லோக்கல் லோகநாதனும் மஃப்சல் மனோகரும் புத்தாண்டு சபதம் என்ன வேணாலும் எடுத்துட்டுப் போகட்டும். அது அவங்க இஷ்டம். ஆனா, முக்கியமானவங்க எடுக்குற சபதம் நம்ம எல்லாருக்குமே முக்கியம். ஸோ, 2015ல யார் யார் என்னென்ன உறுதிமொழி ஏற்கலாம்னு சில யோசனைகளை பொதுஜனங்க கிட்ட கேட்டோம்! அவங்க சொன்னது...
ஃபேனுக்காக படம் எடுக்கிறீங்களோ... லோனுக்காக படம் எடுக்குறீங்களோ... சீனுக்கு சீன் உழைக்கிறீங்களே தலைவா! உங்களை மாதிரி வருமா? ஆனா, பாருங்க... நீங்க ஆரோக்கியமா அட்டகாசமா சிங்கம் மாதிரி இருந்தப்பவே உங்ககிட்ட நாங்க பலூன் சண்டையை எல்லாம் எதிர்பார்க்கல.
‘பாட்ஷா’வுல ஏது தலைவா பலூன் ஃபைட்? உங்க விரல் அசைவுதானே ஹீரோயிசம்? பாராசூட்ல ஏறி ஃபைட் பண்ணணுமா நீங்க? கோட் சூட் போட்டு நடந்து வந்தா பத்தாது..? ‘இனிமே, பைக்கை போயிங் ஆக்கிப் பறக்காஸ் பண்ண மாட்டேன். பலூன்ல குதிச்சு டூப் மாஸ்டரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்’னு உடனே உறுதி எடுங்க தலைவா!
உங்க படத்தைப் பார்க்கணும்னா ரிலீஸ் வரைக்குமெல்லாம் வெயிட் பண்ண வேண்டியதில்லையாம். எட்டு பேர் சேர்ந்து ஒரு அமைப்பு ஆரம்பிச்சி, எதிர் டீக்கடையில நின்னு எதிர்ப்பு தெரிவிச்சாலே போதுமாம். உள்ள கூப்பிட்டு உருளைக்கிழங்கு சிப்ஸோட படம் போட்டுக் காட்டுவீங்களாம்.
பேசிக்கறாங்க ஃபீல்டுல! இதெல்லாம் உலக நாயகனுக்கு அழகா? ‘விருமாண்டி’யில தொடங்கி ‘விஸ்வரூபம்’ வரை ஏன் பிரச்னைன்னே தெரியாம பிரச்னை வர்றது உங்களுக்கு மட்டும்தான். சினிமாவுல உங்களுக்குத் தெரியாத வேலை இல்ல... அதுக்காக, ஆபரேட்டர் வேலையையும் நீங்களே பாக்கலாமா? அதுவும் ரிலீஸுக்கு முன்னாடி! இப்பவே முடிவு பண்ணுங்க... இனி சமாதானம்னா லவ்யூ... சர்ச்சைன்னா நோ ப்ரீவியூ!
முன்னாடியெல்லாம் போரடிச்சா நம்ம படத்தைப் போட்டுப் பார்த்துக்கிட்டிருந்தாங்க. இப்ப அவனவனும் போரடிச்சா நம்ம படத்தை வெளிவர விடாம பண்றான். ‘‘போஸ்டர்ல டேக்லைன் சரியில்ல... தியேட்டர்ல வாஸ்து சரியில்ல”ன்னு என்னென்னமோ காரணம் சொல்றான். ‘ராஜாதி ராஜா’ கதையதான் எடுக்கறோம்... ஆனாலும் ‘அது என் கதை ராஜா’ன்னு எவனோ கிளம்பறான். எதுக்கு பிரச்னைய போர்த்திக்கிட்டு தூங்கணும்?
தளபதின்னா கத்தியும் துப்பாக்கியும் இருக்க வேண்டியதுதான். ஆனா நமக்கு கட்டம் சரியில்லையே! அதனாலதான் சொல்றோம்... டைட்டில்ல வயலன்ட்டை விட்டு சைலன்ட் ஆகுற வழியப் பாருங்க. நாலு பேரு கண்ணை நாம உறுத்தக்கூடாது. ‘கத்தி’க்கு பதில் ‘சித்தி’... ‘துப்பாக்கி’க்கு பதில் ‘பழைய பாக்கி’... இப்படி சாத்வீகமா போவோம். அதுதான் 2015ல லட்சியம்!
டி.வி பார்க்கும்போது நீங்க சோப்பு விளம்பரத்துல கூட அடிக்கடி வர்றீங்க. ஆனா, நீங்க நடிச்ச படத்துலதான் வரவே மாட்டேங்கறீங்க. ‘அரண்மனை’யில பேயா வந்ததைத் தவிர மத்த எல்லாத்துலயும் ஹாயாதானே வந்துட்டுப் போறீங்க.
இன்னுமா கவர்ச்சிய மட்டும் நம்புறது? சரி, படத்துலதான் அப்படி... ஷூட்டிங்லயாவது கொஞ்சம் சூதனமா நடந்துக்கக் கூடாதா? திடீர்னு ஆர்யா மடியில குல்ஃபி மாதிரி நீங்க படுத்துத் தூங்குற செல்ஃபி வருது. மனசு தாங்கலை. இனிமேலாவது, வெயிட்டைக் குறைப்பேன்... வெயிட்டான கேரக்டர் பண்ணுவேன்... பிரேக்ல வெயிட் பண்ணும்போது கண்ணசர மாட்டேன்னு கண்டிஷனா இருங்க... ப்ளீஸ்!
போன வருஷம் ஃபுல்லா நெட்டுல ‘லிங்கா’வைவிட அதிகமா கலாய்க்கப்பட்டது லிங்குசாமி சார்... நீங்கதான். நீங்க உங்க டியூட்டில கரெக்டாதான் இருக்கீங்க. ஆனா, படம் வர்றதுக்கு முன்னாடி பில்டப்பா குடுக்குறீங்க பாருங்க ஒரு பேட்டி. அதுலதான் வருது பிரச்னை. ‘‘அவன் பெருநெருப்பு... விறுவிறுப்பு’’ன்னெல்லாம் பேசி நறநறப்பைக் கிளப்பாம,
இனிமே மௌன விரதம் இருக்கறதா சத்தியம் பண்ணுங்க. தயாரிக்கிறீங்களோ இயக்குறீங்களோ... ‘படம் எப்படி வந்திருக்கு’ன்னு யாராச்சும் கேட்டா, ‘‘படமா? யாரு பண்றா? எப்ப? எப்படி? என்னாச்சு?’’ன்னு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் எஃபெக்ட் கொடுங்க. எல்லாம் சரியா போகும்!
மும்பை ‘ஹைவே’லயே போயிட்டிருந்தா போதுமா சார். கொஞ்சம் கோடம்பாக்கம் 4வது தெருவுக்கும் வாங்க. நீங்க இசைப் புயல்தான்... அதுக்காக ஒரிஜினல் புயல் மாதிரியே ஆந்திரா பார்டர் தாண்டாம அடம் புடிக்கணுமா?
அட, நீங்க வந்தாலும் உங்க இசை வரமாட்டேங்குது சாமி. கிட்டப்பா பாடுற பாட்டுன்னு சொல்லி, பாகிஸ்தானி கஜல் தர்றீங்க. தமிழ் நாட்டு மீனவன் ஜமைக்கா ஸ்டைல்ல பிராவோ மாதிரி பாடுறான். ‘தாய் மண்ணே வணக்கம்’ தந்தவருக்கு இதெல்லாம் தகுமா? ‘இனிமே, கரஸ்பான்டன்ஸ் கோர்ஸ்ல டியூன் போட மாட்டேன்... வாட்ஸப்ல ரெக்கார்டிங் பண்ண மாட்டேன்’னு நீங்க வாக்கு கொடுக்கணும்!
நாப்பது ப்ளஸ்தானே தல ஆகுது? அதுக்குள்ள தலையில ஏன் சால்ட் அண்ட் பெப்பர்? நீங்க என்ன உங்க அப்பாவையா ஹீரோவாக்கிட்டீங்க? நீங்கதானே ஹீரோ! யூத்தா நடிக்கலாம் தல... தப்பில்ல. உங்க டிரெய்லரை குட்டிக் குழந்தை எல்லாம் கலாய்க்குது... கேக்கலையா? அப்புறமும் ஏன் பொறுமை?
சிட்டிசன்ல எவ்வளவு கெட்டப் போட்டீங்க... பிரியாணி போடுற நேரத்துல ஸ்ட்ராங்கா ஒரு மேக்கப் போட்டு இளமையாக முடியாதா? முடியணும் தல. இனிமே இந்தத் ‘தல’யில நாங்க பெப்பர மட்டும்தான் பார்க்கணும். படத்துக்கு படம் அது பெப் ஏத்தணும். அப்படி ஒரு உறுதிமொழி இப்ப உங்களுக்கு அத்தியாவசியம்!
- வால் பையன்