கிறோம். இது பரஸ்பர உதவி.

நீ ஏன் வேதனையோடு இருக்கிறாய்? சர்வ சுதந்திரமாக காட்டில் திரிந்த நீ இந்த கூண்டில் அடைபட்டுக் கிடப்பது வேதனையாகத்தான் இருக்கும் என்பது எனக்குப் புரிகிறது. இங்கு நீ இருக்க வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடத்திலும் நீதான் அரசன். உன் நேர்த்திதான் வசீகரம்.

உன்னை அரசனாகவே நாங்கள் பார்க்கிறோம். தயவுசெய்து கோபத்தை விடுத்து உன்னை கம்பீரமாய் காட்டு. இங்கிருக்கும் இந்த சூழலை ஏற்கப் பழகு. உன் மீது குழந்தைகளான நாங்கள் எல்லாம் மிகுந்த அன்போடு இருக்கிறாம்’’ என மிரா தன் அன்பு சிந்தும் குரலால் பேசப் பேச சிங்கம் அமைதியானது.

தன்னைப் புரிந்து கொண்டு, சிறையில் இருந்தாலும் தன் கம்பீரத்தை விரும்பும் ஒரு ஜீவன் இருக்கிறதே... என் உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு உள்ளம் இருக்கிறதே என அது நினைத்தது போலும். அடுத்து அந்த சிங்கம் என்ன செய்தது என்பதை மிராவே சொல்கிறாள் கேளுங்கள்... ‘‘நான் பேசுவதை அந்த சிங்கம் தன் காதுகளைத் திருப்பி கவனித்தது. பின் மெதுவாக என் பக்கம் திரும்பி என்னைப் பார்த்தது.

மெல்ல தன் கழுத்தை என் பக்கம் நீட்டியது. கொஞ்ச நேரம் கழித்து காலை என் பக்கம் கொண்டு வந்தது. கடைசியாக என் பக்கம் வந்து தன் முகத்தை கம்பிகளின் மீது வைத்துக் கொண்டு ‘சரி’ என்பதாய் உணர்வு பூர்வமாக என்னுடன் உறவாடியது.

அதன் அசைவில் நான் உனது சிநேகமுள்ள சிங்கம் எனச் சொல்வது போல இருந்தது.’’ அதன் பிறகு அந்தச் சிங்கம் அனைவருக்கும் தன் கம்பீர தரிசனம் கொடுத்து நிறைவாக வாழ்ந்தது எனச் சொல்லவும் வேண்டுமா!

மிரா இப்படி சகல ஜீவராசிகளின் மீதும் அன்போடு இருக்கக் காரணம், ‘இந்தப் பிரபஞ்சத்தின் தலைவன் இறைவன்’ என்கிற மகா சக்தியின் மீதான நம்பிக்கை. ‘இதைப் படைத்து பரிபாலனை செய்து வருபவன் அவனே. இறைவன்தான் நம் அனைவரையும் படைத்தான் என்கிறபோது நாம் அனைவரும் உறவுகளே.

ஒன்றிலிருந்து உருவான பலவான நமக்குள் பலமான ஒரு உறவு நிச்சயம் இருக்கத்தான் செய்யும். நமக்குள் உறவு இருக்கும் போது உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும்; பகிர்ந்துகொள்ள முடியும்’ என்கிற திடமான நம்பிக்கைதான் இந்த சகலத்தின் மீதும் அன்பு பெருகக் காரணம்.

சரியோ, தவறோ... ஒருவரை இன்னொருவர் துன்புறுத்துவதை மிரா விரும்புவதே இல்லை. எல்லாத் தவறுகளையுமே மன்னிக்கத் தக்கதாகவும் திருத்தத் தக்கதாகவுமே மிரா கருதினாள். அண்ணன் மத்தயோவுக்கு நட்பு வட்டம் அதிகம். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வராமல், நண்பர்களோடு விளையாடிவிட்டு காலதாமதமாக வீடு திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

மோரிஸ் பலமுறை கண்டித்திருக்கிறார். பல நாள் பிரம்பை எடுத்து விளாசியும் இருக்கிறார். ஓரிரண்டு நாள் சொன்ன பேச்சைக் கேட்கும் மத்தயோ, பிறகு மீண்டும் தன் வேலையைக் காட்டத் தொடங்குவான்.

அன்று வெகுநேரம் ஆகியும் மத்தயோ வீடு திரும்பவில்லை. கோபத்தின் உச்சத்தில் இருந்தார் மோரிஸ். சப்தமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த மத்தயோவை கொத்தாய்ப் பிடித்தார் மோரிஸ். அவனிடம் தாமதத்திற்கு காரணம்கூடக் கேட்காமல், பிரம்பை எடுத்து விளாச ஆரம்பித்தார்.தன் அண்ணன் திருந்தாமல் இப்படி தினமும் அடி வாங்குவது மிராவுக்கு மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தந்தையின் அடி, அவன் தவறுக்கு அதிகபட்ச தண்டனை என நினைத்தாள்.

தன் தந்தைக்கும் அண்ணனுக்கும் அருகே போய் நின்ற மிரா, ‘‘அப்பா... இப்போது நீங்கள் அண்ணனை அடிப்பதை நிறுத்தவில்லை என்றால் ஒரு நிமிடம் கூட நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன்’’ எனக் கோபமாய்ச் சொன்னாள்.

மோரிஸ் இதை எதிர்பார்க்கவே இல்லை. பிரம்பைத் தூக்கி எறிந்துவிட்டு உள்ளே சென்றார். வலியுடன் கலங்கும் கண்களோடு மத்தயோ மிராவைக் கடந்து உள்ளே சென்றான். அதன் பிறகு மோரிஸுக்கு அந்தப் பிரம்பை எடுக்கும் வாய்ப்பே வரவில்லை. மத்தயோ மாறியிருந்தான்!

உலகின் சகலத்தின் மீதும் கருணை ததும்ப இருந்த மிரா, ஒரு கதை எழுதினாள். உலகத்தையே உன்னதமாக்கப் போகிற ஒரு ஆன்மிக அரசி அவள் என்பதை அந்தக் கதை அன்றே உணர்த்தியது. அந்தக் கதையைப் படித்து அவளின் ஆசிரியர்கள் எல்லாம் வியந்து நின்றார்கள். அந்தக் கதை...

வரம் தரும் மலர் திருமண வரம் தரும் சம்பங்கி பூ!

திருமணம்தான் ஒரு மனிதனை வாழ்வின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறது. ஒவ்வொருவருக்கும் நல்ல கணவன்/ மனைவி அமைந்து திருமணம் சிறப்பாக நடந்தேற வேண்டும். ஆனால், பலபேருக்கு பல காரணங்களால் திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறதே... என்ன செய்வது?அது விதி.

விதியை மாற்றும் சக்தி நம் அரவிந்த அன்னைக்கு இருக்கிறது. ஆம், சம்பங்கி பூக்களை 5 தட்டுகளில் நிரப்பி அன்னையிடம் உளமார வேண்டிக் கொள்ளுங்கள். ‘நல்ல வாழ்க்கையை அமைத்துத் தா அம்மா’ என அன்னையின் திருமுகத்தைப் பார்த்துப் பேசுங்கள். உண்மையாக... உங்களுக்குத் தகுந்தவராக எதிர்த்தரப்பினரை அணுகுங்கள். தேவைக்கு மேல் ஆசைப் படாமல், பொய் சொல்லாமல் வரன் தேடுங்கள். அன்னை அருளால் நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடந்தேறும். நல்ல வாழ்க்கை அமையும்!

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்